Search This Blog

11.8.09

இறைவன்தான் உணவைத் தருகிறானா?இது உண்மையா?


போஜன மந்திரமா?

மத்தியப் பிரதேச மாநிலம் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் இருக்கிறது. பொதுவாக பா.ஜ.க. எங்கு ஆட்சியை நடத்தினாலும், அம்மாநிலத்தை ஆர்.எஸ்.எஸின் சோதனை மய்யமாக மாற்றி விடுவார்கள்.

இந்த மாநிலத்தில்தான் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம், சேரலாம். அது சட்டப்-படி குற்றமல்ல என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டது. அது பெரும் பிரச்சினையாக வெடித்தது.

இப்பொழுது அதே மாநிலத்தில் வேறு ஒரு இந்துத்துவா தனத்தை அரங்கேற்றியுள்ளனர். பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சாப்பிடுவதற்குமுன் போஜன மந்திரத்தைச் சொல்லவேண்டுமாம்.
கல்வி அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு வியாக்யானம் வேறு. இது சமஸ்கிருதத்தில் இருந்தாலும் இதில் மதம் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கருதவேண்டிய அவசியம் இல்லையாம். இந்த மந்திரத்தில் நல்ல பொருள் இருக்கிறதாம்.

உணவைத் தந்து உடலைக் காக்க வைக்கும் இறைவா! இந்த உடல், மனம் மற்றும் செல்வத்தின்மூலம் எனது தாய்நாட்டைக் காக்கச் செய்வாய் என்பதுதான் இதன் பொருளாம்.

இதைவிட மாணவர்களுக்குச் சோம்பேறித்தனத்தை வேறு எந்த வகையில் திணிக்க முடியும்? இறைவன்தான் உணவைத் தருகிறானா?

இது உண்மையா? இறைவன் உணவைத் தந்தால் அரசாங்கம் எதற்கு?

இந்தியாவில் நான்கில் ஒரு குடிமகன் பசியால் வாடுகிறான் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றனவே அந்த நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு ஏன் அந்த இறைவன் உணவு அளிக்கவில்லை என்ற கேள்விக்கு பா.ஜ.க. அமைச்சர் பதில் கூறுவாரா?

மதச்சார்பற்ற ஓர் அரசில், கடவுள் நம்பிக்கை என்பது கட்டாயம்தானா? இந்து மதத்தில்கூட கடவுள் மறுப்பு எண்ணம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களின் நிலை என்னாவது?

சரஸ்வதி வந்தனா என்ற ஒன்றை மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்காலத்தில், முரளிமனோகர் ஜோஷி அறிமுகப்படுத்த முயன்றார். கல்வி அமைச்சர்கள் மாநாட்டிலேயே அதனை அறிமுகப்படுத்தி ஆழம் பார்த்தார். கடும் எதிர்ப்பு வெடிக்கவே அது பின்வாங்கப்பட்டது.

பல்கலைக்கழகங்களில் வேத கணிதம், வேத மந்திரங்கள், சோதிடம் என்றெல்லாம் பாடத் திட்டத்தில் புகுத்தப்பட்டன. சமஸ்கிருத ஆண்டு என்று கூறி ஓர் ஆண்டையே அறிவித்து கோடிக்கணக்கான மக்கள் பணத்தை வாரிக் கொட்டினார்கள். இவ்வளவுக்கும் சமஸ்கிருதம் பேசுவோர் இந்தியாவில் 0.01 சதவிகிதம்தான்.

இப்படிப்பட்ட அடிப்படை மதவாதக் கூட்டம் ஒன்று இந்தியாவில் இருப்பதை அனுமதிப்பதே மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எதிலும் மதவாதத்தைப் புகுத்தி, மக்களிடம் பேதாபேதத்தைத் திணித்து நாளும் ரண களத்தை உண்டாக்கும் அபாயகரமானவர்கள் இவர்கள்.

இதில் தொண்டர், தலைவர் என்கிற வேறுபாடுகள் எல்லாம் அவர்களிடத்தில் கிடையாது. 450 ஆண்டுகால வரலாறு படைத்த இசுலாமியர்களுக்கு உரிய ஒரு மசூதியை அயோத்தியில் அக்கட்சித் தலைவர்களின் தலைமையிலே, அவர்களின் வழிகாட்டுதலின்படிதானே இடித்துத் தரைமட்டமாக்கினார்களே!

இந்த வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள 49 பேர்களும் தொண்டர்கள் அல்லரே, அத்தனை பேரும் மேல்மட்டத் தலைவர்கள்தானே!


இவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு உத்தரவாதம் உண்டா?

சிறுபான்மை மக்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்றும், தங்கள் மதக் கடவுள்களை மறந்து இந்துக் கடவுள்களை வணங்கவேண்டும் என்றும் சொல்கிற அளவுக்கு உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கப்படலாமா?

வெளிப்படையாக மதச் சார்பின்மைக்கு எதிராக இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்பவர்களை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? ஏற்கெனவே அவர்கள் வெற்றி பெற்ற சில தொகுதிகளில் தேர்தல் நேரத்தின்போது மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்ற அடிப்படையில் அத்தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றமேகூட தீர்ப்பு வழங்கியது உண்டே!

சட்ட ரீதியாகவும் சரி, நேர்மையாகவும் சரி, பா.ஜ.க. தேர்தலில் நிற்கும் தகுதியற்றது என்று அறிவிக்கும் வாய்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு அதிகமாகவே உண்டு. இந்தக் கோணத்தில் சிந்தித்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள்.

---------------------"விடுதலை"தலையங்கம் 6-8-2009

0 comments: