Search This Blog

19.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - ஜிம்பாப்வே




ஜிம்பாப்வே

19ஆம் நுற்றாண்டில்தான் இப்பகுதிக்கு அய்ரோப்பியர்கள் வந்தனர். பிரிட்டிஷ் தென் ஆப்ரிக்கக் கம்பெனி எனும் சிசில்ரோட் என்பவருக்குச் சொந்தமான நிறுவனம் வர்த்தக உரிமையை 1889இல் பெற்றது. பிறகு குடியேற்ற நாடாக மாற்றி தென் ரொடிசியா எனப் பெயர் சூட்டியது. 1922இல் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு வசித்த வெள்ளையர்களின் தன்னாட்சி நடந்தது. 1960இல் விடுதலை உணர்ச்சி ஏற்பட்டு கறுப்பின மக்களின் இயக்கங்கள் செயல்படத் தொடங்கின. ஜிம்பாப்வே ஆப்ரிக்க மக்கள் யூனியன், ஜிம்பாப்வே ஆப்ரிக்க தேசிய யூனியன் என்ற பெயர்களில் அவை இரண்டும் இயங்கின.

1953இல் மத்திய ஆப்ரிக்கக் கூட்டரசு பிரிட்டனால் உருவாக்கப்பட்டது. ஜிம்பாப்வே, ஜாம்பியா, மாளவி ஆகிய மூன்றும் இதில் உறுப்பு நாடுகள். பத்து ஆண்டுகளில் கூட்டரசு கலைந்து ஜாம்பியாவும் மாளவியும் 1963இல் விடுதலை பெற்றன. 1964இல் ஜிம்பாப்வேயில் இயான் ஸ்மித் என்பவர் பிரதமர் ஆனார். 1965இல் ஜிம்பாப்வேயின் விடுதலைப் பிரகடனத்தை அவர் செய்தார். சிறுபான்மை வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாடு என்பதால் உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது- விடுதலை இயக்கங்கள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டனர். 1979இல் பிரிட்டனின் முயற்சியால் லண்டனில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவின்படி புதிய அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 1980இல் ஜிம்பாப்வே ஆப்ரிக்க தேசிய யூனியனைச் சேர்ந்த ராபர்ட் முகாபே தேர்தலில் வென்று பிரதமர் ஆனார். 18--.4.-1980இல் ஜிம்பாப்வே விடுதலை பெற்றது.

தென் ஆப்ரிக்காவுக்கும் ஜாம்பியாவுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பள்வு 3 லட்சத்து 90 ஆயிரத்து 580 சதுர கி.மீ. மக்கள் தொகை ஒரு கோடியே 23 லட்சம். பாதிக் கிறித்துவ மத நம்பிக்கைகளையும் பாதிப் பழங்கால நம்பிக்கைகளையும் கொண்ட சிங்க்ரடிக் எனும் மதத்தைப் பின்பற்றுவோர் 50 விழுக்காடு கிறித்துவர்கள் 25 விழுக்காடு. மீதிப் பேர் பழமைவாத நம்பிக்கை கொண்டவர்கள்.

ஆட்சி மொழியாக இங்கிலீஷ் உள்ளது. பல்வேறு இனக்குழு மொழிகளை மக்கள் பேசுகின்றனர். 91 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.

நாட்டின் குடியரசுத் தலைவராக ராபர்ட் முகாபே 1987 முதல் இருந்து வருகிறார். இவரே ஆட்சியின் தலைவரும்.

2004இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 80 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். அதே அளவிலான மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.

வெள்ளையர்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அந்தத் தொகுதிகளில் மட்டுமே அவர்கள் போட்டியிடலாம். நாட்டின் தலைநகர் ஹராரே சூரிய ஒளி நகரம் என அழைக்கப்படுகிறது.

---

கடல் கடந்த எல்லைப் பகுதிகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குடியேற்ற நாடுகள் என்கிற தன்மை மாற்றப்பட்டு வந்தாலும் பல தீவுகள் இன்னமும் பல நாடுகளுக்குச் சொந்தமாக உள்ளன. ஆஸ்திரேலியா, சீனா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே, நியூஜிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடல் கடந்த தீவுகளைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளன.

ஆஸ்திரேலியா 6 தீவுகள்

சீனா 2 தீவுகள் டென்மார்க் 2 தீவுகள்

பிரான்ஸ் 10 தீவுகள்

நெதர்லாண்டு 2 தீவுகள்

நியூஜிலாந்து 3 தீவுகள்

நார்வே 3 தீவுகள்

பிரிட்டன் 17 தீவுகள்

அமெரிக்கா 13 தீவுகள்



---------------------- நிறைவு..."விடுதலை" 18-8-2009

0 comments: