Search This Blog

4.8.09

பெரியார் பிறந்திருக்காவிட்டால்....




பதவி, புகழ், பெருமை தேவையில்லை துணிந்து
பொதுத்தொண்டாற்றியவர் தந்தை பெரியார்

குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்


தனக்கு பதவி தேவையில்லை புகழ் தேவையில்லை. பெருமை தேவையில்லை என்று சொல்லி துணிந்து பொதுக்காரியத்தில் இறங்கினார் தந்தை பெரியார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

குருவரெட்டியூரில் 18.7.2009 அன்று நடை-பெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவு பகலவன் தான் நமக்கு விழிகளைத் திறக்க வைத்த வித்தகர் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

தாய்மார்கள் முன்னின்று திறந்த சிலை

அது மட்டுமல்ல வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் யாராவது விவசாய வேலை கொடுத்தால் அந்த விவசாய வேலைகள் செய்யக் கூடாது என்று நமது தோழர்களைப் பார்த்து சொன்னார்கள்.

அதே ஊரில் இன்றைக்கு நம்முடைய பிரகலாதன் ஒரு செலவும் இல்லாமல் தந்தை பெரியார் சிலை திறப்புக்குக் காரணமாக இருந்திருக்கின்றார். எங்களுக்கெல்லாம் கூட ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் மற்ற ஊர்களில் எல்லாம் செலவு செய்து சிலை வைக்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு செலவும் இல்லை. இங்கே அமர்ந்திருக்கின்ற அய்யா அவர்கள் இடம் கொடுத்தார்கள். மற்றவர்கள் சிலை கொடுத்தார்கள்.

தாய்மார்கள் சகோதரிகள் முன்னாலே நின்று உழைப்பு, பொருள்களை எல்லாம் கொடுத்தார்கள். 1938ஆம் ஆண்டு எப்படித் தாய்மார்கள் முன்னின்று சென்னையிலே பெரியார் அவர்களுக்கு தந்தை பெரியார் என்று பட்டம் கொடுத்தார்களோ! அது போல நம்முடைய சகோதரிகளின் உழைப்பு தந்தை பெரியார் அவர்களுடைய சிலையை இந்த ஊரிலே திறப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. அருமையாகப் பயன்பட்டிருக்கின்றது. நல்ல கம்பீரமாக அய்யா அவர்களுடைய சிலை அமைந்திருக்கிறது.

திராவிடர் கழகம் பல முயற்சிகளை மேற்கொண்டது

ஏனென்றால் மக்கள் புரிந்து கொண்டார்கள். கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் அதோடு நிறுத்திவிடவில்லை. அதைப் புரிந்து கொள்ளாததால்தான் எங்கள் மீது ஆத்திரப்பட்டார்கள். சங்கடப்பட்டார்கள். ஆனால் இன்றைக்குப் புரிந்து கொண்டார்கள்.

இந்த ஊரிலே மேல்நிலைப்பள்ளியிலே ஆயிரம் பிள்ளைகளுக்கு மேல் படிக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் விசாரித்தபொழுது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் அது மேல்நிலைப் பள்ளியாக ஆக வேண்டும். இந்த ஊருக்கு அந்தப் பயன் கிடைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு முயற்சிகளை எல்லாம் திராவிடர் கழகம் மேற்கொண்டது.

அப்பொழுதுதான் உணர ஆரம்பித்தார்கள். கடவுளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் அடுத்து சொன்னார். மனிதனை நினை! என்று நமது பிள்ளைகள் படிக்க வேண்டும். நமது பிள்ளைகள் மேலே வர வேண்டும். சமுதாய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் அரும்பாடுபட்டார்கள்.

எனவே, அதன் காரணமாகத்தான் பக்குவப்படுத்தப்பட்ட ஒரு சூழல் இங்கே அருமையாக உருவாகியிருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் இதோ சிலையாக நிற்கிறார்களே எதற்காக?

நினைத்ததெல்லாம் நடப்பதற்காக அல்ல

ஏதோ காலையில் எழுந்தவுடன் இந்தச் சிலையை சுற்றி வந்து மனதிலே என்ன நினைக்கிறார்களோ, அவை எல்லாம், நினைத்தது எல்லாம் நடக்கும் என்பதற்காக நாங்கள் இங்கே வரவில்லை அல்லது குழந்தை இல்லாதவர்களுக்கெல்லாம் குழந்தை கிடைக்கும். சுற்றி வாருங்கள் என்று சொல்லுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. அது மூடநம்பிக்கை.

தந்தை பெரியார் அவர்களுடைய சிலை என்பது ஒரு சரித்திரக் குறிப்பு. தந்தை பெரியார் அவர்களுடைய சிலை ஒவ்வொரு ஊரிலும் இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம் என்று சொன்னால் நமக்கு விழி திறந்த வித்தகர் அவர்.

நம் கண்களை திறந்து விழிகளை மூடிக்கொண்டார்

நம்முடைய கண்கள் திறந்த பிற்பாடுதான் அவர் கண்களை மூடிக்கொண்டார். பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றோம். நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் ஆற்றிய உரையை நாங்கள் நூலாகவே வெளியிட்டிருக்கின்றோம். பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்ற கேள்விக்கு மட்டும் நீங்கள் விடை காணுங்கள். நீங்கள் எந்தக் கட்சிக்காரராகக் கூட இருக்கலாம். எந்தக் கொள்கைகாரராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால்

ஆனால், தயவு செய்து நீங்கள் எண்ணிப் பாருங்கள். தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், நம்முடைய வேட்டிகள் முழங்காலுக்குக் கீழே வந்திருக்குமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்முடைய தோளிலே துண்டு இருக்க முடியுமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நம்முடைய பைகளிலே பேனா இருக்குமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். மாறாக அவருடைய கைகளிலே கோல் இருக்கும் ஆடு, மாடு ஓட்டுவதற்காக; வேறொன்றும் இல்லை. இதைத்தான் நம்மாள் செய்து கொண்டிருந்தான்.

இதைப்பற்றி கேட்டால் இது தான் எங்களுடைய தலைஎழுத்து என்று சொன்னான்.

உன் தலையில் அப்படி எழுதியது யார்?

நாம் பெரிய விஷயங்களுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாதுங்க. அது நமக்கு ஒத்துவராதுங்க, நமக்கு எது பொசுப்போ, அதைத்தான் செய்யனுங்க என்று சொல்லக் கூடிய அளவிற்கு மற்றவர்கள் இருந்தார்கள்.

தலைஎழுத்து, தலைஎழுத்து என்று சொன்ன நேரத்திலே தந்தை பெரியார்தான் கேட்டார். யார் உன் தலையில் எழுதியது? அவனுடைய தலைஎழுத்தையே நான் மாற்றி எழுதுகிறேன் என்று சொன்னவர்தான் தந்தை பெரியார்.

அந்தத் துணிச்சலை, சீலத்தை சிலையாக நின்றாரே தந்தை பெரியார் அவர்கள் தந்தது தான் மிக முக்கியமானது. எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி

இந்த மேடையைப் பாருங்கள் நிறைய பட்டதாரிகள் உட்காந்திருக்கின்றார்கள். அய்யா பிறக்கவில்லையென்றால் நாமெல்லாம் பட்டதாரியாக ஆகியிருக்க முடியுமா? செங்கோட்டையன் பொறியாளராக ஆகியிருக்க முடியுமா? நான் வழக்கறிஞராக ஆகியிருக்க முடியுமா? தமிழ்நாட்டில் சாலையில் வரும்பொழுது பார்த்தீர்களேயானால், எந்தப் பக்கம் திரும்பினாலும், ஏதாவது ஒரு பெரிய கட்டடத்தைப் பார்த்தால், ஒன்று அது எஞ்சினியரிங் கல்லூரியாக இருக்கும், அல்லது மெட்ரிகுலேசன் பள்ளியாக இருக்கும், அல்லது மேல்நிலைப்பள்ளியாக இருக்கும், அல்லது பாலிடெக்னிக்காக இருக்கும்,

அல்லது உயர்நிலைப் பள்ளியாக இருக்கும். தமிழ்நாட்டில் நடைபெற்ற கல்விப் புரட்சி என்பது சாதாரணமல்ல.

நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அய்யா செய்த புரட்சி ஒவ்வொரு துறையிலேயும் சாதாரணமானதல்ல. பெண்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள் நாற்காலியிலே உட்கார்ந்திருக்கின்றார்கள். ஆண்கள் அந்தப் பக்கம் நின்று கொண்டிருக்கின்றார்கள். அதைப்பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா?

சமூக மாற்றம் எப்படி வந்தது?

இதோ ஒரு 100 வருடத்திற்கு முன்னாலே ஆண்கள் நிற்க பெண்கள் நாற்காலியில் உட்காரக் கூடிய துணிச்சல் யாருக்காவது இருக்குமா? முதலில் கிராமங்களில் செருப்புப் போட்டு நடக்கக் கூடிய உணர்வு நமக்கு உண்டா? இன்னமும் ஓரிரு இடங்களில் இருக்கிறது.

அதற்காக நாம் போராட வேண்டும். ஆனால் சமுதாய மாற்றம் எப்படி வந்தது? இரண்டு மூன்று உதாரணத்தைச் சொன்னாலே புரியும். தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை எடுப்பது என்பது நமது நன்றி உணர்ச்சியைக் காட்டுகின்ற நன்றிக் காணிக்கை என்பதை ஒவ்வொரு வரும் நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.

குருவரெட்டியூர் மக்கள் என்று சொன்னால் நன்றியை மறக்காத மக்கள் என்று நீங்கள் வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றீர்கள். இந்த சிலையை நீங்கள் ஒருமித்து உருவாக்கியிருக்கின்றீர்கள். சுயமரியாதை இயக்கத்தினாலே சமுதாயப் புரட்சி எப்படி வந்தது? என்று ஓர் ஆய்வாளர் எழுதிய புத்தகத்தை அண்மையில் நான் படித்தேன். நேற்று ஒரு நண்பர் கொடுத்தார். அதை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். பெரியாருடைய தொண்டு என்ன?

அதிலே ஒரு செய்தி. ரொம்ப மிக முக்கியமான செய்தி. சமுதாய மாற்றம் என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.

இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அதனால் திராவிடர் கழகத்தினுடைய மதிப்பென்ன? பெரியாருடைய தொண்டு என்ன? என்பது பலருக்குத் தெரியாது.

சாலையே இல்லாத பொழுது நாம் நடந்து வந்தோம். பிறகு கட்டை வண்டி, குதிரை வண்டி. அதற்குப் பிறகு அங்கு தார்சாலை வந்தது. அதற்குப் பிறகு சிமென்ட் சாலை வந்தது என்பதை எல்லாம் பார்த்தவர்-களுக்குத்தான் சிமென்ட் சாலையினுடைய அருமை என்ன என்பது புரியும்.

ஆனால் சிமென்ட் சாலை போட்ட பிறகு பிறந்த இளைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன தெரியும்? எப்பொழுதும் போலவே சிமென்ட் சாலை இருக்கிறது போலிருக்கிறது என்று தான் நினைப்பார்கள்?

சமுதாயப் புரட்சி என்பது

தந்தை பெரியார் அவர்கள் செய்த சமுதாயப் புரட்சி எப்படிப்பட்டது? அரசியல் புரட்சிக்கு ஆதரவு நிறைய இருந்தது. ஏனென்றால் ஆளுங்கட்சியை எதிர்க்கிற எதிர்கட்சிக்குத் தான் செல்வாக்கு வரும். அரசியலில் ஒரு சாரார் ஒரு கட்சியை ஆதரிப்பார்கள்; எதிர்ப்பார்கள். இந்த உணர்வுகள் எல்லாம் தானாக வரும் பல காரணங்களாலே. அதே மாதிரி பொருளாதாரத்தில் ஏழை, பணக்காரன் என்று சொல்லும்பொழுது ஏழையாக இருக்கிறவன் பணக்காரனாகிறான். பணக்காரனாக இருக்கிறவன் ஏழையாக ஆகிறான். ஆனால் இந்த இரண்டை விடக் கொடுமையானது எது?

எளிதில் மற்றவர்கள் நினைக்க முடியாதது எது என்று சொன்னால் சமுதாயப் புரட்சி. அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் போக அஞ்சிய, தவறிய இடத்திலேதான் தந்தை பெரியார் போனார்.

மற்றவர்கள் பயந்த இடத்தில் துணிந்தார்

பெரியாருடைய சிறப்பு என்ன? மற்றவர்கள் கால் வைக்கப் பயந்த இடம் இருக்கிறது பாருங்கள் அந்த இடத்தில் துணிந்து இறங்கினார். அப்படித் துணிந்து இறங்கும் பொழுது ஒரு முடிவோடு இறங்கினார். எனக்குப் பதவி தேவை-யில்லை; எனக்குப் புகழ் தேவையில்லை; எனக்குப் பெருமை தேவையில்லை; பட்டங்கள் எனக்குத் தேவையில்லை. எனக்கு சமுதாய மாற்றம் தேவை என்று இறங்கினார்.

-------------------தொடரும்...."விடுதலை" 4-8-2009

4 comments:

hayyram said...

முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்.
(திராவிடன் 05-08-1929)

இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:-

தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார்.
(குடியரசு 20-10-1935)

hayyram said...

அம்பேத்கருக்கு அறிவுரை கூறிய ஈ.வே. ரா!

தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம்-அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’ என்று கூறுகிறார்.
(குடியரசு 20-12-1935)

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார்.
(குடியரசு 31-05-1936)

ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்பது தெளிவாகின்றது. ஆனால் இவ்வளவு உறுதியாக, சபதம் ஏற்றிருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தனது கடைசி காலத்தில் மதம் மாறாமல் இந்துவாகவே இறந்தார்?

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியமா?

அம்பேத்கருக்கு அறிவுரை கூறியதுதான்.

அதாவது அம்பேத்கர் கொண்டுவந்த தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று சொன்னதுதான். ஆனால் அம்பேத்கர் தான் இந்துவாக இறக்கப்போவதில்லை என்று சொன்னவாறே பெளத்தத்தை தழுவி, தான் சொன்ன சொல்லை செயலில் காட்டினார். ஆனால் அம்பேத்கருக்கு அறிவுரை சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதை காற்றிலே பறக்கவிட்டுவிட்டார். உண்மையிலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத்தான் அம்பேத்கர் அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். இவர், தான் சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்குப் போகாதவராம்!

இதில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா?

அம்பேத்கருக்கு, வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரித்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியாலாக இருக்கும் என்று அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்!

சொல் ஒன்று-செயல் ஒன்று என்ற கட்டத்திற்கே அய்யா போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அப்படியானால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சொன்ன கட்டத்திலிருந்து இந்துவாகவே இறந்தார் என்ற கட்டத்திற்கு சென்றது ஏன்? இதுதான் சொல்லும் செயலும் ஒன்று என்ற கட்டமா? இதை வீரமணிதான் விளக்கவேண்டும்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்று நாம் சொன்னால்-உடனே ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துமதத்தை எதிர்த்தவர். நாத்திகர்களுக்கு மதம் இல்லை. அவர் மதம் மாறவில்லையென்றாலும் அவரை இந்து என்று சொல்லிவிடமுடியாது. ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாத்திகவாதியாதலால் அவர் இறக்கும்போது நாத்திகவாதிதான். இந்து அல்ல என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லிவிடுவார்கள்.

அறிவுரையை மறந்த ஈ.வே. ரா!

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்பதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்திருக்கிறார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து - இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்.
(விடுதலை 09-02-1950)

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதிலிருந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார். யாருக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரை கூறினாரோ, அவரே ஈ.வே. ராமசாமி நாயக்கரை அழைத்தபோது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற தன் சபதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இந்துவாகவே இருப்பேன் என்று சொன்னாரே ஏன்? அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற கட்டத்திற்கு போகாதவரா?


தூ இதுவெல்லாம் ஒரு பிழைப்பு.

நம்பி said...

hayyram said...

// ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதிலிருந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார்./ யாருக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரை கூறினாரோ, அவரே ஈ.வே. ராமசாமி நாயக்கரை அழைத்தபோது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற தன் சபதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இந்துவாகவே இருப்பேன் என்று சொன்னாரே ஏன்? அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற கட்டத்திற்கு போகாதவரா?


தூ இதுவெல்லாம் ஒரு பிழைப்பு.
August 5, 2009 7:26 AM //

அப்பிடியின்னா என்ன ஊத்தை...? இந்து இறப்பு? கிறிஸ்தவ இறப்பு? இசுலாமிய இறப்பு? என்று தனித்தனி இறப்பு உண்டா? கொஞ்சம் சொல்லேன்?

ஊத்தையாக சாவது என்றால் என்ன? இதையும் சொல்லேன் பார்ப்போம்.