Search This Blog

5.8.09

ஜாதி, மூட நம்பிக்கை நோய்களுக்கு ஆளாகாதீர்!




சென்னையில் 200-க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவியர் கழகத்தில் இணைந்தனர்
மாணவச் செல்வங்கள் இருக்கவேண்டிய இடம்
திராவிடர் மாணவர் கழகமே!
மாணவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் உரை


கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் திராவிடர் மாணவர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் (பெரியார் திடல், சென்னை 3.8.2009)
மாணவர்கள் இருக்க வேண்டிய இடம் திராவிடர் மாணவர் கழகமே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

தமிழர் தலைவர் அறிவுரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் 3.8.2009 அன்று மாலை புதிதாக திராவிடர் மாணவர் கழகத்தில் இணைந்த மாணவர்களை வரவேற்று ஆற்றிய உரையில் கூறிய முக்கிய கருத்துகள் வருமாறு:

திராவிடர் மாணவர் கழகத்தின் வரலாறு என்பது நம்முடைய இனத்தின் முக்கிய வரலாறு. நம்மின மக்கள் பல்லாயிரம் ஆண்டுகாலமாக கல்வி கற்க முடியாத ஒரு நிலையை வர்ணாஸ்ரம தர்மம் ஏற்படுத்திய நிலையை உடைத்தெறிந்த சாதனை மாபெரும் இயக்கமான திராவிடர் இயக்கத்தையே சாரும்.

பல கல்லூரிகளிலிருந்து...

பல்வேறு கல்லூரிகளிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் இருபால் மாணவச் செல்வங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள். உங்களை வரவேற்பது எங்களுடைய கடமை.

உங்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது உங்களுடன் கலந்துறவாடும்பொழுது நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறோம்.

நல்ல வயலில் நல்ல நாற்றங்கால்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இங்கே இரு நூல்களை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். அவைகளை பாடத்திற்கும் மேலாகப் படித்து நீங்கள் உய்த்து உணர்ந்து அசை போட்டு அவைகளை செரிமானம் செய்துகொள்ள வேண்டும்.

உலகத்தில் எங்குமில்லா கொடுமை...!

உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் நடந்திராத கொடுமை இந்த நாட்டில்தான் நடந்தது. அதுதான் பிறவி பேதம் என்பது. பிறக்கும்பொழுதே ஒருவன் பார்ப்பனனாக உயர்ஜாதிக்காரரனாகப் பிறக்கிறான்.

இன்னொருவன் பிறக்கும்பொழுதே பறையனாக, பள்ளனாக, தாழ்ந்த ஜாதியாக, தீண்டத்தகாதவனாக பிறப்பதாகக் கூறுகிறார்கள்.

தந்தை பெரியார் பிறந்து இன்றைக்கு 130 ஆண்டுகள் ஆகின்றன. பல நூறு ஆண்டுகளாக நமக்குக் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. உழைக்கப் பிறந்தவர்கள் நாம் என்று ஆக்கினர். கல்வி கற்கப் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்ற நிலையை உருவாக்கினர்.

கம்யூனல் ஜி.ஓ. உரிமையை தந்தை பெரியார் அவர்கள் பெற்றுத் தந்த காரணத்தால்தான் நம்மவர்கள் இன்றைக்கு அதிகமாகப் படித்திருக்கின்றனர்.

தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் நாம் சட்டை போட முடியுமா? பேனா வைத்திருக்க முடியுமா? இடுப்பிலே வேட்டி கட்டியிருக்க முடியுமா? வீதிகளில் நடந்துதான் செல்ல முடியுமா?


பெரியார் திரைப்படத்தை நிறைய பேர் பார்த்ததாக இங்கு கைதூக்கினீர்கள், மகிழ்ச்சி!

ராஜாஜி பள்ளிகளை மூடினார்


ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தார். தந்தை பெரியார் அதை எதிர்த்து ஒழித்தார்.

ராஜகோபாலாச்சாரியார் 1938 ஆம் ஆண்டு முதல-மைச்சராக வந்த பொழுது 2500 கிராமப் பள்ளிகளை மூடினார். பிறகு இரண்டாவது முறையாக அவர் முதலமைச்சராக வந்தபொழுது 6000 ஆரம்பப் பள்ளிக்கூடங்களை மூடினார். 70 வயதுக்குமேல் உள்ளவர்களுக்குத்தான் இந்த வரலாறு தெரியும். அரை நேரம் நமது மாணவர்கள் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலை குலத் தொழிலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். சிரைப்பவன் மகன் சிரைக்கவேண்டும்; வெளுப்பவன் மகன் துணி வெளுக்கவேண்டும்.

இந்தக் கொடுமையான குலக்கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் எதிர்த்து ராஜாஜியை பதவியிலிருந்தே விரட்டினார்.

மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமக்கும் இழிநிலை எந்த நாட்டில் உண்டு?

யார் அதிகமாக உழைக்கிறானோ அவன் கீழ்ஜாதி! யார் உழைக்காமல் உண்டு கொழுக்கிறானோ அவன் மேல்ஜாதி!

1914 ஆம் ஆண்டு கல்வி நிலை


1914 ஆம் ஆண்டு நமது கல்வி நிலை என்ன? அன்றைக்கு சென்னை பல்கலைக்கழகம் மட்டும்தான் இருந்தது. இண்டர்மீடியட் தேர்வு எழுதிய பார்ப்பனர்கள் 1900 பேர். பார்ப்பனர்கள் 775 பேர் தேறினார்கள். பார்ப்பனரல்லாதவர்கள் 640 பேர் தேர்வு எழுதியதில் 240 பேர் தான் தேறினார்கள்.

பி.ஏ. படிப்பு 469 பேர் பார்ப்பனர்கள் தேர்வு எழுதினார்கள். 210 பார்ப்பனர்கள் தேறினார்கள்.

பார்ப்பனரல்லாதார் 133 பேர் தேர்வு எழுதினார்கள்; அதில் 60 பேர்தான் வெற்றி பெற்றார்கள்.

பி.எஸ்சி., படிப்பில் பார்ப்பனர்கள் தேர்வு எழுதியவர்கள் 442 பேர். தேர்வில் தேறிய பார்ப்பனர்கள் 159 பேர்.

பார்ப்பனரல்லாதார் 107 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் வெறும் 49 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.

எம்.ஏ. படிப்பில் 157 பார்ப்பனர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 67 பேர் வெற்றி பெற்றார்கள்.

பார்ப்பனரல்லாதார் 20 பேர் தேர்வு எழுதினார்கள், வெறும் 9 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.

அதேபோல, எல்.டி. படிப்பு, இன்றைக்கு பி.எட்., என்று சொல்கிறோமே, ஆசிரியர் படிப்பு_

அதற்கு 104 பேர் பார்ப்பனர்கள் தேர்வு எழுதினார்கள்; 95 பேர் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றார்கள்.

பார்ப்பனரல்லாதார் 11 பேர் தேர்வு எழுதினார்கள். 10 பேர் இதில் வெற்றி பெற்றார்கள்.

இதுதான் அன்றைய சமூக நிலை
.

கலைஞர் ஆட்சியில்
கல்லூரிகள் அதிகம்

இன்றைக்குக் கலைஞர் ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் 472 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 400_க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் உள்ளன. பொறியியல் கல்லூரியில் ஏராளமான இடங்கள் காலியாக இருக்கின்றன. இன்றைக்குச் சேர்ந்திட ஆள் இல்லை. கல்லூரிகள் அதிகமாக உருவானதுதான் காரணம்.

நம் பிள்ளைகளுக்குத் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து 24 ஆண்டுகளுக்கு முன்பாகவே திராவிடர் கழகம் தொடர்ந்து போராடியது. திராவிட முன்னேற்றக் கழகமும் போராடியது.

நம்மினத்துப் பிள்ளைகள் இன்றைக்கு அதிகமாகப் படித்து அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும்தான் காரணமாவார்கள்.

இருக்கவேண்டிய இடம் இதுதான்

எனவே, மாணவச் செல்வங்களாகிய நீங்கள் இருக்கவேண்டிய இடம் ஒன்று உண்டென்றால், அது திராவிட மாணவர்கள் கழகமே!

நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள் அல்ல; அடுத்த தலைமுறையைப்பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள்.

என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையைப் பெறுங்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்களால் எதிலும் வெற்றி பெற முடியாது. எல்லாம் அவன் செயல் என்று சொல்கின்றவர்கள் எதை ஆண்டவன் செயலுக்கு விட்டிருக்கின்றார்கள்?

முக்கோணம் போல்....

தன்மானம், தன்னம்பிக்கை, தன்னிறைவு இது மூன்றும் முக்கோணம் போன்றது. மாணவர்கள் உள்ளத்தில் இதை பதிந்துகொள்ளவேண்டும்.

மனிதநேயம், அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும்.

உங்களை ஆளாக்கிய பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு நன்றி காட்டுங்கள். பக்தி என்பது தனிச்சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. நமது ஏடுகளைப் படியுங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். ஜாதி, மூட நம்பிக்கை நோய்களுக்கு ஆளாகாதீர்!

தமிழீழம் மலர்ந்திருக்குமே!

நாம் தமிழன் என்ற உணர்வோடு இருக்கவேண்டும். தமிழன் மட்டும் ஒட்டுமொத்தமாக இன உணர்வோடு இருந்திருந்தால், ஈழத்திலே இந்நேரம் தமிழீழம் மலர்ந்திருக்கும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்

------------------"விடுதலை" 4-8-2009

0 comments: