Search This Blog
4.8.09
பெரியார் மீது திடீரென்று பாம்பு வீச்சு
எந்த ஊரில் கருப்புச் சட்டைக்காரர்கள் இருக்கக் கூடாது என்று சொன்னார்களோ
அதே ஊரில் பெரியாருக்கு ஊர் மக்கள் சிலை எடுத்து விழா கண்டனர் குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு
எந்த ஊரிலே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அதே ஊரிலே இன்றைக்குப் பெரியாருக்கு சிலை எழுப்பி மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
குருவரெட்டியூரில் 18.7.2009 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பெரியார் சிலையை குருவரெட்டியூரில் நிறுவி
நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய சிலையை இந்த குருவ
ரெட்டியூர் பகுதியிலே மிகச் சிறப்பாக நிறுவி ஒரு பெரிய வரலாற்றுச் சாதனை செய்துள்ள அத்துணை மக்களும் இதிலே ஈடுபாடு கொண்டிருக்கின்றார்கள்.
குருவரெட்டியூரில் இந்த ஊரைப் பொறுத்த வரையிலே சிலை அமைப்பதற்கு இடம் தந்த நம்முடைய தாயகம் அவர்கள் ஆனாலும் சரி, அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து, சிலைகளை அமைத்து மற்றும் பல்வேறு அருமையான நல்ல பணிகளை எல்லாம் அமைத்து நகரங்களிலே கூட இவ்வளவு கம்பீரமாக சிலை அமைக்கப்படவில்லை என்கிற அளவுக்கு இந்த ஊரில் சிறப்பாக சிலை அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஏற்பாட்டை எல்லாம் பார்த்து எல்லைஅற்ற பூரிப்பை அடைகிறேன் நான். அன்றைக்கு நான் வர முடியவில்லையே என்ற மனக்குறை தீர வேண்டும். நண்பர்களுக்கும் இருக்கின்ற மனக்குறை தீர வேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலே தேதியைக் கொடுத்து இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வந்திருக்கின்றேன். எங்களுடைய கழகம், எங்களுடைய குடும்பம் என்ற அளவிலே குடும்பத்து உறுப்பினர்களை எல்லாம் பார்க்கும்பொழுது, எல்லையற்ற மகிழ்ச்சியை மற்றொரு மகிழ்ச்சியாக போனஸ் மகிழ்ச்சியாக நான் பெறுகிறேன்.
எல்லாம் நம் சொந்தங்கள்
எப்பொழுதுமே குருவரெட்டியூர் பகுதிக்கு வருவதிலே எனக்கொரு தனி மகிழ்ச்சி. இங்கே இருக்கின்றவர்கள் நம்முடைய சொந்தங்கள் என்ற உணர்வோடு எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், எந்த ஜாதியினராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் ஒரு குல குரு என்று கருதக் கூடிய அளவிற்கு இந்த இனத்தின் தலைவர் என்று கருதக் கூடிய அளவுக்கு இந்த ஊர் பக்குவப்பட்டிருக்கிறது என்று நினைக்கின்ற பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியை நாங்கள் பெறுகின்றோம்.
இந்த குருவரெட்டியூர் பகுதிக்கு 1978லே வரும் பொழுது இன்றைக்குப் பெரிய வரவேற்பு எங்களுக்கு இருந்தது. அன்றைக்கும் வரவேற்பு இருந்தது.
அன்றைய வரவேற்பு இன்றைய வரவேற்பு
அன்றைய வரவேற்பிற்கும், இன்றைய வரவேற்பிற்கும் என்ன வேறுபாடு என்றால், எல்லா தோழர்களும் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
ஆனால், அன்றைக்கு வந்தபொழுது இவர்கள் கடவுள் இல்லை என்று சொல்லக்கூடியவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஊரே கெட்டுப் போகும். ஆகவே, இவர்களை உள்ளே விடக் கூடாது என்று கருதி அன்று நடைபெற்ற கூட்டத்திலே கற்கள் எல்லாம் விழுந்தன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதை நம்முடைய பிரகலாதன் அவர்களும்,நினைவூட்டினார்கள்.
எங்கே எதிர்ப்பு அதிகமாக இருக்கிறதோ அங்கேதான் எங்களுக்கு வேலை இயக்கத்திற்கு வேலை. அங்கேதான் கொள்கை வெற்றியடையக் கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பு ஏற்படும் என்பதை அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்து இன்று வரையிலே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கு இந்த குருவரெட்டியூர் சிலை திறப்பு ஓர் அருமையான மற்றொரு அண்மைக்கால எடுத்துக்காட்டு.
அப்பொழுது கார்கள் எல்லாம் கிடையாது
நான் பிறந்த கடலூரிலேயே தந்தை பெரியார் அவர்கள் 1944இல் பெருத்த மழை பெய்து கூட்டம் நடத்த முடியாமல் பாதி வரை அவர் பேசி முடித்து உடனடியாக ரயில் மூலம் சென்னை திரும்ப வேண்டிய சூழ்நிலை. அப்பொழுதெல்லாம் மகிழுந்து கார்கள் கிடையாது.
மழையின் காரணமாக பாதியிலே முடிக்கப்பட்ட பொதுக்கூட்டம். அய்யா அவர்களை ஆள் இழுக்கின்ற ரிக்ஷாவிலே நம்முடைய தோழர்கள் அமர வைத்து அழைத்து வருகின்றார்கள்.
கடுமையான மழையின் காரணமாக மின்சாரம் நின்று விட்டது. அப்பொழுது நானெல்லாம் சிறு பையன். ஒரு பத்து, பதினோறு வயதுள்ள பையனாக இருக்கின்றேன்.
திடீரென்று பாம்பு வீச்சு
அய்யா அவர்களை வியப்போடு பார்த்து அந்த ரிக்ஷாவுடன் நான் வந்து கொண்டிருக்கின்ற பொழுது என்ன நடந்தது?
ரிக்ஷாவில் வரும்பொழுது அய்யா மீது பாம்பை வீசினார்கள். எல்லோரும் அலறினார்கள்.
அய்யா அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்மீது அன்றைக்குப் பாம்பை வீசினார்கள். அப்படி வந்து கொண்டிருக்கின்ற பொழுது திடீரென்று ரிக்ஷாவைத் திருப்பச் சொன்னார்கள். எதற்குச் சொல்லுகிறார்கள் என்று நாங்கள் யாரும் கேட்கவில்லை.
ரிக்ஷா ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நின்றது. அய்யா அவர்கள் மறுபடியும் ரிக்ஷாவைத் திருப்பி ரயில்வே ஸ்டேனுக்கு ரிக்ஷாவை விடச் சொன்னார்கள்.
அய்யாவின் அடிச்சுவட்டில்
ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்து எல்லோரும் ரயிலுக்காக காத்திருந்தோம். அய்யா அவர்கள் கையில் எப்பொழுதும் ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். அந்தப் பெட்டியை அவர்கள் எடுத்து எல்லோரும் சுற்றி நின்று கொண்டிருக்கின்ற பொழுது எங்களிடத்திலே அய்யா அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். இன்றைக்கும் அது பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.
அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும், மற்ற பொது நிகழ்ச்சியிலும் நிறைய அதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம்.
அய்யா அவர்கள் சொன்னார்கள். நான் ரிக்ஷாவில் வரும் பொழுது ஓர் இடத்தில் திருப்பச் சொன்னேன் ஏன் என்று தெரியுமா? என்று தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள். அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் கேட்கவில்லை என்று தோழர்கள் சொன்னவுடன் அய்யா அவர்கள் சொன்னார்கள்.
ரிக்ஷாவில் வரும்பொழுது வருகிற வழி இருட்டாக இருந்ததால் தெரியாது. திடீரென்று என்மீது ஒரு செருப்பு ஒன்று விழுந்தது. யாரோ ஒருவர் என்மீது செருப்பை வீசினார்.
ஒரு செருப்பை என்னைக் குறிபார்த்து வீசியவர் இன்னொரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வார்? என்று நினைத்துப் பார்த்தேன். இன்னொரு செருப்பை வைத்துக் கொண்டு அவரும் திண்-டாடுவார். நம்மை நோக்கி வீசிய ஒரு செருப்பும் பயன்படாது.
எனவே, என்மீது வீசப்பட்ட ஒரு செருப்பை எடுத்து வைத்துக் கொண்ட நான் மீண்டும் ஒரு செருப்பை அந்த நபர் வீசியிருப்பார். அந்த செருப்பும் அதே இடத்தில் தான் கிடக்கும் ஆகவே அந்த ஒரு செருப்பை எடுக்கத்தான் ரிக்ஷாவைத் திருப்பச் சொன்னேன் என்று சொன்னார்.
இந்த இரண்டு செருப்பையும் எடுத்து நான் பத்திரமாக வைத்துக் கொண்டேன். இப்பொழுது அவருக்கும் தொல்லையில்லை. எனக்கும் இந்த இரண்டு செருப்பும் பயன்படும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
ஊர்வலத்தில் பெரியார் - கலைஞர்
1944லிலே எந்த இடத்திலே தந்தை பெரியார் அவர்கள் மீது செருப்பு வீசப்பட்டதோ அதே இடத்தில் மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1971ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக வந்தபொழுது அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சரானவுடனே 1972ஆம் ஆண்டு அய்யா தந்தை பெரியாரையும் அழைத்து கலைஞரையும் அழைத்து அந்த நகர் முழுவதும் இரண்டு பேரும் ஊர்வலமாக வந்து அந்த இடத்திலே நாங்கள் தந்தை பெரியாருக்கு சிலை வைத்தோம். திறந்தோம்.
சிலையின் கீழ் வரலாற்றுக் குறிப்பு
அந்தச் சிலையின் கீழ் வரலாற்றுக் குறிப்பு என்று போட்டிருப்பது என்னவென்று சொன்னால் இந்த ஊரிலேதான் இந்த இடத்திலேதான் தந்தை பெரியார் மீது இன்ன தேதி என்று அந்தத் தேதியைக் குறிப்பிட்டு செருப்பு வீசப்-பட்டது; பாம்புகள் வீசப்பட்டன. அதற்குப் பதிலாக இப்பொழுது உணர்ந்த கடலூர் மக்கள் அவருடைய தொண்டுக்கு நன்றி காட்டி, அதே இடத்திலே சிலை எழுப்புகிறார்கள் என்று வரலாற்றுக் குறிப்பு என்று நாங்கள் கல்வெட்டைப் போட்டிருக்கிறோம்.
இப்படி அய்யா அவர்களைப் பற்றி எவ்வளவோ செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
எங்கள்மீது கற்களை வீசினார்கள்
அதுமாதிரி நாங்கள் இந்த ஊருக்கு வந்தபொழுது எங்களை முதலிலே வரவேற்றது. எங்களைப் பற்றி புரியாமல் ஏதோ எதிரிகளைப் போல நினைத்துக் கொண்டு, எங்கள் மீது கற்களை வீசினார்கள். நாங்கள் அதற்காகச் சளைக்கவில்லை. நான் அன்றைக்கும் சொன்னேன். அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள்_பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பேசும்பொழுது, அவர் மீது கற்கள் வந்து விழுந்தன என்று சொன்னால், என்ன சொல்வார் என்று அன்றைக்கு நான் பேசியது இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது.
இதே ஊரிலே பெரியார் திடலிலே நான் பேசுகிறபொழுது சொன்னேன். ஒவ்வொரு கல்லும் எங்கள் மீது வீசப்படும் பொழுது அழகிரியே உரத்துப் பேசு, உரத்துப் பேசு என்று சொல்வதாகத் தான் பொருள் என்று நாங்கள் சொன்னோம்.
ஆகவே, அந்தக் கற்களை எல்லாம் கல்லறைக்குக் கட்டப் பயன்படுத்திக் கொள்வோம் என்று அழகிரி அவர்கள் சொல்வார்கள் என்று எடுத்துச் சொன்னேன்.
நாங்கள் இங்கே கூட்டம் முடித்துப் போய்விட்டோம். அதற்குப் பிறகு நம்முடைய தோழர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடியைக் கொடுத்தார்கள்_கடவுள் மறுப்பாளர்கள் என்பதற்காக யார் யார் கறுப்புச் சட்டைக்கார்கள்? யார் யார்? கூட்டம் போடுவதற்குக் காரணமாக இருந்தார்கள் என்பதை எல்லாம் வைத்துக் கொண்டு எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். 1978லே இது நடந்தது. இன்றைக்கு எண்ணிப் பாருங்கள்.
ஊரை விட்டே துரத்த
கருப்புச் சட்டைக்காரர்களை ஊரைவிட்டே துரத்த வேண்டும். இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது. இந்த ஊரில் அவர்கள் இருந்தால் இந்த ஊரே கெட்டுப் போகும். இந்த ஊரிலே மழை பெய்யாது; ஊரிலே வளம் இருக்காது; ஊர் வளராது என்று 1978க்குப் பிறகு நான் இன்றைக்குப் பார்க்கிறபொழுது ஒரு நகரத்திற்குப் போட்டி போடக் கூடிய அளவிற்கு இந்த நகரம் வளர்ந்துஇருக்கிறது.
பல துறைகளிலே இந்த நகரம் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றித்தான் புள்ளையண்ணன் சொல்லியிருக்கிறார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியை இங்கே கொண்டு வந்து இங்கு இருக்கிறவர்கள் படிக்கக் கூடிய வாய்ப்பையும் உருவாக்கப்படும்.
இங்கு தொலைதூரக்கல்வி
நிச்சயம் அந்த தொலைதூரக் கல்வி மய்யம் இந்த ஊரிலே அமையக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இங்கு இருக்கின்ற பிள்ளைகள் அங்கு சேராமலேயே பட்டதாரிகளாக, மேல்நிலை பட்டதாரிகளாக வளரக் கூடிய அளவிற்கு வரும். எளிமையாக கிராமத்துப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக நிச்சயமாக பல்கலைக்கழக துணைவேந்தருடன் கலந்து கொண்டு, எப்படிச் செய்ய முடியுமோ அச் செய்வோம்.
காரணம் என்னவென்றால், இந்த குருவரெட்டியூரை பெரியாருக்கு உகந்த நகராக, உறவு நகராக நாங்கள் கருதுகின்றோம் (கைதட்டல்).
இங்கேதான் எங்களுடைய சகோதரர்கள் இருக்கிறார்கள். எங்களுக்குள்ளே கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை. அனைத்து மக்களும் ஒத்துப் போகக் கூடியவர்கள்.
---------------தொடரும்......"விடுதலை" 3-8-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment