Search This Blog

4.8.09

மத, கடவுள் நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிப்பது சரியா?




பெற்றோர்களே தங்களது
மத, கடவுள் நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்


நாரிசெட்டி இன்னையா (மதநம்பிக்கைகளை ஏற்றுப் பின்பற்றுவதில் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தும், பகுத்தறிவு ஆய்வு மய்யத்தின் இந்தியப் பிரிவு தலைவரான அய்தராபாத்தைச் சேர்ந்த திரு நாரிசெட்டி இன்னையாவின் கோட்பாட்டைப் பற்றி முரண் பட்ட விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலின் மொழியாக்கம் இங்கே தரப் படுகிறது.)

அண்மையில் வெளியான உங்களின் மத, கடவுள் நம்பிக்கைகள் திணிக்கப்படுகின்றன என்ற நூலில் உள்ள குழந்தைகளின் உரிமைகளை மதம் எவ்வாறு நசுக்குகிறது என்ற உபதலைப்பில் வெளியாகி உள்ள கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதே. உங்கள் கூற்றை எவ்வாறு நியாயப்படுத்தப்போகிறீர்கள்?

குழந்தைகள் திருமணத்திற்கு தடை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மதங்கள் பற்றிய முத்திரைகளை குழந்தைகள் மீது குத்தப்படும்போது மட்டும் இத்தகைய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகளை பெற்றோர் தங்களது சொத்தாக பாவித்து, தங்களது நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணித்துவிடுகின்றனர். வளர்ந்த பின் ஒரு மதத்தை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்ற சுதந்திரம் குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில், பெற்றோர் தங்களின் மத, கடவுள் நம்பிக்கைகளைப் பற்றி குழந்தைகளிடம் திணிக்காமல் இருக்க வேண்டிய காலம் இது. குழந்தைகளாக இருக்கும் போது இவ்வாறு அவர்கள் மீது திணிக்கப்படுவது, இந்த விஷயத்தில் வளர்ந்த பின் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாகத் தேர்வு செய்வதற்கு இயலாதவர் களாக அவர்களை ஆக்கிவிடுகிறது.

குழந்தைகள் மீது மத, கடவுள் நம்பிக்கைகள் திணிக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்வது பற்றி அய்க்கிய நாடுகள் மாநாடு ஒன்று கூட்டப்பட வேண்டும் என்று ஏன் நீங்கள் கோருகிறீர்கள்?

1989 இல் அய்க்கிய நாடுகளின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட குழந்தைகளின் உரிமைப் பிரகடனம் இந்த விஷயத்தில் எதுவும் குறிப்பிடாமலேயே உள்ளது. பெண் குழந்தைகளின் உறுப்புகளை சிதைப்பது, போர்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் மன்ற மாநாடு கண்டிக்க முன்வந்தாலும், காலத்துக்கு ஒவ்வாத பழைமையான மத நம்பிக்கைகளை குழந்தைகளின் மனதில் விதைத்து அவற்றை தூய்மையற்றதாக்கும் குற்றத்தை மதம் செய்கிறது என்பதை மட்டும் கண்டிக்க ஏனோ தயங்குகிறது; கூச்சப்படுகிறது.

பெற்றோர்கள் கூறுவது எதையும் குழந்தைகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்கின்றனர். தாங்கள் வளர்ந்து இளைஞர்களாக ஆகும் வரை குழந்தைகளிடம் இந்தப் பழக்கம் நீடிக்கிறது. மூடநம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும் தலைவர்கள் ஒரு மோசமான எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள். சத்ய சாயி பாபாவின் கால்களைத் தொட்டு வணங்குவது சரியானதுதான் என்று குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் கருதியது வருந்தத்தக்கது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்ததை விட சாயிபாபாவின் கால்களைத் தொட்டு வணங்கியது மிகுந்த அவமானம் தருவதாகும் என்று நான் கருதுகிறேன். ஒரு பகுத்தறிவுவாதி நாத்திகராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

பகுத்தறிவுடன் சிந்திக்கும் ஒருவர் தான் ஒரு நாத்திகர் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவியல் மனப்பான்மை எதற்கும் ஆதாரத்தையும், சாட்சியையும் கேட்கிறது. கடவுள் என்ற கருத்து மதத் தலைவர்களிடமிருந்து உருவானது. கடவுள் இருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் பொறுப்பு அவர்களிடமே உள்ளது. அவ்வாறு அவர்களால் மெய்ப்பிக்க இயலாமல் போகும்போது, கடவுள் இருக்கிறார் என்ற முதலில் சொல்லப்பட்டது எவ்வாறு என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்கின்றனர். கடவுள் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் அழகான கதைகளாக வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் அவற்றுக்கான சான்றுகள் இல்லை. நாத்திகர் என்று தங்களை அழைத்துக் கொள்வதை விரும்பாத பலரையும் கூட அனைத்து அறிவியல் பூர்வமான பகுத்தறிவு நாத்திகத்துக்கே அழைத்துச் செல்கிறது.

வாஸ்து, பெங் சூயி, ஜோதிடம், பட்சி ஜோசியம் ஆகியவை போன்ற போலி அறிவியல்களின் புகழ் வளர்ந்து வருவதாகத் தோன்றுகிறதே. அறிவியல் அறிவு இந்த அளவுக்கு வளர்ந்துள்ள நிலையிலும், இவ்வாறு பகுத்தறிவு பலமற்றுப் போவதற்குக் காரணம் என்ன?

சிறுகுழந்தையாக இருக்கும்போதிலிருந்து பெற்றோரால் திணிக்கப்பட்ட மத, கடவுள் நம்பிக்கைகள் அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது என்பதுதான் இத்தகைய இன்றைய மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிப்படையான காரணமாகும். காரண காரியம், நியாயத்தைக் காண நாம் தவறும் போதும், உணர்ச்சி பூர்வமான பிரச்சினைகளை நாம் சந்திக்கும்போதும், நமது பலவீனமே, நாம் அறியாத, அனைத்தும் ஆற்றல் நிறைந்தது என்றும் கூறப்படும் ஏதோ ஒன்றை நம்பச் செய்ய வழி நடத்துகிறது. தன்னம்பிக்கை இல்லாமையும், காரணகாரிய நியாயங்களை சிந்திக்காமல் உணர்ச்சிக்கு இடம் கொடுப்பதும் கண்மூடித்தனமாக நம்பிக்கைகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதனால்தான் மாறுபட்ட அறிவியல் அல்லாத நடைமுறைகளிலும், மதச் சடங்குகளிலும் ஈடுபட நாம் இழுக்கப் படுகிறோம்.


------------ நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா- 29.7.2009 மொழியாக்கம்: த.க.பாலகிருட்டிணன் - "விடுதலை" 3-8-2009

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

கடவுள் இல்லை என்பதை நாம் திணிப்பதும் தவறுதானே! அவர்களாய் உணரும் வரை எதுவானாலும் காத்திருப்பது நல்லதாக படுகின்றது.

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்பதை இங்கு யாரும் திணிப்பதாகத் தெரிய வில்லை. அப்படித் (எதையும்) திணித்தால் தவறுதான்.

எங்கள் வீட்டில் கடவுள், கடவுளச்சி படங்களோ எதுவும் இல்லை. ஆனால் பள்ளியில் இருக்கும் படங்களைப் பார்த்து விட்டு மற்ற தோழிகள் கூறுவதைக் கேட்டு விட்டு எங்களிடம் வினா தொடுக்கும் போது விளக்கம் அளிக்கிறோமே தவிர திணிப்பதில்லை.

நன்றி ஞானசேகரன்

அசுரன் திராவிடன் said...

//*********
கடவுள் இல்லை என்பதை நாம் திணிப்பதும் தவறுதானே! அவர்களாய் உணரும் வரை எதுவானாலும் காத்திருப்பது நல்லதாக படுகின்றது.
//*****************
கடவுள் இருக்கிறார் என்பதை மட்டும் திணிப்பது சரியா? ஒன்றுமே அறியாத குழந்தையை கடவுளர் படங்களை பார்த்து சாமி கும்பிடு என்று நாம் தானே சொல்கிறோம் .அவர்களாய் உணரும் வரை எதுவானாலும் காத்திருப்பது நல்லதாக படுகின்றது இந்த விசயத்திலும்