Search This Blog

5.8.09

சமுதாய மாற்றத்திற்கு மூலக்காரணம்பெரியார் அவர்களுடைய உழைப்பு!


பார்ப்பன சமுதாயம் ஆட்டிப்படைக்கின்ற தபால் இலாகாவுக்கு மத்திய அமைச்சராக ஆ.இராசா வீற்றிருக்கின்றார் சமுதாய மாற்றத்தை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் விளக்கம்

பார்ப்பன சமுதாயம் ஆட்டிப்படைத்த தபால் இலாகாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஆ.இராசா மத்திய அமைச்சராக இருக்கின்றார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

குருவரெட்டியூரில் 18.7.2009 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மானமும், அறிவும் உள்ள மக்களாக என்னுடைய மக்களை ஆக்க வேண்டும். மனிதன் என்று சொன்னால் அவனுக்கு மானமும், அறிவும் மிக முக்கியம். மாட்டுக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

யானை பெரிய உருவம்தான். அந்த யானை பெரிய அளவுக்கு நிர்வாணமாக வருகிறது என்று யாராவது கவலைப்படுகின்றார்களா? அல்லது யானைக்கு எப்படி நிர்வாணத்தை மறைப்பது? எப்படி கோவணம் கட்டுவது? அல்லது எப்படி போர்வை போர்த்துவது என்று நாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா?

மனிதனுக்கும், மாட்டுக்கும் வித்தியாசம்

அதே போல மாடு சாணி போடும் பொழுது அந்த மாடு ஏதாவது சாணிபோடுகின்ற இடத்தைப் பற்றிக் கவலைப்படுகின்றதா?

ஆனால் மனிதனுக்கு ஏன் கழிப்பறை தனியே தேவைப்படுகிறது? அது மான உணர்ச்சியினுடைய அடிப்படைதானே. நாம் ஒதுங்கும் பொழுது எப்படி ஒதுங்குவது என்று நாம் கூச்சப்படுகின்றோமா, இல்லையா? மாட்டுக்கும், யானைக்கும் மிருகத்திற்கும் அந்த உணர்ச்சியிருக்கிறதா? கிடையாதே. ஆகவே தான் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்பதிருக்கிறதே அந்த அறிவினுடைய நோக்கம், இலக்கு எது என்றால் மானம்.

எனக்கு அழைப்பு இல்லிங்களே!

சாதாரணமாக 30 வருடமாக, 40 வருடமாகப் பழகிய ஒரே நண்பராக இருந்தால் கூட, நெருக்கமான நண்பராக இருந்தால் கூட என்ன நினைப்போம்? பக்கத்தில் என்னங்க உங்களுடைய திருமணம் ஆயிற்றே, நீங்கள் போகவில்லையே என்று கேட்டால், ஏங்க எனக்கு ரோஷம் இல்லையா? எனக்கு மானம் இல்லையா? என்று சொல்லிவிட்டு எனக்கு அழைப்பு இல்லிங்களே என்று சொல்லுவார்.

சாதாரணமாக 30,40 வருடம் பழகியவர் அவர் ஏதோ அவசரத்தில் பத்திரிகை வைக்க மறந்துவிட்டார் அவ்வளவுதான். அதை எல்லாம் நினைக்காமல் எனக்கு ரோஷம் இல்லையா? மானம் இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு அறிவு, சிந்தனை வளருகிறது என்று சொல்லும் நிலையில் நம்முடைய நாட்டிலே நம்மை சூத்திரன் என்று சொல்லுகின்றான். நம்மை பஞ்சமன் என்று சொல்கின்றான். நம்மை அய்ந்தாம் ஜாதி என்று சொல்கின்றான். நாலாம் ஜாதி என்கிறான். கீழ்ஜாதி என்று சொல்கின்றான். நம்மைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்று சொல்கின்றான்.

எட்டி நில் என்று சொல்கின்றான். எனக்கு இருக்கின்ற உரிமை உனக்குக் கிடையாது என்று சொல்கின்றான்.

மிருகங்களைக் கொஞ்சுகிறான்

மனிதன் நாயைக் கொஞ்சுகிறான். பூனையை மடியில் தூக்கி வைத்துக்கொஞ்சுகிறான். இன்னும் மிருகங்களைக் கொஞ்சுகிறான். ஆறறிவு படைத்த எனது சகோதரன் அவனைத் தாழ்த்தப்பட்டவன், பள்ளன், பறையன், சக்கிலியன் என்று சொல்லி இன்னும் ஒதுக்கி வைக்கிறான் என்று சொன்னால் இதைவிட வேறு கேடு என்ன என்று மனிதநேயத்தோடு தந்தை பெரியார் அவர்கள் தான் கேட்டார். அப்படி கேட்டதோடு அவர் வீட்டுக்குப் போகவில்லை.

இதை மாற்றியமைப்பதற்காகத்தான் என்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்-கிறேன் என்று சொல்லி மிகப்பெரிய அளவுக்குத் தொண்டாற்றியவர்.


உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கின்றேன். இந்த நூலில் ஆய்வாளர் ஒன்றை எழுதியிருக்-கின்றார். 1924ஆம் ஆண்டில் தென்னார்க்காடு மாவட்டம் கமலாபுரம் கிராமத்தில் அக்கிரகாரத்தில் அமைந்திருந்த தபால் நிலையத்திற்கு ஓர் ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவிற்கு தாழ்த்தப்பட்ட தோழர் தடுக்கப்பட்டார்.

காட்டுமிராண்டிகளைக் கொண்ட சமுதாயம்

இதன் விளைவாக பொதுக் கடமைகளில் அதாவது தபால் அலுவலங்களில் கடிதங்களைப் போடுவது, அங்கிருந்து துவக்கப் பள்ளிக்குச் சென்று வருவது போன்ற கடமைகளை செய்ய முடியாத அளவிற்கு அவர் தடுக்கப்பட்டார்.

தபால் நிலையத்தில் ஒரு போஸ்ட்மேனாக இருக்கக் கூடியவர் அக்கிரகாரத்திற்குச் சென்று கடிதத்தைப் போடமுடியவில்லை. அக்கிரகாரத்திற்குப் போகக் கூடாது. போனால் தீட்டு. பிணமாகவாவது போக முடியுமா என்றால் முடியாது. தாழ்த்தப்பட்டவனுடைய பிணம் மேல் ஜாதிக்காரன் இருக்கின்ற, வசிக்கின்ற இடத்தில் பிணமாகக் கூட போக முடியாது.

இவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகளைக் கொண்ட சமுதாயம் நம்முடைய சமுதாயம் தான். ஆனால், இன்றைக்கு எப்படி ஆகியிருக்கிறது? யாராவது சட்டப் பூர்வமாக சொல்ல முடியுமா?

நீ பறையன் நீ பள்ளன், நீ சக்கிலி, நீ கீழ் ஜாதிக்காரன் ஆகவே நீ தபால்காரனாக இருக்கக் கூடாது என்று சொல்கின்ற துணிச்சல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வேறு எங்காவது உண்டா என்றால் இல்லை. இன்றைக்கு அதே சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், இன்றைக்கு இந்தியாவிலே அஞ்சல் துறைக்கே அமைச்சராக _மத்திய அமைச்சராக இருக்கின்றார்; அவர் தான் ஆ.இராசா அவர்கள்.

ஆ.இராசா முன்பு பார்ப்பனர்கள் கைகட்டி

எல்லா பார்ப்பானும், பாப்பாத்தியும் அதிகாரிகளாக இருக்கின்றவர்கள் கைகட்டி நிற்கிறார்களே. அதற்குப் பிறகு இவர் உத்தரவு போடுகிறார். சார் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இன்றைக்கு எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் வந்திருக்கிறது.

தந்தை பெரியார் அறிவு ஆசானுடைய இடையறாத போராட்டங்கள்; அவருடைய அறிவுக் கருத்துகளை எங்கு பார்த்தாலும் மக்கள் மத்தியிலே எதிர்த்து எதிர்நீச்சல் அடித்துச் சொன்னதனடைய விளைவாக ஏற்பட்ட மாறுதல்கள் அவை.


இப்படி எத்தனையோ சொல்லலாம். நடைமுறை உதாரணத்திற்காக உங்களிடம் சொன்னேன். 80 ஆண்டுகளுக்கு, 85 ஆண்டுகளுக்கு முன்னாலே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு தபால்காரர் கூட அக்கிரகாரத்திற்குள் நுழைய முடியவில்லை.

ஆனால், இன்றைக்கு அந்த தபால்துறைக்கே மத்திய அமைச்சராக ஆ.இராசா, விளங்குகிறார். இது திராவிடர் இயக்கத்தின் சாதனைகள். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்களுடைய முயற்சி_ உழைப்பு சாதனையாகும். இத்தனைக்கும் அடித்தளம் யார்? தந்தை பெரியார் மூலக்காரணம்; தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பு

நீதிபதி வேணுகோபால்

நம்மாள்களுக்கெல்லாம் படிப்பே கிடையாது. ஒருவர் பெரிய நீதிபதியாக இருந்தார், ஜஸ்டிஸ் வேணுகோபால் அவர்கள். மத்திய அரசில் வருமான வரித்துறை தீர்ப்பாணையத்தில் நீதிபதியாக இருந்தவர்.

பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். 85 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்து காட்டிய சிறந்த சமூக நீதிப் போராளி அவர். அவர் ஒரு முறை ஓர் உதாரணத்தைச் சொன்னார். நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுடைய தந்தையாரும், இவருடைய தந்தையாரும் பட்டுக்கோட்டையில் நீதி மன்றத்தில் குமாஸ்தாக்களாகப் பணியாற்றியவர்கள். வேணுகோபால் அவர்கள் பள்ளிக்கூடம் சென்று விட்டுத் திரும்பி வரும்பொழுது அவருடைய தந்தையாரை முன்சீஃப் கோர்ட் வெளியே வாசற்படி அருகில் நின்று பார்ப்பார்களாம். வெள்ளைக்காரர்கள் காலத்திலே நீதிபதிகள் உட்கார்ந்திருப்பார்கள்.

நீதிமன்றத்தில் மின்சாரம் இல்லாத நிலை

இன்றைக்கு இளைய தலைமுறையினருக்கு இந்த செய்தி தெரியாது. இன்றைக்கு வந்திருக்கின்ற அதிகாரிகளுக்கே தெரியாது. பங்கா என்றால் என்ன? இப்பொழுது பார்த்தீர்களேயானால் மின்சார விசிறி இருக்கிறது.

வாயு பகவான் இப்பொழுது நமது கன்ட்ரோலில் இருக்கிறார். வாயு பகவான், வருணபகவான், அக்னி பகவான் எல்லா பகவானும் நம்முடைய கன்ட்ரோலில் இருக்-கிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் மின்சாரம் கிடையாது. வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு காற்று வேண்டும் என்பதற்காக ஓர் உருளையில் கயிற்றைக் கட்டி, காற்று வீசுவதற்கு மூங்கில் தட்டியை எல்லாம் கட்டி அந்த உருளையின் கயிறை வெளியில் உட்கார்ந்திருக்கின்ற ஆள் இழுப்பார்.

அப்படி இழுக்கின்றவருக்கு டவாலி கொடுத்து கையில் பட்டையான ஒரு வில்லையைக் கட்டி அவருடைய நெற்றியில் ஒரு டர்பன் எல்லாம் கட்டி உட்கார்ந்திருப்பார். பெரும்பாலும் இந்த மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள் நாமம் போட்டிருப்பவர்கள். அவருக்கு என்ன பெயர், என்ன வேலை என்றால் நீதிபதிக்கு இப்படி விசிறுகிறவர்களுக்கும் பங்கா புல்லர் என்று பெயர்

பங்கா புல்லர்

பங்கா இழுப்பவன் என்று பொருள். அந்தக் காலத்தில் இந்த வேலைக்கே, அய்ந்து ரூபாய் _ எட்டு ரூபாய் சம்பளம். இந்த நிலை ஒரு நூறு வருடத்திற்கு முன்னாலே உள்ள நிலை.

பழைய நீதிமன்றங்களின் வாசற்படியைப் பார்த்தீர்களேயானால் பங்கா புல்லர்கள் இழுத்த உருளைகள் அப்படியே இருக்கும்.

வெள்ளைக்காரர் காலத்தில் நீதிபதிகளுக்கு விசிறி இருக்கும். அதில் கயிறு கட்டி நீதிமன்ற வாசற்படியில் வெளியே உட்கார்ந்திருக்கின்ற பங்கா புல்லர் இரண்டு கயிறையும் இழுத்துக் கொண்டேயிருப்பார்.

தூங்கிக் கொண்டே இழுப்பார்

நம்மாள்களுக்கு பாரம்பரியமாக இழுத்துப் பழக்கம். தூக்கம் வந்தால் கூட தூங்கிக் கொண்டே-யிருப்பான். ஆனால், கை வேலை செய்து கொண்டேயிருக்கும். ஃபேன் ஓடிக்கொண்டிருக்கின்ற அளவுக்கு தூங்கிக் கொண்டே கயிற்றை இழுத்துக் கொண்டிருப்பார்கள். பங்கா இழுப்பவர், பங்கா புல்லர் என்று பெயர். தந்தை பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது சொல்லுவார். 35 வருடம், 40 வருடம் பங்கா இழுப்பார்கள். இது அரசாங்க உத்தியோகம்; அரைக்காசு ஆனாலும் அரசாங்க உத்தியோகம். இவர் ரிடையர்டு ஆகிப் போவார். அவர் பென்ஷன்தாரர். அந்தப் பதவிக்கே பென்ஷன் உண்டு.

இந்த வேலையை என் மகனுக்குக் கொடுங்கள்

நீதிபதி வேணுகோபால் அவர்களுடைய தந்தையார் அந்த வெள்ளைக்கார நீதிபதியிடம் கேட்பாராம். கையில் கட்டியிருக்கின்ற வில்லையைக்காட்டி நெடுஞ்சாண் கிடையாக. நீதிபதி முன்பு விழுந்து கேட்பாராம். என்னய்யா என்று வெள்ளைக்கார நீதிபதி கேட்பாராம்.

துரை எனது பணிவன்பான வேண்டுகோள் என்று சொல்லுவார். என்ன விண்ணப்பம்? என்று நீதிபதி கேட்ப்பார். துரை; இந்த வேலையை எப்படியாவது பெரிய மனது பண்ணி, என் மகனுக்கு கொடுங்கள் என்று கேட்பாராம்.

பங்கா இழுக்கின்றவன் பிள்ளை பங்கா இழுக்கிற வேலையை வாங்கிவிட்-டால், அவன் மோட்ச உலகில் முன் சீட்டில் இடம் கிடைத்த மாதிரி அர்த்தம். அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும். சரி, நீ பார்த்த உத்தியோகத்தை உனது மகனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஏற்படும்.

-------------------தொடரும் ....."விடுதலை" 5-8-2009

0 comments: