
துருக்கி
துருக்கிநாடு அமைந்துள்ள ஆசியாவின் பகுதியைப் பொது ஆண்டுக்கு 1900 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டைட் அரச வமிசம் ஆட்சி செய்தது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பாரசீக அரசு இப்பகுதியைத் தனதாக்கிக் கொண்டது. அதன்பின் ரோமப் பேரரசு கைப்பற்றி, கான்ஸ்டான்டைன் பேரரசர் காலத்தில் (இன்றைய இஸ்தான்புல்) கான்ஸ்டான்டிநோபில் கிழக்கிந்திய ரோமப் பேரரசின் தலைநகர் ஆக்கப்பட்டது. ரோமானிய அரசுக்குப் பின் பைஜான்டின் சாம்ராஜ்யத்தின் பிடியில் சிக்கி, அதன்பின் ஒட்டோமான் பேரரசின் ஆட்சியில் வந்தது.
ஓட்டோமான் பேரரசு 600 ஆண்டுக்காலம் ஆண்டது. இக்காலத்தில் தென்கிழக்கு அய்ரோப்பியப் பகுதிகளையும் தன்அரசில் இணைத்துக் கொண்டது. இப்பேரரசு தன் ஆதிக்கத்தில் மேலைநாடுகளான சிரியா, இசுரேல், ஈராக், அரேபியாவின் பெரும் பகுதி, எகிப்து, வடஆப்ரிகாவில் அல்ஜீரியா போன்ற பகுதிகளையும் தன்வசம் வைத்துக்கொண்டிருந்தது. 1922இல் ஒட்டோமான் பேரரசு சீர் குலைந்து துருக்கிக் குடியரசும் பற்பல சிறுநாடுகளுமாகச் சிதைந்தது.
1909இல் இளந்துருக்கியரின் புரட்சி வெடித்தது. அதன் விளைவாக அரசமைப்புச் சட்டம் அமைத்திடவும் தரமான சிந்தனையுள்ள அரசு அமைத்திடவும் ஏற்பாடானது. முதல் உலகப்போரில் ஜெர்மனியுடன் கூட்டு வைத்திருந்த காரணத்தால் தனது அரசின் பெரும் பகுதியை நாடு இழந்தது.
1923இல் துருக்கிக் குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. துருக்கியின் தந்தை (அத்தாதுர்க்) எனப் போற்றப்படும் முஸ்தபாகெமால் பாட்சாவின் தலைமையில் அரசு அமைந்தது. அரசராகவும் மதகுருவாகவும் ஆட்சி செய்து ஒரே நபர் அதிகாரம் செய்துகொண்டிருந்த காலிஃபா முறையை கமால்பாட்சா ஒழித்தார். ஏராளமான சமூகச் சீர்திருத்தங்களையும் சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி அய்ரோப்பாவின் நோயாளி துருக்கி என்று இருந்த பெயரை மாற்றினார். அய்ரோப்பிய பாணி உடையை ஆணும் பெண்ணும் அணியும் மாற்றத்தை உண்டாக்கினார். இங்கிலீஷ் எழுத்துகளில் துருக்கி மொழியை எழுதும் முறையைக் கொண்டு வந்தார். இசுலாமியர்கள் துருக்கிக் குல்லாய் அணிவதை மாற்றி அய்ரோப்பிய பாணித்தொப்பி அணிவதையும் பெண்கள் புர்க்கா அணிவதையும் தடைசெய்து, மாற்றினார்.
அய்ரோப்பிய, ஆசியக் கண்டத்தின் எல்லைநாடாக, கருங்கடல் கரையிலும் ஏமன் கடலிலும், மத்தியதரைக்கடலிலும் தனது எல்லைகளைக் கொண்டு கிரீசுக்கும் சிரியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பரப்பு 7லட்சத்து 80 ஆயிரத்து 580 சதுர கி.மீ. மக்கள் தொகை 7 கோடியே 4லட்சம் எல்லாரும் சன்னி இசுலாமிய மதத்தவர். ஆட்சிமொழி துருக்கி. 87 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள்.
29.10.1923இல் விடுதலை நாள். குடியரசு நாடு. குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 10 விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டவில்லை.
துர்க்மனிஸ்தான்
பொது ஆண்டுக்கு 400 ஆண்டுகளுக்கும் 300 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்த்தியன் பேரரசைச் சேர்ந்திருந்தது துர்க்மெனிஸ்தான். துர்க்மென் இனத்தவர் இந்நாட்டிற்கு 11ஆம் நூற்றாண்டில் வந்தனர். 1860இல் ரஷியர்கள், இங்கு படையெடுத்து வந்தனர்.பிறகு சோவியத் யூனியனில் ஒரு குடியரசாக ஆனது. 1925இல் சோவியத் சோஷலிசக் குடியரசில்இணைந்த நாடானது, சோவியத் யூனியன் 1991இல் சிதைந்த பிறகு துர்க்மனிஸ்தான் தனிநாடானது.
ஈரானுக்கும் கஜக்ஸ்தானுக்கும் இடையில் காஸ்பியன் கடற்கரையில் அமைந்திருக்கும் இந்நாடு மத்திய ஆசியாவில் உள்ளது. 4லட்சத்து 88 ஆயிரத்து 100 சதுர கி.மீ. பரப்பும் 51 லட்சம் மக்கள் தொகையும் உள்ளநாடு.
முசுலிம்கள் 89 விழுக்காடும் கிழக்கிந்திய பழமைவாத மதத்தினர் 9 விழுக்காடும் உள்ளனர். துர்க்மன் மொழிபேசுவோர் 72 விழுக்காடு. ரஷிய மொழி 12 விழுக்காடு. உஸ்பெக் மொழி 9 விழுக்காடும் என்கிற அளவிலுள்ள மக்கள். 99 விழுக்காட்டினர் கல்வியறிவுபெற்றவர்.
27.10.1991இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக் குடியரசு நாட்டிற்குக் குடியரசுத் தலைவரே அமைச்சரவையின் தலைவராகவும் உள்ளார். 60 விழுக்காடு மக்கள் வேலைகிட்டாமலும் அதே அளவு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழும் உள்ளனர்.
-------------------"விடுதலை" 7-8-2009
0 comments:
Post a Comment