Search This Blog

8.8.09

பெரியார் அவர்களைப்பற்றி வி.பி. சிங் அவர்களின் கணிப்பு




இந்நாள்

சமூகநீதி வரலாற்றில் இந்நாள் மறக்க முடியாத திருநாள் (1990). மண்டல் குழுப் பரிந்துரைகளை ஏற்று, முதல் கட்டமாக வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற பிரகடனத்தை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) நாடாளுமன்றத்தில் நாப்பறை கொட்டிய பொன்னாள்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடுக்கு வாய்ப்பு இருந்தும் அது திட்டவட்டமாக மறைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகே, மக்கள் தொகையில் 52 விழுக்காடுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதன்முதலாக இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளிவந்தது.

அந்த அறிவிப்பைக் கொடுத்த காரணத்தாலேயே அந்தச் சமூகநீதிக்காவலர் மதவாதப் பார்ப்பனியச் சக்திகளால் ஆட்சியைப் பறிகொடுக்க நேர்கிறது என்பது எவ்வளவுப் பெரிய சோகம்!

பதவிக்காகக் கொள்கையைச் சோரம் போகச் செய்யும் பலகீனமான மனிதரல்லர் அவர்! சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளைத் தூக்கி எறியத் தயார் என்று அறிவித்த அறிவு நாணயத்துக்குச் சொந்தக்காரர்! அதிசய மனிதர் அவர்!

சட்டமன்றம், நாடாளுமன்றம் பக்கம் மழைக்காகக்கூட ஒதுங்கியறியாத தந்தை பெரியார் அவர்களின் பெயரை, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பின்போது மறக்காமல் நன்றி உணர்வுடன் ஓங்கி உச்சரித்த ஒலிக்குச் சொந்தக்காரர் அவர். அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், ராம்மனோகர் லோகியா ஆகியோரையும் நினைவு கூர்ந்தார் அந்தப் பிரகடனத்தில்!

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி வி.பி. சிங் அவர்களின் கணிப்பு மிகவும் கம்பீரமானது!

மனித மூளையில், மாற்றத்தைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றவர் தந்தை பெரியார். சமூகநீதிக்கும், சமூக மாற்றத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டு பிரதமர்கள், நாடாளுமன்ற வாதிகள் சாதிக்கக் கூடுவதைவிட அதிகமானது (29.12.1992, தி இந்து) என்றாரே!

அதுதானே உண்மை! சட்டங்களால் அடிப்படையான அறிவு மாற்றத்தைக் கொண்டு வர முடியாதே! ஒரு சுயமரியாதைத் திருமண சட்டம் கொண்டு வரப்படுவதற்குமுன் அரை நூற்றாண்டுக்காலம் மக்களின் அறிவுப் புரத்தில் பகுத்தறிவுப் பணி நடத்தப்படவேண்டியிருந்ததே! அதனைத்தான் கவிஞரான வி.பி. சிங் அவர்கள் அழகுபடக் கூறியுள்ளார்.

தூக்குத் தண்டனை என்னும்போது ஒருவர் ஒரே ஒருமுறைதான் சாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், சமூக இழிவு தினம் தினம் சாவை சந்திக்கக் கூடிய அதிகபட்ச தண்டனையாகும். எனவேதான், பிற்படுத்தப்பட்டோரின் சமூக இழிவை நீக்கவும், சமூகநீதி வழங்கிடவும் ஜனதா தளம் உறுதி பூண்டுள்ளது.

மண்டல் இப்போது வாயு மண்டல் ஆகிவிட்டது. விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகநீதிக் காற்றை ஒருவர் சுவாசித்தே ஆகவேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 11.10.1994) என்று எவ்வளவு உறுதிபடக் கூறினார்.

ஆம், அந்த சமூகநீதிதான் திராவிடர் கழகத்தின்மீதும், அதன் தலைவர்மீதும் அவருக்கு அளப்பரிய பற்றுதலை ஏற்படுத்திக் கொடுத்தது.

சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே! உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்


வி.பி. சிங் (திருச்சி, 30.12.1992)


------------- மயிலாடன் அவர்கள் 7-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: