Search This Blog

31.8.10

பதில் சொல்லட்டும் பார்ப்பனர்கள்!



ஆவணி அவிட்டம் பற்றியும், அந்நாளில் பார்ப்பனர்கள் பூணூல்களைப் புதுப்பிப்பது குறித்தும் விடுதலை ஆதாரப்பூர்வமாக வெளுத்து வாங்கியது இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையிலும் பார்ப்பனர்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தலைவராகவும் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமிதான். அந்த வகையில் ஆவணி அவிட்டம் குறித்து விடுதலைக்கு மறுப்பு எழுதுவதாக நினைத்துக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறார்.

கேள்வி: இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலைக் கழற்றிவிட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது! அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

பதில்: நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆவணி அவிட்டம் அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்ம தேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்தத் தினம் ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் அதற்கு ஆவணி அவிட்டம் என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால் அவனுக்கு ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

(துக்ளக், 1.9.2010, பக்கம் 17).

சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக ஒரு நினைப்பு தொடக்கத்திலேயே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பார்ப்பனர்கள் புதிய பூணூலைப் போட்டுக் கொள்வதுபோல்தான் ஆவணி அவிட்டம் ஆகிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதே துக்ளக்.

அது தவறு என்றால், அதனைக் கண்டித்தோ, அது கூடாது என்றோ என்றைக்காவது துக்ளக் சோ ராம சாமியோ, காஞ்சி சங்கராச்சாரியாரோ, கல்கியோ, ஆனந்த விகடனோ, காமகோடி இதழோ எழுதியது கிடையாதே!

விடுதலை எழுதுகிறது என்றவுடன், தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சிக்கிறார்கள் அவ்வளவுதான்! அதிலாவது சரக்கு இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை.

பிரம்மதேவனுக்கு முதன்முதலில் வேதம் கிட்டியது அல்லது உபதேசம் ஆகியது அந்த நாள்தான் இந்த ஆவணி அவிட்டமாம். பிரம்மதேவனுக்கு முதன்முதலில் வேதம் கிட்டியது என்றால் எப்படி கிட்டியது? யாரால் கிட்டியது? உபதேசம் கிடைத்தது என்றால், யாரால் அந்த உபதேசம் கிட்டியது என்று ஆதாரத்தோடு கூறவேண் டாமா?

அப்படியெல்லாம் கேட்டால், தயாராக ஒன்று வைத்துள்ளனர்.... என்பது நம்பிக்கை; என்பது அய்தீகம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.

இன்னொன்றையும் துக்ளக் குறிப்பிடுகிறது.

இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்துவிடக் கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ஆவணி அவிட்டம் என்கிற உபாகர்மாவைச் செய்யவேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதிவிடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருதவேண்டும் என்று கூறி மங்களம் பாடி முடித்துக் கொண்டுவிட்டது.

இந்தப் பூணூலைத் தரிப்பதில்கூட இந்த மூன்று வர்ணத்தாருக்கும் வேறுபாடு காட்டப்பட்டுள்ளதே அது ஏன்?

பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயி ராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் 2; சுலோகம் 44) என்று வேறுபாடு காட்டப்படுவதும், பெரும்பாலான மக் களான சூத்திரர்கள் பூணூல் தரித்தால், அவன் அங்கங் களை அரசன் வெட்டிவிடவேண்டும் என்றும் (மனு அத்தியாயம் 9; சுலோகம் 224) கூறப்பட்டுள்ளதே இதற்கு என்ன சமாதானம்?

பிறப்பால் பிராமணன் கிடையாது குணத்தால் பிராமணன் என்று துக்ளக்கில் திருவாளர் சோ ராமசாமி எழுதி வந்தது என்னாயிற்று?

பூணூல் அணிந்த பிறகுதான் பிராமணன் துவிஜாதி இரு பிறப்பாளன் என்று கூறப்படுகிற வைதீகம் என்னாயிற்று?

தொடக்கத்தில் கோவணம் கட்டிக் கொள்ளப் பயன்படும் அரைஞாண் கயிறாக இருந்ததுதான் பின்னர் பூணூலாகி விட்டது என்று விவேகானந்தர் கூறியுள்ளதற்கு என்ன பதில்?

வேதம் சூத்திரர்களுக்குக் கிடையாது அதனால் பூணூல் தரிக்கக் கூடாது என்று சாமர்த்தியமாகக் கூறுவார்களேயானால், பெரும்பான்மையான இந்த மக்கள் வேதம் படிக்கக் கூடாது என்றால், அந்த மக்கள் இந்து மதத்திலேயேதான் இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க் கிறார்கள் வேறு மதங்களுக்குச் சென்று அந்த மதங்களில் வேத நூலைப் படிக்க வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டும்போது, அய்யயோ மத மாற்றம்! மத மாற்றம்! என்று கூப்பாடு போடுவானேன்? மரியாதையாக துக்ளக் அடுத்த இதழில் பதில் சொல்லட்டும்!

--------------------"விடுதலை” தலையங்கம் 31-8-2010

1 comments:

Anonymous said...

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு
நடத்துவர். அதற்கு உபநயனம் என்பெயர். இதன் பொருள் யார் புரிந்திருக்கிறார்களோ? உப என்றால் இரண்டு நயனம் என்றால் கண்.
இரு கண்ணை பற்றிய உபதேசம் என பொருள். உபனயத்தின் போது பூணூல் போடப்பட்டு காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவார்.

காயத்ரி என்ன சொல்லுகிறது தெரியுமா? மேலான சுடர்
கடவுளின் ஒளியை தியானிப்போம் என்பதுதானே!
உபநயனம் + காயத்ரி என்பது இரு கண்களில் ஒளி
உள்ளது இதை தியானிப்பாயாக எனப்பொருள்? இனிமேலாவது
இவ்வண்ணம் உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

உண்மையில் பிரம்மத்தை சார்ந்து பிராமணர் ஆகுங்கள். இதனை உணராததினால்தான் இன்றைக்கு பிராமணர்கள் வெறும் சடங்குகளிலே நிற்கின்றனர். கிரியையில் நின்று விடுகின்றனர்.

ஞானத்திற்கு வருவதில்லை. எப்பொழுது புரிந்து ஞானம்
அடைவார்களோ ? இறைவா உன் பக்தர்களை மேனிலை படுத்து.
அருள் புரிவாயாக. இரு கண்களிலும் உள்ள ஒளியைப் பார்த்து
சாதனை செய்ய செய்ய அங்கே தூங்காமல் தூங்கி
இருப்போமேயானால் விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன்
காரியப்படுவதை நாம் பார்க்கலாம். சாதனை அனுபவத்தில்
இதனை உணரலாம். சிந்தனை செய் மனமே சுகம் பெறலாம்.



பக்கம் 70.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
www.vallalyaar.com

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி