Search This Blog

7.8.10

1929 லேயே கிறித்துவ பாதிரியார்களை கண்டித்த பெரியார் இயக்கம்


பதிலடிகள் கொடுக்கும் மாநாடு வாலாஜாவில்!

கழக வரலாற்றில் வடஆற்காடு மாவட்டத்துக்கு என்று ஒரு தனி முத்திரையும், அத்தியாயங்களும் உண்டு! கண்டிப்பாக உண்டு.

இன்னும் சொல்லப்போனால் 1929 செங்கற்பட்டில் முதல் சுயமரியாதை மாநாடு (பிப்ரவரி 17,18) நடைபெற்றது என்றால்- அதனையும் முந்திக்கொண்டு 1929 சனவரி 4,5 ஆகிய நாள்களில் வடஆற்காடு மாவட்ட முதல் சுயமரியாதை மாநாடு வேலூரில் நடந்தது என்றால், இம் மாவட்டத்தின் ஏற்றத்தை எளிதில் உணர்ந்திடலாம்.


வாலாஜாவுக்கு வா ராஜா வா என்று வரவேற்புக் குழுவினர் வாஞ்சையுடன் அழைக் கிறார்கள், வாருங்கள்! வாருங்கள்!! அரசின் விதிமுறைகளுக்கு விரோதமாக வாலாஜா அரசு மருத்துவமனையில் கோவில் எழுப்பப் பட்டுள்ளது. தினமலர் நிருபர் நாள்தோறும் பூஜை செய்கிறார். சட்டம் தன் கடமையைச் செய்யுமா?

1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்களுக்கு முன்னோடியாக வேலூர் மாநாட்டில் பல அரிய பெரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நமது பெண்களுக்குச் சொத்தில் ஆண்களைப் போலவே சரி பங்கு இருக்க வேண்டும்.

விதவைகள் என்பவர்களுக்கும் அவர்களின் புருசர்களுடைய சொத்துகள் முழுவ திலும் பூரண சுதந்திரம் இருக்க வேண்டும்.

பிரியாத குடும்பங்களிலும் புருசர்களுக்குக் கிடைக்கக் கூடிய சொத்துகளின் உரிமை முழுவதும் அவர்கள் இறந்த பிறகும் அவர்களின் மனைவிகளுக்குக் கிடைக்க உரிமை இருக்க வேண்டும்.

ஆண்கள் தங்கள் மனைவிகள் காலம் சென்று விட்டால், மறுவிவாகம் செய்துகொள்ள உரிமை இருப்பது போலவே, எல்லா பெண்களுக்கும் புருஷன் இறந்து போனால் மறுவிவாகம் செய்துகொள்ள உரிமை வேண்டும்.

-என்கிற தீர்மானங்கள் எல்லாம் வ.ஆ. வேலூர் மாவட்ட முதல் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டு இருப்பதை அறியும்போது அந்த மாவட் டத்தைப் பற்றிய மரியாதை மிகவும் உயருகிறது.

சர்க்கார் உதவிபெறும் பள்ளிகளில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களும், பார்ப்பனர் அல்லாத உபாத்தியாயர்களும் விகிதாச்சாரப்படி நியமிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஜில்லாவிலும் பார்ப்பனர் அல்லாத வாலிபர்களில் உத்தியோகத் திற்கு லாயக்காய் உள்ள உத்தியோகம் வேண்டி யவர்களின் ஜாப்தா ஒன்று பதிவு செய்து வைத்திருப்பதுடன், ஒவ்வொரு வருஷமும் அந்தப் பதிவு அறிக்கை சென்னையில் இருக்கும் மத்திய உத்தியோக ஸ்தாபனத்திற்கும், சர்க்கார் இலாகா தலைமை அதிகாரி களுக்கும் முறையாக அனுப்பிக் கொண்டு வரவேண்டுமாய் தீர்மானிக்கிறது.

81 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாத தீர்மானங்கள் வ.ஆ.வேலூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன என்றால்-அதன் சிறப்புகளை எடுத்தோத வார்த்தைகளுக்கு வலு இல்லை. திராவிட இயக்கம் என்ன செய்தது என்று பிதற்றும் பித்துக்குளிகளின் செவுளில் அறைவதுபோல இத்தீர்மானங்கள் இருக்கவில்லையா?

வ.ஆ.திருப்பத்தூர் தாலுகா முதல் சுயமரியாதை மாநாடு வாணியம்பாடியில் நடைபெற்றுள்ளது. (8, 9.10.1933) சுயமரியாதை மாநாட்டுக்கு எஸ்.இராமநாதன் எம்.ஏ., பி.எல்., வாலிபர் மாநாட்டுக்கு இந்திராணி பாலசுப்பிரமணியம், லேவாதேவிக்காரர் அல்லாத மாநாட்டுக்கு ஏ.இராகவன் ஆகியோர் தலைமை வகித்துள்ளனர்.

சென்னை அரசாங்கத்தார் கர்ப்பத் தடையைப் பிரச்சாரம் செய்ய உத்தேசித்தி ருப்பதை இம்மாநாடு ஆதரிக்கிறது மேலும் இதனை மதத்தின் பெயரால் எதிர்க்கும் கத்தோலிக்கப் பாதிரியார்களை இம்மாநாடு கண்டிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்து மதத்தினைத் தானே விமர்சனம் செய்கிறீர்கள் என்று இந்து முன்னணிகள் மாநாடு போட்டு நம்மை நோக்கிக் கேள்விகளைக் கிளப்புகின்றனர். இந்த இந்து முன்னணி சிறுவர்கள் பிறக்காத காலத்திலேயே கத்தோலிக்கக் கிறித்துவர்களை -பாதிரியார்களை கண்டித்த பாரம்பரிய இயக்கம் நம்முடையது என்பதை எடுத்துச்சொல்லுவோம் வாருங்கள் தோழர்களே, வாலாஜாவுக்கு.

திருப்பத்தூர் தாலுகா முதல் சுயமரியாதை மாநாடு இரண்டாம் மாநாடு சு.ம.மாநாடு, மூன்றாம் சு.ம. மாநாடு என்ற ஒரு தாலுகாவுக்குள்ளேயே கூட அலை அலையாக மாநாடுகள் வரிசையாக நடைபெற்றுள்ளன. ஆம்பூரில் ஆதி திராவிடர் மாநாடு என்று கூட நடைபெற்றிருக்கிறது.

ஜோலார்பேட்டை, திருவத்திபுரம், குடியாத்தம் போன்ற இடங்களிலெல்லாம் எல்லாம் கல்வெட்டுகள் போல செதுக்கப்பட வேண்டிய இயக்க நிகழ்ச்சிகள் ஏராளம்! ஏராளம்!

திருவத்திபுரம் பொங்கல்விழா என்பது அந்த காலகட்டத்தில் புகழ் பெற்றதாகும்.

சின்னராசு (சி.பி.சிற்றரசு) செய்யாறு புலவர் கோவிந்தன், வடசேரி சபாரத்தினம், ஆம்பூர் பெருமாள், ஜோலார்பேட்டை கே.சி, தங்கவேல், கே.சி. சின்னராசு, திருப்பத்தூர் ஏ.டி.கோபால், வேலூர் திருநாவுக்கரசு, வேலூர் வி.எஸ். கனகசபை (அன்னை மணியம்மையாரின் தந்தையார்) ஜோலார்பேட்டை வி.பார்த்தசாரதி, (சமதர்மம் இதழ் நடத்தியவர்), ஆம்பூர் மணிவாசகம், வடசேரி து.ஜெகதீசன்-என்று என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் சுயமரியாதைச் சுடரொளிகள் வரிசை மிகவும் நீண்டதாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டத்தில் வாலாஜா நகரில் திராவிடர் கழகத்தின் மண்டல மாநாடு மிக எழுச்சியுடன் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது.

அந்தக் காலகட்டத்தில் கருத்துக் கண் ணாடிகளாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றால், இக்காலகட்டத்திற்குத் தேவையான கருத்துகளை உள்ளடக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

திராவிடரா? தமிழரா? என்று கிறுக்குப் பிடித்த சிலர் கிழிக்கும் வார்த்தைகளை விளம் பரப்படுத்துவதற்கென்று இந்நாட்டில் பார்ப்பன ஊடகங்கள் உண்டு.

எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்துக் கொடுக்க முரசொலித்துக் கிளம்புங்கள் தோழர்களே! அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் பொங்கி வழிகிறது. புத்தம் புது இளைஞர்கள் புரட்சிகரமான நமது இயக்கத்தை நோக்கி சிறகடித்து வருகிறார்கள்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளோ தடபுடல்! எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்து முழக்கங்கள். ஊரே கழகக் கொடிக்காடென்னும் குடை பிடித்து நிற்கிறது. நேரில் பார்த்தால்தான் இச்சிறப்புகளின் அணிவகுப்பைச் சுவைக்க முடியும். வரும் ஞாயிறு - கழக ஞாயிறாக-கொள்கை ஒளி வீசும் பட்டாளத்தின் பகலவனாகப் பவனி வரட்டும்!

--------------- மின்சாரம் அவர்கள் 6-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை