மும்மலம்
மும்மலம் மும்மலம் என்று ஆன்மிக மொழியில் ஒன்றைச் சொல்வார்கள் ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் தான் அந்த மும்மலம் ஆகும்.
இந்த மூன்றையும் கடந்து கட்டறுத்து நிலை பெறுவதுதான் உயர்ந்த நிலை என்றெல்லாம் இதோபதேசம் செய்கிறார்கள்.
இவை குறித்து நீட்டி முழங்கும் அந்த ஆன்மிகச் சீலர்கள் இந்த மூன்றினையும் கடந்த முதல் நிலை மானுடர்கள்தானா என்பது சுவையான கேள்வியாகும்.
ஆணவம் என்பதற்கு சூரபத்மனையும், கன்மம் என்பதற்கு சிங்க முகனையும், மாயை என்பதற்கு தாரகனையும் உதாரணத்துக்கு எடுத்துச் சொல்பவர்களும் அவர்கள்தான்.
ஆணவம், தீவினை பொய்த் தோற்றம் இந்த மூன்றும்தான் அந்த மும்மலமாம்!
இந்த அளவுகோலை வைத்து நாட்டு நடப்பைப் பார்த்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம்.
அரித்துவாரில் கும்பமேளா நடைபெறுகிறது அல்லவா? கும்பமேளாவுக்கு வரும் சங்கராச்சாரியார்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க உத்தர் காண்ட் மாநில அரசு முன்வந்த போது சங்கராச்சாரியார்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டுள்ளது.
பத்ரிநாத், பூரி, துவாரகா மற்றும் சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் அல்லாமல் மேலும் பலர் தங்களை சங்கராச்சாரியார்கள் என்று சொல்லிக் கொண்டு முன்வந்து, தங்களுக்கும் மற்ற சங்கராச்சாரியார்களுக்குச் செய்வதுபோல மாநில அரசு தேவையானவற்றைச் செய்தாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம்! இவர்கள் கூறும் அந்த மும்மலத்தை கடந்த லட்சணம் இதுதானா?
சில ஆண்டுகளுக்கு முன் இராமேசுவரத்தில் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. அங்கும் இப்படித்தான் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் லடாய்...! யாருக்கு முதல் மரியாதை? யாருக்கு முக்கிய இடம் என்று சண்டை போட்டுக் கொண்டனர். மதுரை ஆதீன கர்த்தர் விடிய விடிய உட்கார்ந்து சமரசம் பேசியிருக்கிறார்.
இந்த நிலையை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் வேறு ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக்கூறி, இந்த அளவுக்குக் கீழிறக்கத்துக்கு ஆளாகி விட்டார்களே என்று வருத்தப்பட்டார்.
எந்த நிகழ்ச்சியில் சங்கராச்சாரியார் கலந்து கொண்டாலும் அவர் உட்கார்ந்திருக்கும் ஆசனம் மற்றவர்களைவிட உயரமாகவே இருக்கும். விழாவில் பங்கேற்க வந்தவர்களுக்குச் சிறப்பு செய்வதாக இருந்தால்கூட, தன் சீடகோடி ஒருவர் கையில் கொடுத்துதான் போர்த்தச் செய்வார்.
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரை இந்து சமய கலை விழாவில் அவ்வாறுதான் ஜெயேந்திர சரஸ்வதி செய்து அவமானப்படுத்தினார். சமீபத்தில் திருச்சியில் இசைஞானி இளையராஜாவையும் அதே வகையில் தான் சிறுமைப்படுத்தினார்.
வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். ஆணவத்தை விட்டெறிந்து அடுத்தவர்களைச் சம மனிதர்களாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
----------------- மயிலாடன் அவர்கள் 15-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
2 comments:
அருமை. நல்ல கருத்து. மாறணும். காத்திருப்போம். மக்கள் மன நிலை மாற்றம் முக்கியமானது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Madurai Saravanan
Post a Comment