Search This Blog

28.3.10

விவேகானந்தரின் காவியுடையும் - மற்ற ஆனந்தர்களின் காவியுடையும்

25.3.2010 அன்று திருச்சியில் நடைபெற்ற டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் சகோதரர் சோம.பொன்னுசாமி அவர்களது இல்லத் திருமணத்தில் என்னைச் சந்தித்த, தஞ்சையின் மூத்த வழக்கறிஞரும் சிறந்த எழுத்தாளரும், அரசியல்வாதியுமான நண்பர் தஞ்சை அ.இராமமூர்த்தி அவர்கள், தாம் எழுதி வெளியிட்டுள்ள சமயச் சமத்துவம் சமூகநீதி என்ற தலைப்பில், விவேகானந்தர் பற்றிய அரிய நூலைத் தந்தார்.

விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற வங்கத்து சமயப் புரட்சியாளர் துறவி நரேந்திரர் அவர்கள் பற்றி ஒரு புதிய கோணத்தில் மற்றவர்கள் பார்க்காத பார்வையோடு, பார்த்து அந்நூலை எழுதியுள்ளார்.

224பக்கங்கள் கொண்ட அந்நூல் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டு, இறுதியில் அந்த ஆதார நூல்கள் பட்டியலையும்கூட அவர்கள் தொடுக்கத் தவறவில்லை.

வழக்கம் போல எனது பல்வேறு தொடர் பணிகளுக்கு இடையேயும் நேற்று முன்தினம் (25.3.2010) பிற்பகலில் இருந்து படிக்கத்துவங்கி பெரும் பகுதி முடித்துள்ளேன்.

இதில் உள்ள சுவையான இரண்டு செய்திகள் (பலவும் சுவையானவையே) நமது வாசகர் நேயர்களுடன் பகிர்ந்து கொள்வது தேவை என்பதால் உடன் எழுதுகிறேன்.

இராமகிருஷ்ணரைத் தனது குருவாகக் கொண்டு, இன்று இராமகிருஷ்ண மடம் உலகெங்கும் பரவியிருப்பதற்கு முக்கிய சீடரான ஏன், முதல் சீடரான (மொத்தம் 12 சீடர்கள்தான் ராமகிருஷ்ணருக்கு துவக்கத்தில் இருந்தனர், யேசு பற்றி சொல்வதைப்போலவே) நரேந்திரர், துறவியாக இருந்தபோது, வழமைக்கு மாறான சிந்தனையோடு எப்படி இந்து மதம் என்பதை, ஏற்காது, ஜாதி முறையைச் சாடி ஒழிக்க முயலவேண்டும் என்று கூறியதிலிருந்து, இளைஞர்களே, நீங்கள் வேதம் பகவத் கீதை படிப்பதை விட கால் பந்து விளையாடுங்கள். அதன் மூலம் பலன் பெறுவீர்கள் என்பதுபோன்ற கருத்தோட்டம் இருந்ததற்கு முக்கிய காரணம் பற்றி தெரிந்துள்ள ஒரு சம்பவத்தை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

பல ஊர்களுக்குச் சென்ற நரேந்திரர் (ராகுல சாங்கிருத்தியாயன் தன்னை ஓர் ஊர் சுற்றி என்று கூறி, அதனால் ஞானம் பெற்றவர் என்பது போன்று) இராஜஸ்தானில் ஒரு புதிய பகுதிக்குள் தன்னந்தனியே நுழைந்தார்

அப்போது ஒரு புத்தத் துறவியார் பாடல் ஒன்றைக் கேட்டுக்கொண்டே புறப்பட்டார்; அந்தப்பாடல் வருமாறு:

முன்னேறு, மேற்செல்!

பாதையில்லா வழியில் புதிய

பாதை போட்டுச்செல்

எதையும் கண்டு நிற்காத காண்டாமிருகம் போல்!

தனியே போ!

யாரையும் கண்டு அஞ்சாத சிங்கம் போல் செல்!

வலையைப் பொருட்படுத்தாது காற்று

போல் புகுந்து போ!

தண்ணீரால் கறைபடாத தாமரை போல்

தூயவனாகச் செல்!.

இந்தப் பாடல் அவர் தன்னைச் செதுக்கிக்கொள்ளப் பெரிதும் காரணமாய் இருந்திருக்கிறது என்பது அவரது துணிச்சல் மிகுந்த தனித்தன்மையான பல்வேறு புரட்சிக் கருத்துக்களுக்கு அடிநீரோட்டமாக அமைந்திருக்கக்கூடும் என்பது நமது ஊகம். இது இன்றுள்ள இளைஞர்கள் ஆக்கச் செயல்களை சமூகக் கண்ணோட்டத்தோடு சாதித்திட உதவிடும் என்பது உறுதி.

இதிலிருந்து ஒரு முக்கிய உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தமார்க்கம் அறிவுமார்க்கம்; அது வெறும் மதம் அல்ல. வாழ்விற்குப் பயன்தரும் பல வழிகாட்டும் நெறிகளைக் கூறிய அமைப்பு என்பதாகும்.

மதம் என்றால் கேள்வி கேட்காமல்,சொல்லப்படுவதை அப்படியே நம்புவது.

மார்க்கம் என்றால் வாழ்வியல் வழிமுறைஅறிவுப்படி சிந்தித்துச் செயல்பட என்பதை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!

என்பது தெளிவாகிறது அல்லவா?

இதே புத்தகத்தில் (பக்கம் 41இல்) ..... ஆல்வாரில் (ஒருநகரம் ராஜஸ்தானில்) அன்பர் ஒருவர், இவர் காவிஉடை அணிவதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டுவிட்டதற்கு, நரேந்திரர் (பின்னாளில் விவேகானந்தர் ஆகும் முன்பே) அய்யா நான் வேறு உடை அணிந்திருந்தால் என்னிடம் யாரும் பிச்சை கேட்டு-விடுவார்கள். நானோ காசில்லாத பிச்சைக்காரன்! எனவே என்னிடம் யாரும் பிச்சை கேட்காமல் இருப்பதற்காகவே நான் காவி உடை அணிகின்றேன். என்னிடம் யாசிப்போருக்கு இல்லை என்று சொன்னால் உள்ளம் நோகும் என்று பதில் அளித்தாராம்!

விவேகானந்தர் காவி உடையை ஏன் தேர்வுசெய்தார் அன்று?

இன்று காவி உடை வேஷத்தில், ஆன்மிக ஆராய்ச்சி என்ற பெயரால், ஒரு 32வயது ஏமாற்று ஆனந்தாவுக்கு (அவரிடம் சீடகோடியாக இருந்த பிரபல எழுத்தாளர் கூறுகிறபடி) சொத்து எவ்வளவு தெரியுமா?

அற்பத் தொகைதான். ரூபாய் 5000 கோடி (அய்யாயிரம் கோடிதான்!) சகல சவுபாக்கியங்களோடு சாங்கோபா சனாதான ஆன்மிக ஆராய்ச்சி! வெப்சைட், பல்வேறு மொழிகளில் கூலி (பேய்) எழுத்தாளர்கள்.

அமெரிக்காவில் வாழும் பல அரசியல் தலைவர்களின் இமேஜைப் பெருக்கிக்காட்ட பல ஆலோசகர்கள் உண்டாம். நம் ஊர் ஆனந்தாக்களும், கல்கிகளும் அவர்களை மிஞ்சி விளம்பரம் தேடிட ஏடுகளில் தொடர் கட்டுரை, கருத்துரை என்ற விளம்பர முறை தொலைக்காட்சிகளில் ஏஜென்ட்டுகள் எங்கும்!

வியாபாரத்திற்கு அழகு விளம்பரம் செய்தல் தானே!

விவேகானந்தரின் காவியையும் மற்ற ஆனந்தர்களின் காவியையும் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுங்கள், மனிதநேயம் எங்கேயிருக்கிறது என்பதை!


------------------------ கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் -”விடுதலை” 27-3-2010

7 comments:

Anonymous said...

விவேகானந்தர் ஆன்மீக புரட்சியாளர் என்றால் மிகை இல்லை!

Unknown said...

விவேகானந்தர் ஒரு முழுமையான பகுத்தறிவாளர். தான் வாழ்வின் ஆரம்பம் முதல் கடைசி வரை பகுத்தரிவாளராகவே இருந்தவர்.

மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்தவர்.

சாதிகளை உடைத்து சமத்துவத்தை அமைப்பது இவரின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது.

மேல் சாதி ஆணவப் போக்கினை வன்மையாகக் கண்டித்தவர்.

ஏழைகளின் பெயரில் , தாழ்த்தப் பட்ட, நழுக்கப் பட்டவரின் பெயரில் இவருக்கு இருந்த அன்பும், அக்கறையும் அளவிட முடியாதது.

சமய சமத்துவத்தை ஆதரித்தவர்.

சகோதரி ஓவியா அவர்கள் , விவேகானந்தர் பற்றி அவ்வப்போது எழுதினால் மக்கள் விழிப்பு பெறுவார்கள்.

பனித்துளி சங்கர் said...

சிந்திக்க தூண்டும் பதிவு . தொடர்ந்து எழுதுங்கள் .

பனித்துளி சங்கர் said...

சிந்திக்க தூண்டும் பதிவு . தொடர்ந்து எழுதுங்கள் .

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்களே

SINTHIPPAVAN said...

///இந்தப் பாடல் அவர் தன்னைச் செதுக்கிக்கொள்ளப் பெரிதும் காரணமாய் இருந்திருக்கிறது என்பது அவரது துணிச்சல் மிகுந்த தனித்தன்மையான பல்வேறு புரட்சிக் கருத்துக்களுக்கு அடிநீரோட்டமாக அமைந்திருக்கக்கூடும் என்பது நமது ஊகம்.///
திரு வீரமணி அவர்கள் விவேகானந்தரின் பல புத்தகங்களை படித்திருப்பார் என்பதை நான் ஏற்கெனவே யுகித்திருந்தேன்.நானும் விவேகானந்தரின் சில புத்தககங்களை படித்திருக்கிறேன். விவேகனந்தர் சிறு வயதிலிருந்தே துணிச்சல் மிக்கவராகவும்,பிரம்ம சமாஜத்தில் சில காலம் இருந்ததால் ,பகுத்தறிவாளராகவும் இருந்திருக்கிறார்.அவரது துணிச்சல் மிகுந்த தனித்தன்மையான பல்வேறு புரட்சிக் கருத்துக்களுக்கு அடிநீரோட்டமாக அமைந்தது இந்துமதத்தின் அடிநாதமான உபநிசத்களே ஆகும்..அவருடைய துணிச்சல் மிகுந்த தனித்தன்மையான பல்வேறு புரட்சிக் கருத்துக்கள் பெரும்பாலும் உபநிசத்துக்களின் கருத்தே.அவருடைய புகழ்பெற்ற வரிகளான எழுங்கள்,விழித்துக் கொள்ளுங்கள் , குறிக்கோளை அடையும்வரை நில்லாமல் செல்லுங்கள். என்ற வரி கூட உபநிசட்தின் கருத்தே.ஆனால் அவர் ஏதோ ஒரு புத்தத் துறவியரின் பாடலைக் கேட்டதாலே தான் அவர் தன்னை செதுக்கிக் கொண்டதாகவும்,துணிச்சல் மிக்கவராகவும், புரச்சிக்கருத்துடையவராகவும் ஆனார் என்பது போன்ற புத்தக ஆசிரியர் தஞ்சை அ.இராமமூர்த்தி அவர்கள் கற்பனை அது ஒரு கற்பனையே தவிர முழு உண்மையல்ல.இது இந்து மதத்தை விட புத்த மதம் உயர்ந்தது என்று காட்ட வேண்டும் என்று இந்த செய்தியை தேர்ந்தெடுத்துக் கூறிய திரு வீரமணி அவர்களின் செயலும் உள்நோக்கம் கொண்டதே.விவேகானந்தரது துணிச்சல் மிகுந்த தனித்தன்மையான பல்வேறு புரட்சிக் கருத்துக்களுக்கு அந்த புத்தத் துறவியின் பாடல் ஒன்று மட்டும் தான் காரணமாக இருக்காது என்பது வீரமணி அவர்களுக்கே மிக நன்றாகத் தெரியும்.இந்தக் கருத்து விவேகானந்தரைச் சிறுமைப்படுத்தும் கருத்தாகவே கருதுகிறேன்.


///காவிஉடை அணிவதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டுவிட்டதற்கு, நரேந்திரர் (பின்னாளில் விவேகானந்தர் ஆகும் முன்பே) அய்யா நான் வேறு உடை அணிந்திருந்தால் என்னிடம் யாரும் பிச்சை கேட்டு-விடுவார்கள். நானோ காசில்லாத பிச்சைக்காரன்! எனவே என்னிடம் யாரும் பிச்சை கேட்காமல் இருப்பதற்காகவே நான் காவி உடை அணிகின்றேன்.///

இதில் -விவேகானந்தர் காவி உடையை பிச்சை எடுப்பதர்க்காகத்தான் கட்டினார் -என்பது போல உள்ள இந்தக் கருத்து திரு வீரமணி அவர்கள் அந்தப்புத்தகத்திலிருந்து நமக்குக் கூறும் இரண்டாவது செய்தி.இதிலிருந்தே அவர் கூறிய இந்த செய்தி விவேகானந்தரை புகழ்வதைப் போல் களங்கப்படுத்த வேண்டும் என்ற அவரின் உள்நோக்கம் புரிகிறது.

நம்பி said...

//இது இந்து மதத்தை விட புத்த மதம் உயர்ந்தது என்று காட்ட வேண்டும் என்று இந்த செய்தியை தேர்ந்தெடுத்துக் கூறிய திரு வீரமணி அவர்களின் செயலும் உள்நோக்கம் கொண்டதே.//

இந்த பின்னூட்டத்தில் பதிவிட்டதை பார்த்தபிறகு ஒருவேளை விவேகானந்தருக்கு உள்நோக்கம் இருக்கும் என்றும் கருதிவிட முடியும்?...அவசரப்படாமல் ஆய்வு செய்யவேண்டும். பெரிய சமூதாய இயக்கம்...இப்படி சர்வ சாதாரணமாக விவேகானந்தரின் எண்ணங்களை வைத்துவிடாது... இந்த பேச்சுக்கள் அனைத்தும் இணையத்தில் உள்ளன..ராமகிருஷண மட பதிப்பகத்தின் புத்தகத்திலும் உள்ளன..கீழே உள்ளவை...அந்த புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை...

சிகாகோவில் விவேகானந்தர் பேசிய 5 ஆம் நாள் பேச்சு...


5.புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு
1893..செப்டம்பர் 26


நான் பௌத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பௌத்தன். சீனாவும் ஜப்பானும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவிளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பௌத்த மதத்தை விமர்சிக்கப்போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக் கூறி நான் வழிபடுவபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவருடைய சீடர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து.


--------------------------------

அதுமட்டுமல்ல நியுயார்க்கில் 1896 இல் ஜனவரி 5 ஆம் நாள் ஆற்றிய கிளைம்ஸ் ஆப் ரிலிஜியன் (The claims of Religion) என்ற பெயரில் ஆற்றிய சொற்பொழிவு...


மதம் ஒரு தேவையா...?.

விவேகானந்தர்...
குருட்டு நம்பிக்கை என்ற பொருளில் எந்த நம்பிக்கையும் உண்மையான மதத்தில் கிடையாது. எந்த பெரிய போதகரும் அப்படி போதித்ததில்லை. சீரழிவின் காரணமாகத்தான் இது நிகழ்கிறது. மூடர்கள் தாங்கள் யாராவது ஒரு பெரிய மகானின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு அதற்குரிய அதிகாரம் இல்லாவிட்டாலும்கூடக் கொள்கைகளை அப்படியே நம்பும்படி மக்களுக்கு உபதேசிக்கிறார்கள். எதை நம்புவது? கண்மூடித்தனமாக நம்புவது மனிதனை கீழ்நிலைக்கே கொண்டு செல்லும். வேண்டுமானால் நாத்திகர்களாக இருங்கள், ஆனால் கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள். ஏன் உங்களை மிருக நிலைக்கு இழிவு படுத்த வேண்டும்? அதனால் நீங்கள் உங்களை மட்டும் கெடுத்துக் கொள்ளவில்லை, நமுதாயத்தையும் கெடுக்கிறூர்கள், உங்கள் பின்னால் வரப்போகிறவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

எழுந்து நில்லுங்கள், பகுத்தறிவுடன் பாருங்கள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள், நம்புவதல்ல மதம். மதம் என்பது இருப்பதும் ஆவதும். அதுதான் மதம். அந்த நிலையை அடைந்தால் தான் உங்களுக்கு மதவுணர்வு இருக்கிறது என்பது பொருள். அதற்கு முன்பு நீங்கள் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் அல்ல. புத்தர் பெருமான் கூறியது போல், நீங்கள் கேட்டதை நம்பாதீர்கள், தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வந்த கொள்கைகள் என்பதற்காக நம்பாதீர்கள், பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள், யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக நம்பாதீர்கள், பழக்கத்தால் உங்களுக்கு பிடித்துப்போனவை என்பதற்காக நம்பாதீர்கள், உங்கள் ஆச்சாரியர்களும் பெரியவர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள். சிந்தித்து பாருங்கள் சீர்தூக்கிப் பாருங்கள், அதனால் வருகின்ற முடிவு பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமானால், அது எல்லோருக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதன்படிச் செல்லுங்கள்


(மேலே விவேகானந்தர் குறிப்பிட்டது போல் சில விஷமிகள் ஆன்மிகவாதிகள் போல் வந்து (இணையத்திலும்) மூடநம்பிக்கைகளை பரப்புகிறார்கள். அதை அவரே எதிர்க்க சொல்கிறார்.)