Search This Blog

24.3.10

இராமநவமி பக்தர்களே சிந்திப்பீர்!



இன்றைக்கு (24.3.2010) இராமன் பிறந்த நாளாம்! ஸ்ரீ இராம நவமி என்ற பெயரே, தமிழர்களுக்கும், அக்கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பதைக் காட்டும். கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று கூறும் கடவுள் நம்பிக்கையாளர்கள் பக்தர்களின் மனக்குழப்பம் மலைபோன்றது என்பதற்கு இந்தக் கடவுள்களின் பிறந்த நாள் நிகழ்வுகளே போதுமானது ஆகும்.

ஸ்ரீராமநவமி

கிருஷ்ணஜெயந்தி (கோகுலாஷ்டமி)

விநாயகர் சதுர்த்தி இப்படிப் பலப்பல.

கேட்டால் ஆண்டவன் பூமியில் அவதரித்தார். ஆகவே இந்நிலை பிறப்புகளைக் கொண்டாடும் நிலை என்ற ஒரு பொய்ச் சமாதானத்தைக் கூறுவார்கள். அப்படியானால் விஷ்ணு - திருமால் - போன்று ஏன் சிவன் 10 அவதாரங்களை எடுக்கவில்லை? என்று கேட்டால் பதில் வராது!

10 அவதாரங்களிலேயே மிக அதிகமாக மக்களிடம் பிரபலமாக்கப்பட்ட அவதாரங்கள் கதைகள் இராமனுடையதும், கிருஷ்ணனுடையதும்தான்.

முதலில் இராமன் காரணம், அந்த புருஷோத்த இராமனின் முக்கியப் பணி பார்ப்பன வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்றவும், பெண் அடிமைத்தனத்தைப் பேணிக் காப்பாற்றவும், ஆன பல தர்மங்கள் பரப்புவதற்குப் பயன்படும் என்பதால்தான்!

அமைதியான நாட்டில், இன்று நம் மக்கள் மத்தியில் அமளி, துமளி, கொலை, கொள்ளை, மதச்சண்டையில் மண்டை உடைதல் எல்லாம் நிகழ்வது, இராமன் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்று முஸ்லிம் மதத்தினரை வம்புக்கு அழைத்ததால்தானே!

தீவிரவாதத்திற்கு உரமிடுவது இந்து மதத்தின் பேரால் பார்ப்பன வெறி அமைப்புகள் நடத்தும் அரசியல்தானே!

ஸ்ரீராமநவமி கொண்டாடுவோருக்கு 1928 லேயே அதாவது 82 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு வார ஏடு மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு இன்றுவரை எவரும் பதில் அளித்ததே இல்லை!

1928 இல் வடநாட்டு சர்தார் வல்லபாய் படேல் (இவர் பார்ப்பனரல்லாதவராக இருந்தாலும்) பார்ப்பன இந்து மதவெறியராக இருந்து, காந்தியாரிடமே உண்மையாக அவர் வாழ்ந்தபோதும் சரி, மறைந்த காந்தியார் பின்னரும் சரி இல்லாது, பிரதமர் நேருவுக்குப் பின், துணைப் பிரதமர் தகுதியில் வாழ்ந்த ஒருவர்; மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய India win Freedom என்ற நூலில் இந்த உண்மையை மனம் நொந்து கொட்டியுள்ளார் அபுல்கலாம். பார்ப்பனர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேச வைத்து, பத்திரிகை விளம்பரத்தை சுயமரியாதை இயக்கத்திற்குத் தாராளமாகத் தந்தனர்!

அதற்கு ஒரு தலையங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் (1928 இல்) எழுதியது ஸ்ரீராமநவமி கொண்டாடுவோருக்கும் பொறி தட்டும் கேள்விகளாகும்!

இதோ தந்தை பெரியார் தம் சிந்தனையைத் தூண்டும் கேள்விக்கணைகள்:

தவிர இராமனையும், சீதையையும் சுயமரியாதை இயக்கம் இழித்துச் சொல்கிறது என்று திரு. படேல் சொல்லியிருக்கிறார்.

எந்த இராமனையும், சீதையையும் என்று திரு. படேல் சொல்லி இருந்தால் யோக்கியமாக இருந்திருக்கும்.

(1) பார்ப்பான் காலில் விழுந்த இராமனையா?

(2) மாமிசம் சாப்பிட்ட இராமனையா?

(3) கொலை செய்த (சம்பூகனை, வாலியை) இராமனையா? பார்ப்பனரல்லாத சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளைத் தோத்திரம் தபசு செய்ததற்காகக் கொன்ற இராமனையா?

(4) சுயநலத்திற்காக தம்பி பேச்சைக் கேட்டுக்கொண்டு, நியாய அநியாயம் பார்க்காமல் பாரபட்சமாய் அண்ணனை (வாலியை)க் கொன்ற இராமனையா? (அதுவும் மரத்திற்குப் பின் மறைந்திருந்து).

(5) வருணாசிரமத்தை ஆதரித்த இராமனையா?

(6) கடைசியாகப் பெண்ஜாதி (சீதை) நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்த இராமனையா?

எந்த இராமனை, எந்த இராமனை? என்று படேலைக் கேட்கிறோம்.

அதுபோல நாம் குற்றம் சொல்லும் சீதையும்,

(1) இராமாயண சீதையா? அல்லது

(2) காந்தியுடைய வேறு சீதையா? என்பதைச் சொல்லிவிட்டால் ஒரு வரியில் ஒழிந்துபோகும்! அதுவரை இராமன் இழிவும், சீதை குற்றமும் மூடி மறைக்க முடியாதென்று கண்டிப்பாய் சொல்வோம்.

இதைச் சொல்லி பாமர மக்களைக் கிளப்பி விடுவதற்காக சுயமரியாதை இயக்கம் சிறிதும் பயப்படாது என்று சொல்லுவோம்!

என்னே அருமையான சிந்தனை?

இராமன் சீதை இராமாயணம் இவைகளை வைத்துத்தானே வடநாட்டவர்கள் அரசியல் நடத்த மூலதனம் தேடுகிறார்கள்?

1971 இல் இராமனைச் செருப்பால் அடித்தவர்களோடு (தி.க.வினரோடு) இணைந்த தி.மு.க. கலைஞர் கட்சிக்கா உங்கள் ஓட்டு என்று, காமராசரும், ஆச்சாரியாரும் இணைந்து குரல் கொடுத்தும்கூட, தமிழர்கள் ஏமாறாமல், தி.மு.க.வுக்கு 184 சட்டமன்ற இடங்களைத் தந்து, காங்கிரஸ் பெற்ற 50 இடங்களை 15 ஆக ஆக்கியது எந்த அடிப்படையில்?

தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கம் செய்த பிரச்சாரத்தால்தானே?

அது மட்டுமா? 1992 இல் இந்தியாவின் இதர மாநிலங்கள் மதக் கலவரத்தால் நூற்றுக்கணக்கான கொலை, கொள்ளைகளில் சிக்கித் தவித்த நேரத்தில் தமிழ் நாடுதானே அமைதிப் பூங்கா? மத நல்லிணக்கத்தோடு, சகோதரத்துவத்துடன் இருந்த ஒரே மாநிலம்! திராவிடர் இயக்கச் சாதனைதானே!

எனவே, நாட்டை அப்போதும் சரி இப்போதும் சரி காப்பாற்றியது காப்பாற்றுவது அயோத்தி இராமன் அல்ல!

சுயமரியாதை இயக்கம் கண்ட ஈரோட்டு இராமன் என்ற இராவணன்தான் என்பது வரலாற்றின் பதிவு அல்லவா?

எனவே, ஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே, சம்பூகனின் வதையைக் கொஞ்சம் சிந்தியுங்கள்.

காலாவதியான மருந்துகளைவிட மிகவும் ஆபத்தானது காலாவதியான கடவுள், மதக் கருத்துகளை ஏற்பது மூளைக்கு!


-------------------- 24-3-2010 " விடுதலை” யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

1971-ல் கழக வெற்றிக்கு பெரியார் மட்டுமே காரணம் அல்ல. எம்.ஜி.ஆர் அவர்களின் சினிமா கவர்ச்சியும், இந்திரா அம்மையாரின் கூட்டணியும் பிரதான காரணங்கள். மேலும் இந்திய விடுதலை (1940_50) சமயத்தில் பிறந்த ஒரு புதிய தலைமுறை,வசனங்களால் ஈர்க்கப்பட்டு, மொழி வெறி ஊட்டப்பட்டு தன் தலைவிதியை மாற்றிக் கொண்டது. அண்ணாவின் அனுதாப அலையும் ஒரு காரணம்.

Unknown said...

சுய மரியாதை இயக்கம் பிறந்த ஈரோட்டில் தான் இன்று கந்து வட்டி கொடுமைகள் அரங்கேறி உள்ளது. அதை பார்ப்பனன் செய்யவில்லை. சாமியார்களின் முகத்திரையை கிழிக்க சென்னையில் பட்டி மன்றம் நடத்தும் தி.க, கந்து வட்டிக்கு எதிராக மாநிலம் தழுவும் போராட்டம் நடத்துவது எப்போது? சுய மரியாதை என்றால் பார்ப்பன/ஹிந்து மத எதிர்ப்பு மட்டும் தானா?குதிரைக்கு சீனிக் கண்ணாடியை போல. பழங்கதைகளை பேசி திரிவதால், இனி வரும் தலைமுறைக்கு உங்களின் மூளைச் சலவை எந்த வித சலனத்தையும் ஏற்படுத்தாது. சம கால, அனைத்து மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளை முன் எடுத்து போராடுங்கள். பிரச்சாரம் செய்யுங்கள்.