ஆசிரமம், யோகா, தியானம் என்ற போர்வைகளில் காவி வேடதாரிகள் நடத்தும் கயமைகளை, சுரண்டல்களைக் கண்டித்தும், இந்தக் குற்றவாளிகள்மீது அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நேற்று நடத்தப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், இந்தப் பிரச்சினையில் ஏடுகள், இதழ்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் நடந்துகொள்ளும் முறையை முக்கியமாகக் குறிப்பிட்டார்.
காவி வேடம் அணிந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப்பெரிய சிந்தனையாளர்கள் போலவும், தத்துவ ஞானிகள் போலவும், உலகை உயர்விக்க வந்த உத்தமர்கள் போலவும், அதற்காகவே அவதரித்தவர்கள் போலவும், அவர்களின் அறிவுரைகள் மக்களை நல்வழிபடுத்த வல்லவை என்பது போலவும் ஒரு பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திவிட்டனர்.
அவர்கள் கூறுவது எல்லாம் ஞானக் கண்களைத் திறந்துவிடும் கருவூலங்களாக கருதி அவர்களின் எழுத்துக்களை ஏடுகளில், இதழ்களில் இடம்பெறச் செய்தனர். ஒவ்வொரு இதழுக்கும் ஆஸ்தான சாமியார்கள் என்கிற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டுவிட்டன.
தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திறந்தால் காலை வேளைகளில் இவர்களின் ஆப்த உரைகளைத்தான் செவிமடுக்க நேர்கிறது.
இவர்கள் நடத்தும் ஆசிரமம், அங்கு நடப்பதாகக் கூறும் யோகா, தியானம் குறித்துப் பக்கம் பக்கமாக படங்களுடன் வெளியிடப்படுகின்றன.
வாழ்வில் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிக் கிடக்கும், இயலாமையாலும், ஆற்றாமையாலும் அமைதியைத் தொலைத்துக் கிடக்கும் மக்களை அந்தக் காவிக் கூடாரங்களின் பக்கம் விரட்டியடித்ததில் இந்த ஊடகங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு.
இத்தகைய தவறுகளை இனிமேலும் செய்யாதீர்கள் என்று ஆர்ப்பாட்டத்தின்போது ஆங்கே வந்த ஊடகக்காரர்களைப் பார்த்து நேரிடையாகவே திராவிடர் கழகத் தலைவர் வேண்டுகோள் வைத்தார். (ஊடகங்கள் இந்தப் பகுதியை மட்டும் இருட்டடித்துவிட்டுச் செய்திகளை வெளியிட்டன என்பது, அவை திருந்தாதற்கான அடையாளமாகும்).
ஏடுகள் வாரந்தோறும் ஆன்மிக இதழ்களை இணைப்பாக வெளியிடுகின்றன. இவையன்னியில் வழக்கமாக வெளியிடும் நாள் ஏடு, வார இதழ்களிலும்கூட ஆன்மிகத்திற்கென்று அளவிறந்த பக்கங்களை ஒதுக்குகின்றன.
தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையில் வீழ்ந்தது மாதிரி ஆகிவிட்டது நமது நாட்டு ஊடகங்களின் போக்கு.
அதனால்தான் இன்றைக்கு 55 ஆண்டுகளுக்குமுன்பே நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையையும் சேர்த்தார் தந்தை பெரியார்.
ஏடுகள், இதழ்கள் வெளியிடும் ஆன்மிகச் சமாச்சாரங்கள், அறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் நன்னடத்தைகளுக்கும் சற்றும் பொருத்தமில்லாத நிலையில், மிகவும் விழிப்பாக.... என்பது நம்பிக்கை... என்பது அய்தீகம் என்று எழுதி பாவ மன்னிப்பை சுலபமாகத் தேடிக் கொள்கிறார்கள்.
அறிவியல் அளித்த அச்சு இயந்திரங்கள் மூலமாக வெளிவரும் இந்த ஊடகங்கள் அறி-வியலுக்கு விரோதமான வேலைகளில் ஈடுபடுகின்றன. அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்புரை செய்கின்றன.
சமூகப் பொறுப்பு இல்லாத இந்தப் பகற்-கொள்ளை தடுத்து நிறுத்தப்படவேண்டும். பணம் கொடுத்து வாங்கும் மக்களைப் பழிவாங்குவது என்ன பண்பாடு? இது எந்த வகையான தொழில் தர்மம்?
தவறுகளை வளர்ப்பதன்மூலமும் வருவாய்; தவறுகளைப் பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பதன்மூலமும் வருவாய்.
பக்தியால் மண்ணாங்கட்டியாகிவிட்ட மக்களை இந்த ஊடகக்காரர்கள் தாங்கள் விரும்பிய வகையில் உருமாற்றும் பொம்மைகளாக ஆட்டிப் படைப்பது வெட்கக்கேடேயாகும். தேவை மாற்றம்!
------------------ “விடுதலை” தலையங்கம் 11-3-2010
3 comments:
பெரியார்டசனைப் பற்றி எழுதாமல் விட்ட காரணம் என்ன?
ஏன் தீவிர கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட மனிதர்களை மதம் பால் செல்கிறார்கள்?
அரசியலா? உளவியலா?
நாத்திகம் என்பது என்ன புகழுக்காகவா?
1
1
Post a Comment