நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லையென்றும், மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும் இப்போது வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த நிலைமையில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் அதாவது பார்ப்பனர்களால், சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப்படுகிறதும் 100க்கு 97 பேருக்கு மேலான எண்ணிக்கை கொண்ட நாம் இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும், சூத்திரன் என்கிற பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசிமக்கள் என்னும் கருத்தையே கொண்டது என்றும், பஞ்சமன் என்கிற பதம் ஜீவவர்க்கத்தில் பூச்சி, புழு, பன்றி, நாய் கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமைகூட இல்லாததும் கண்களில் தென்படக்கூடாததும் தெருவில் நடக்கக் கூடாததுமான கொடுமை தத்துவத்தைக் கொண்டது என்றும், மிலேச்சர்கள் என்பது துலுக்கர், கிறிஸ்தவர், ஐரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை குறிப்பது என்றும், அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி எறிந்து விட வேண்டிய கருத்தைக் கொண்டதென்று உண்டாக்கி அந்தப்படியே பார்ப்பனர்களால் ஆதாரங்களும் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளப்பட்டு அது தான் இந்து மதத்திற்கு ஆதாரமென்று காட்டப்படுகிறதென்றும் அநேக தடவைகளில் ஆதார பூர்வமாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். அதற்காக எவ்வளவோ கிளர்ச்சிகளும் செய்து வந்திருக்கிறோம்.
இவ்வளவும் நடந்துவரும் இந்தக்காலத்தில் இன்னமும் முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு முதலிய ஸ்தாபனங்கள், சூத்திரன், பஞ்சமன், பிராமணன் என்னும் பதங்களை உபயோகப்படுத்தி வருகிறதென்றால் இதன் தலைவர்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை உணர்ச்சி, சுத்த ரத்த ஒட்டம் ஆகியவைகள் இருக்கிறதா என்று கேட்கிறோம்.
சமீபத்தில் மதுரையில் கடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் பொது ஜனங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியே இதுதான். இப்படியிருக்க அம்மதுரைப் பட்டணத்திலே மங்கம்மாள் சத்திரங்களில் சூத்திரன் என்னும் வாசகங்கள் கொண்ட போர்டுகள் எழுதி தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இது எவ்வளவு அநியாயம்? ஆதலால் மதுரை ஜில்லா போர்டாரோ முனிசிபாலிட்டியாரோ உடனே இதை கவனித்து இவ்வித இழி மொழிகள் கொண்ட போர்டுகளையும் வாசகங்களையும் அப்புறப்படுத்தி இவ்வித வித்தியாசங்களையும் ஒழித்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்.
இதுபோலவே இன்னும் மற்ற ஊர்களிலும் இம்மாதிரி வாசகங்களோ சொற்களோ காணப்பட்டால் அதை உடனே அடியோடு நிவர்த்திக்க வேண்டியது உண்மையான மக்களின் முதல் கடமை என்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
-----------------------தந்தைபெரியார்- ”குடிஅரசு” - கட்டுரை - 06.02.1927
2 comments:
அய்யா தந்தை பெரியார் காலத்தில் நானும் வாழ்தேன்
என்று நினைக்கும்போது மனது பெருமையாக இருக்கிறது .
வாழ்த்துக்கள் அய்யா.
Dear Tamiloviya,
அகத்தியர் இருந்தார் என்பதே பெரியார் உட்பட தமிழ் அறிஞர்களால் பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில்,
“Wikipedia” வில் “Iyer” என்ற தலைப்பில் “”Agathiar, usually identified with the legendary Vedic sage Agastya is credited with compiling the first rules of grammar of the Tamil language.[200] . Tolkappiar who wrote Tolkappiam, the oldest extant literary work in Tamil is believed to be a Tamil Brahmin and a disciple of Agathiar. Moreover, individuals like U. V. Swaminatha Iyer and Subramanya Bharathi have made invaluable contributions to the Dravidian Movement” உள்ளது.
அகத்தியர் இருந்தார் என்பதே பெரியார் உட்பட தமிழ் அறிஞர்களால் பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் wikipedia எனும் one of the most reliable information source இல் இப்படி உள்ளது வருந்தத்தக்கது.
தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்
Post a Comment