
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான
நாளை இரயில் மறியல்: தடையை மீறிப் போராட்டம்!
தமிழர் தலைவர் அறிவிப்பு
ஈழத் தமிழர்களுக்காக திராவிடர் கழகம் நாளை நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறிப் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கை வருமாறு:
போர் முடிந்தும் ஈழத்தில் தமிழர்களின் துயரத்திற்கு முடிவில்லை என்ற பரிதாப நிலைதான் தொடர்கிறது. இன்றும் முள்வேலி முகாமுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள்; தமிழன் என்ற உணர்வால் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ளவர்கள் அனைவரும் துடிக்கின்றனர்.
ஆனால், கொடுங்கோலன் ராஜபக்சே மட்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தமிழன் என்ற அடையாளம் எந்த வகையிலும் மிச்ச சொச்சங்களின்றி அழிக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருவது வெளிப்படை.
இன்னொரு வேதனையான சேதி. இலங்கையின் மூத்த தமிழ்ப் பத்திரிகையாளரான ஜே.எஸ். திசைநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையை கொழும்பு உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு என்ற ஏட்டில் கட்டுரை எழுதியதுதான் இவர் செய்த மிகப்பெரிய குற்றமாம். இதற்காக 20 ஆண்டு தண்டனையாம்!
என்ன கொடுமை இது! இவையெல்லாம் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் _ பார்ப்பன ஊடகங்களின் கண்களுக்கு தெரியவே தெரியாதா? இதுவே பூணூல் திருமேனி என்றால் எப்படி நடந்து கொள்வார்கள்?
மத்திய அரசின் இறையாண்மையே இலங்கை அரசின் நடவடிக்கையால் கேள்விக்குறியாகியிருக்கிறது. இலங்கை ராஜபக்சே அரசு சீனாவுக்குத் தளம் தந்து, பாகிஸ்தானின் துணை கொண்டு சவால் விடும் நிலையில்கூட, மத்திய அரசு பொறுமை காட்டுவது வேதனைக்குரியதாகும்.
எனவே, எல்லாவற்றையும் உலகத்திற்குக் கொண்டு செல்லவும், ஆறு கோடி தமிழர்களின் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்தவும் இந்த மறியல் போராட்டம்.
இந்த நிலையில், எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றிட, வாழ்வுரிமைக்கு உறுதிகிட்ட மத்திய அரசு நியாயமான முறையில் இலங்கை அரசுக்கு உண்மையான அழுத்தத்தைக் கொடுக்கச் செய்யவே நாளை திராவிடர் கழகம் நடத்தும் இரயில் மறியல் போராட்டம்!
தடையை மீறுவோம்!
எதிர்பார்த்தபடி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. ஆனாலும், தடையை மீறி போராட்டம் நடக்கும்.
நாளை காலை 9 மணிக்கு கழகத் தோழர்களே, இன உணர்வு கொண்ட பெருமக்களே, பெரியார் திடலில் கூடுங்கள்! கூடுங்கள்!!
ஈழத் தமிழர்கள் படும் அவதிகளுக்கு முடிவு கட்ட போராடுவோம்! போராடுவோம்!! தொடர்ந்து போராடித்தான் தீரவேண்டும். இது நமது கடமை!
வாரீர்! வாரீர்!!
நாளை களத்தில் சந்திப்போம், வாரீர்!!!
------------------- "விடுதலை" 1.9.2009
0 comments:
Post a Comment