Search This Blog

18.9.09

பெரியாருடன் ஆசிரியர் வீரமணி அவர்களின் முதல் சந்திப்பு

பெரியாருடன் ஆசிரியர் முதல் சந்திப்பு

1944-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி...

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருக்-கிறார்கள். இளவயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு. ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்படுகிறது.

மாநாட்டிற்கு விருதுநகர் திரு. வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா; திராவிட நாட்டுப் படத்திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்-புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம், எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு. ஏ.பி.-ஜனார்த்தனம், எம்.ஏ. அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம். அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்-களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்து பேசிய அண்ணா அவர்கள் என் பேச்சை வைத்தே துவக்கினார். இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மாநாடு இடைவேளைக்காகக் கலைந்தது. கடலூர் முதுநகரில் (O.T.யில்) மதிய விருந்து தலைவர்களுக்கு; என் சொந்தப் பகுதியான அங்கு, பிரமுகர் ஒருவர் தந்த விருந்துக்கு நானும் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அய்யா என்னை அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.


---------------------நன்றி: "விடுதலை" 16-9-2009

0 comments: