Search This Blog

14.9.09

ஜாதி மறுப்பு இணையர்கள் குழந்தையின் ஜாதியும், நீதிமன்ற தீர்ப்பும்




* கல்வி நிறுவனங்களில் ஜாதி உணர்வுகளைத் தடுத்திடுக!
* ஜாதி மறுப்புத் திருமண இணையர்களின் குழந்தைகளுக்குக் கூடுதல் சலுகைகள் அவசியம்! *தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுக!

பாடத் திட்டத்தில் பெரியார், அம்பேத்கர் கருத்துகள் அவசியம்
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!
வடசென்னை ஜாதி ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்
சமூகசீர்திருத்தத்துறைசெயல்படட்டும்!


திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் வடசென்னை, புதுவண்ணையில் நேற்று (13.9.2009) நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஜாதி ஒழிப்புக்கான திட்டங்கள் தரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

ஜாதியை ஒழிக்க
அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திடுக


மனிதன் பகுத்தறிவு உள்ளவன், மனிதநேயம் உள்ளவன் என்பதற்கு அடையாளமே மற்ற மனிதனை நேசிப்பதிலும், அன்பு செலுத்துவதிலும், உதவி செய்வதிலும்தான் இருக்கிறது.

அதற்கு மாறாக ஜாதி என்று சொல்லி மனிதனை மனிதன் வெறுக்கும், பேதப்படுத்தும் கொடுமையிலிருந்து, அநாகரிகத்திலிருந்து மனிதன் விடுதலை பெறவேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் ஜாதி ஒழிப்பைத் தம் வாழ்வின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு பாடுபடவேண்டும் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2:

கல்வி நிறுவனங்களில் ஜாதி உணர்வு தலையெடுப்பை தடுத்திடுக!

கல்லூரிகளிலும், பிற கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் ஜாதியின் அடிப்படையில் குழு சேர்வதும், அதற்கு ஆசிரியர்கள்கூட சில இடங்களில் ஆதரவு தருவதும் மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும்.

மாணவர்களின் பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்களின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை கூடி, கல்லூரி சூழல், நிலை, வளர்ச்சிபற்றி கலந்து ஆலோசிக்கும் ஒரு முறையை உருவாக்கலாம் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3:

இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன்வரவேண்டும்

ஜாதி மறுப்புத் திருமணத்தை செய்துகொள்ளவேண்டும் என்றும், விதவையர் மற்றும் மணவிலக்குப் பெற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் இளைஞர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:

சமூக சீர்திருத்தத் துறை சிறப்பாக செயல்பட வைக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள்

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கியுள்ள சமூக சீர்திருத்தத் துறையின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும் வகையில் வேகப்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5:

பாடத் திட்டத்தில்
ஜாதி ஒழிப்புச் சிந்தனை தேவை!


புதிய தலைமுறையினர் மத்தியில் ஜாதி உணர்வு அரும்பாமல் இருக்கவேண்டுமானால், கல்வித் திட்டத்தில் அதற்கான சிந்தனைகள் விதைக்கப்படவேண்டும் என்றும், குறிப்பாக ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர்தம் வாழ்க்கை வரலாற்றையும், சமூகச் சிந்தனைகளையும் பாடத் திட்டத்தில் கண்டிப்பாக இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6:

ஜாதி மறுப்பு இணையர்கள் குழந்தையின் ஜாதியும், நீதிமன்ற தீர்ப்பும்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரின் ஜாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட்டு வந்த நிலைக்கு மாறாக, தந்தையின் ஜாதியைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் _ இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்குலி மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. (டிசம்பர் 2008).

குழந்தை வாழும் முறையை வைத்து ஜாதி கணிக்கப்படவேண்டும் என்று கூறுவதும், நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாகும்.

தாய் அல்லது தந்தை ஜாதியை விருப்பத்திற்கேற்பப் பதிவு செய்துகொள்ளலாம் என்ற பழைய நிலையே தொடர அனுமதிக்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பெண்ணுரிமைக் கண்ணோட்டத்திலும், இட ஒதுக்கீடுக் கண்ணோட்டத்திலும் இது மிகவும் முக்கியம் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 7:

ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு தேவை

ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணம் என்பதும் மிக முக்கியமானது என்பதால், ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு செய்திட இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8:

திராவிடத்தால் வீழ்ந்தோமா?

அண்மைக்காலமாக திராவிடம் என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் திட்டமிட்ட வகையில் ஒரு பிரச்சாரம் கட்டழ்வித்துவிடப்படுகிறது. தந்தை பெரியார் அவர்களை மதிப்பதாகவும், பின்பற்றுவதாகவும் கூறிக்கொண்டே, தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கு மாறாக சிலர் செயல்பட்டும் வருகின்றனர்.

இவர்களின் திராவிட இயக்க எதிர்ப்புப் பிரச்சாரம் பார்ப்பனர்களை ஊடுருவச் செய்வதற்கு வசதி செய்துகொடுக்கும் மோசமான ஏற்பாடு என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

திராவிட இயக்கத்தின் பார்ப்பன எதிர்ப்பும், பிரச்சாரமும், போராட்டங்களும், தொண்டும்தான் தமிழர்களுக்குப் பொதுவான உரிமைகளையும், கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடத்தையும் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பையும் முறியடித்திருக்கிறது என்னும் வரலாற்று உண்மையை இம்மாநாடு திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கும், திராவிட இயக்கந்தான் அளப்பரிய தொண்டினைச் செய்திருக்கிறது என்பதையும் இம்மாணவர் கழக மாநாடு அறுதியிட்டு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 9:

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

தமிழர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டவேண்டும்; தந்தை பெரியார் பிறந்த நாளைத் தமிழர்களின் தேசியத் திருநாளாக வீட்டுக்கு வீடு கொண்டாட வேண்டும் என்றும், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா பிறந்த நாள்களைக் கொண்டாடவேண்டும் என்றும், மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் புரட்சிகரமாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலும், தமிழர்களின் வரலாற்று அடிப்படையிலும் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கருதி, அறுவடைத் திருநாளாம் பொங்கல் பொன்னாளைக் கொண்டாடவேண்டும் என்றும் இம்மாநாடு தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறது.

எக்காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட ஆரிய மூடப் பண்டிகைகளைத் தமிழர்கள் கொண்டாடக் கூடாது என்றும் இம்மாநாடு தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10:

சேது சமுத்திரத் திட்டத்தை
செயல்படுத்துக!


தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை _ மதக் காரணங்கள் உள்ளிட்ட எந்தக் காரணங்களின் பேராலும் முடக்கக் கூடாது என்றும், காலதாமதமின்றி உடனடியாக அந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11:

கல்விக் கடன் வழங்குவதில் உள்ள சிக்கல்களை நீக்குக!

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் தாராளத் தன்மை கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு இம்மாநாடு பாராட்டுதலைத் தெரிவிக்கிறது. ஆனால் நடைமுறையில் பல வங்கி அதிகாரிகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்தடிக்கும் போக்கு நீடித்து வருவதை மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு இம்மாநாடு கொண்டு வர விரும்புகிறது. இதில் உள்ள நடைமுறை இடர்ப்பாட்டைக் களைந்திட ஆவன செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 12:

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காப்போம்!

ஈழத்தில் போரை முடித்த பிறகும் விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாதிகளை அழித்து விட்டோம் என்று கூறிவிட்டு, இப்போது தமிழினத்தை முற்றாக ஒழிப்பது என்னும் திட்டத்தோடு செயல்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை விடுவித்து, அவர்களின் சொந்த பகுதிகளுக்கு வீடுகளுக்குச் செல்லும் வாழ்வுரிமையை மீட்டுத்தர இந்திய அரசு சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் உதவிட முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஈழ முகாம்களில் குழந்தைகள், சிறுவர்கள் படும் அவதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக அய்.நா.வின் யுனிசெப் அலுவலக மூத்த அதிகாரி ஜேம்ஸ் எல்டரை இலங்கை அதிபர் ராஜபக்சே வெளியேற்றியதைக் கண்டிக்காமல் இந்திய அரசும், அய்.நா.வும் மவுனம் சாதிப்பதற்கு இம்மாநாடு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பத்திரிகையாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை இம்மாநாடு கண்டிப்பதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், உலக நாடுகளை மனித உரிமை மற்றும் ஊடக அமைப்புகள் இதற்காக அழுத்தமாகக் குரல் கொடுக்கவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 13:

கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும்
திராவிடர் கழக மாணவரணி அமைப்புகளை உருவாக்குதல்


மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவு, நல்லொழுக்கம், சமத்துவ உணர்வு, கல்வியில் அக்கறை ஏற்பட கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் திராவிடர் மாணவர் கழகத்தை ஏற்படுத்தி நெறிப்படுத்துவது என்று இம்மாநாட்டில் தீர்மானிக்கப்படுகிறது.

-----------------------"விடுதலை" 14-9-2009

0 comments: