Search This Blog

8.9.09

ஆணுக்குப் பெண் கீழானவர்கள் அல்லர். இருவரும் சமமானவர்களே!


உழைத்துப் பாடுபடுபவர் கீழ்ஜாதியாவதா?

எல்லோரும் நல்ல உழைப்பாளிகள்! நீங்கள் நிலத்தை உழாவிட்டால் உணவு உற்பத்தி நடக்காது. நீங்கள் கட்டடம் கட்ட உழைக்காவிட்டால் வீடு இருக்காது. நீங்கள் நெய்யாவிட்டால் மனிதன் அம்மணமாகத்தான் திரிய வேண்டும். இவ்வாறு அத்யாவசியமான எல்லாத் தொழிலும் செய்பவர்கள் நாம்தான்.

இப்படி இருந்தும் நாம் ஏன் கீழ்ச்ஜாதி? உழைக்காது – ஊரான் உழைப்பை உண்பவன் ஏன் மேல்ஜாதி? நாம் சிந்திக்க வேண்டாமா?

தோழர்களே! நீங்கள் அரசாங்கத்தாரால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று ஆக்கப்பட்டுள்ளது. அவன் அவன் எங்கள் ஜாதியை பிற்படுத்தப்பட்டவர் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று போட்டிப் போட்டுக் கொண்டு கேட்கின்றான்.

பிற்படுத்தப்பட்டவர் என்றால் என்ன அய்யா அர்த்தம்? கல்வியிலே பொருளாதாரத்திலே மற்ற மற்றக் காரியங்களிலே கீழானவர்கள் முட்டாள்கள் என்பது தானே அர்த்தம்?


உழுபவன் இல்லையானால் மனிதர்களுக்கு உணவு இல்லை. நெய்பவன் இல்லையானால் மனிதன் அம்மணமாகத் திரிய வேண்டும். கக்கூஸ்காரன் (மலக்கழிவு எடுப்பவர்) இல்லையானால் ஊர் நாறிப் போகும். இப்படிப்பட்ட மக்களா – சமூதாயத்துறையில் இழிமக்களாக – பிற்படுத்தப்பட்ட மக்களாக இருப்பது?

இந்த நாட்டில் பார்ப்பான் இல்லாவிட்டால் என்ன அய்யா கெட்டுப் போகும்? என்ன தொழில் நின்று போகும்?

இத்தகையவன் சமூதாயத் துறையின் உயர்ந்தவனாக முற்பட்ட சமூகத்தானாக ஏன் இருக்க வேண்டும்?


உழைக்கும் மக்கள் பிற்பட்ட மக்களாகவும், உழைக்காதவன் முற்பட்ட மக்களாகவும் ஏன் இருக்க வேண்டும்? என்று கேட்டால் அது கடவுள் அமைப்பு, அவன் அவன் புண்ணிய பாவத்தின் பலன் என்று கூறுவான்.

இவ்வாறு கடவுள் பிறப்பித்து இருப்பானேயானால் இப்படிப்பட்ட கடவுளை நாம் கும்பிடலாமா? சாஸ்திரம் சொல்லுமானால் நாம் இந்த சாஸ்திரத்தை மதிக்கலாமா?

தோழர்களே! நாம் இழிமக்கள் என்பதைத் திருமணம் மூலம்தான் பார்ப்பான் ஒத்துக் கொள்ளச் செய்கின்றான்! எப்படி என்றால் நாம் பார்ப்பானைத் திருமணத்துக்கு அழைப்பது அவன் உயர்ஜாதி. அவன் வந்து செய்தால் மேல் என்று தானே அழைக்கின்றோம்.


இதன் மூலம் நாம் கீழ்ச்ஜாதி என்பதை ஒத்துக் கொள்ளுகிறோம். மேலும் பார்ப்பான் நம் வீட்டு விசேஷத்துக்கு வந்தால் நம் வீட்டில் சாப்பிட மாட்டான். சாப்பிட்டால் தீட்டு என்கின்றான். எனவே பச்சையாக அரிசி, பருப்பு, மிளகாய், புளி எல்லாம் மூட்டைக் கட்டி அனுப்பி வைக்கின்றோம். மானம், வெட்கம் இருந்தால் நீ கீழ்ஜாதி. உன் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்பவனுக்கு இப்படிக் கொடுப்பானா?

கீழ்ஜாதிக்காரர்களாகிய நமக்குத் திருமணம் கிடையாது; நமக்குப் பார்ப்பான் திருமணம் செய்து வைத்தால் தோஷம்; முதல் மூன்று ஜாதிக்குத்தான் அவன் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

எனவே கீழ்ஜாதிக்காரர்களை திருமண காலம் வரையிலாவது பூணுல் போட்டு பார்ப்பானாக்கி திருமணம் செய்து வைக்கின்றான்.

இவ்வாறாக புரோகித முறைப்படி நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாம் இழிமக்கள் என்று ஆவதாலும், மூடநம்பிக்கை அர்த்தமற்ற சடங்குகள் முறையினை இவற்றிற்கு நம் சமூகம் இரையாவதாலும் இம்முறையினை ஒழிக்க வேண்டும் என்று சிந்தித்துத்தான் இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஏற்ற முறையில் திருமண முறையினை ஏற்படுத்திக் கொண்டு உள்ளோம்.

புரோகித முறையில் பெண்களை ஒரு ஜீவன் (உயிர்) என்றுகூட கருதப்படுவதில்லை. பெண்கள் அடிமைகளாகக் கருதப்பட்டு வந்து இருக்கின்றது. எங்கள் முறைப்படி ஆணுக்குப் பெண் கீழானவர்கள் அல்லர். இருவரும் சமமானவர்களே.

தோழர்களே! எங்கள் இயக்கம் நாட்டில் தோன்றி இராவிட்டால் பெண்களுக்கு இன்று கிடைத்துள்ள கல்வி, சொத்து, உத்தியோகம், பதவி இவற்றில் உரிமை கிடைத்து இராது. இன்று ஆண்கள் பல மனைவிகளை மணக்கவும், "தேவடியாளை (தேவதாசி ஒழிப்புச் சட்டம்) மனைவியாக இருக்க வைத்துக் கொண்டால்" அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றால் எங்கள் பிரச்சாரத்தின் பலனேயாகும்.


-----------------06-09-1962 அன்று புதுவேட்டக்குடி திருமணத்தில் தந்தைபெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 09-09-1962.

0 comments: