Search This Blog

8.9.09

பெரியார் படத்துக்கு விருது


பெரியார் படத்துக்கு விருது

2007 ஆம் ஆண்டுக்கான மாநில மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களுள் பெரியார் திரைப்படம் சிறந்தது என்ற தேசிய விருது கிடைத்துள்ளது என்பது மிகவும் மகிழத்தக்கதாகும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், பகுத்தறிவாளர்களும், மனிதநேயக்காரர்களும் இதனை ஒரு வெற்றித் திருவிழாவாகக் கொண்டாடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவையும் சேர்த்திருந்தார் தந்தை பெரியார். அதற்குக் காரணம் சினிமா என்ற அந்த அமைப்பின்மீது ஏற்பட்ட சினத்தால் அல்ல; சினிமா என்கிற ஆற்றல்மிக்க அறிவியல் சாதனம் மூட நம்பிக்கைகளையும், பிற்போக்குத்தனங்களையும் மக்கள் மனதில் திணிக்கும் ஒரு மோசமான செயலில் ஈடுபடுகிறதே என்கிற கோபத்தினால், சமூகத்தின்மீது அவர் கொண்டிருந்த ஒப்பிட முடியாத அக்கறையினால்தான் சினிமாவை நோயின் பட்டியலில் வைத்தார் அந்தப் பகுத்தறிவுப் பகலவன்!

அந்தப் பகுத்தறிவுப் பகலவனைப் பற்றியே திரைப்படம் என்கிறபோது, அது மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி சிந்தனைகளையும், இளைஞர்கள் மத்தியில் எழுச்சியையும், பெண்கள் மத்தியில் புதிய சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது என்பது சொல்லாமலே விளங்கும். பெரியார் திரைப்படத்தைப் பார்த்த பல லட்சக்கணக்கான பொதுமக்களும், புதிய தலைமுறையினரும் பெரியாரைப்பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்ளும் பெரும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஊடகங்கள் எல்லாம் பெரியார் கொள்கைகளை இருட்டடிக்கும் நிலையில், அப்படியே வெளியிட்டாலும் திரிபாக வெளியிடும் தன்மையில், உண்மையான பெரியாரை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பெரியார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பயன்பட்டிருக்கிறது.

ஆன்மிகவாதியான ரஜினிகாந்த் போன்றவர்கள் மத்தியில்கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இதன் வெற்றியை எளிதில் தெரிந்துகொள்ளலாமே!

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு காலத்திற்கேற்ற தன்மையில் பிரச்சாரப் பணிகளைப் பல வகைகளிலும் முடுக்கிவிட்டார் திராவிடர் கழகத் தலைவர். இயக்க வெளியீடுகளைப் பொலிவுடன் அலை அலையாக வெளியிட்டதுடன், பெரியார் நகர்வுப் புத்தக சந்தை பேருந்துமூலம் தமிழ்நாடு முழுவதும் கொள்கைப் பரப்பு நூல்கள் பரவிட வழிவகை செய்யப்பட்டது. புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் புத்தக விற்பனை நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

விடுதலை புதிய பொலிவுடன் எட்டு பக்கங்களுடன் இரண்டு இடங்களில் வெளியிடும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

பெரியார் வலைக்காட்சி உருவாக்கப்பட்டது. இந்த வகையில் மிகப்பெரியஅளவில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய அளவுக்கு பெரியார் திரைப்படம் எடுக்கும் முடிவை மேற்கொண்டு, அது வெற்றிகரமாகவும் செய்து முடிக்கப்பட்டது என்றால், அது சாதாரணமானதல்ல.


தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மகத்தான செயல்முறைகளில் பெரியார் திரைப்படம் என்பது முக்கியமான பாத்திரத்தை வகிக்கக் கூடியதாகும்.

இந்தத் திரைப்படத்துக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 95 லட்சத்தை பெரியாரின் மதிப்புறு மாணவரான மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்போடு பரிவோடு வழங்கியதை நன்றியுடன் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்தப் படம் வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதில் முதலமைச்சர் அவர்கள் காட்டிய ஆர்வமும், ஒத்துழைப்பும் அசாதாரணமானவை!

இனமுரசு சத்யராஜ் அவர்கள் கொள்கை உணர்வோடு ஒரு பைசாகூட பெற்றுக்கொள்ளாமல், தம் வாழ்நாள் சாதனையாக பெரியாராக நடிக்கும் பேறு கிடைத்ததே என்ற மகிழ்ச்சியோடு, தம்மை அர்ப்பணித்துக் கொண்டு நடித்ததை என்னவென்று சொல்ல!

மற்ற நடிகர்களும், நடிகைகளும், திரைப்படம் தொடர்பான அத்தனைக் கலைஞர்களும் சரி, தொழில்நுட்பக்காரர்களும் பாராட்டுக்கும், பெருமிதத்துக்கும் உரியவர் ஆவார்கள்.

இயக்குநர் ஞான. இராசசேகரன் அவர்கள் திரைக்கதை, வசனம் இவற்றைச் சிறப்பாகத் தயாரித்ததோடு சிறப்பாக இயக்கி, இதன்மூலம் பெருமை பெற்றுவிட்டார்.

பெரியார் என்றால் எதிர்ப்புகள், குறுக்குச்சால்கள் இல்லாதிருக்குமா? அவற்றையும் சந்தித்துத்தான் பெரியார் இன்றைய தினம் தேசிய விருதுக்கு உரியவராக ஒளி வீசுகின்றார்.

தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்தின் வெற்றிக்காக பிரச்சாரம், ஆக்கப் பணிகளை மேற்கொண்ட இயக்கத் தோழர்கள், பல்துறைப் பெருமக்கள், திரையரங்க உரிமையாளர்கள் என்று பாராட்டப்பட நன்றி கூறப்படவேண்டியவர்களின் நீண்ட பட்டியல் உண்டு. அந்த வகையில் அனைவருக்கும் பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தகட்டமாக குக்கிராமங்களில் பெரியாரைக் கொண்டு செல்லும் திட்டம் உண்டு. அதனையும் நிறைவேற்றி மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக மாற்றுவோம்.

கடைசியாக, பெரியார் திரைப்படத்தைத் தயாரித்த லிபர்டி கிரியேஷன்ஸ் பொறுப்பாளர்களுக்கு நன்றி! நன்றி!!

பெரியார் திரைப்படத்தை சிறந்த படமாக அறிவித்த குழுவும், அமைப்பும் இதனால் புதிய பெருமையைப் பெறுகிறது. அவர்களுக்கும் பாராட்டுகள்!

------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 8-9-2009

0 comments: