Search This Blog

22.9.09

இராமன், சீதை, லட்சுமணன் உருவங்களை எரித்தது ஏன்?


இராவணன்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தசரா விழாவுக்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே இராவணனுக்கு விழா கொண்டாடி மகிழ்கின்றனர்.

தசராவின்போது டில்லியில் ராம்லீலா மைதானத்தில் தீமையின் சின்னங்கள் என்று கூறி இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் (இந்திரஜித்) ஆகியோர் உருவங்களை எரித்துக் கூத்தாடுகின்றனர். இந்த விழாவில், மதச்சார்பற்ற அரசின் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்து மகிழும் நிலைமைகள் உண்டு.

இது ஒரு அடாத செயல். இராவணன் திராவிட அரசன், இராமாயணம் என்பது ஆரியர் _ திராவிடர் போராட்டம் என்று நேரு போன்றவர்களே எழுதியுள்ளனர். பல வரலாற்று ஆசிரியர்களும் இந்தக் கருத்தினைப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இராவணன் உள்ளிட்டவர்களைக் கொளுத்துவதும், அதில் பிரதமர் போன்றவர்கள் பேரார்வத்துடன் பங்கு கொள்வதும் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதம் மட்டுமல்ல, ஆரியர் _ திராவிடர் போராட்டத்தில் இவர்கள் ஆரியர் பக்கம் காலூன்றி நிற்கின்றனர் என்பதையும் பட்டாங்கமாய் வெளிப்படுத்தக் கூடியதாகும்.

இந்த அடிப்படையில் பல காலகட்டங்களிலும் திராவிடர் கழகம் போர்க்குரல் கொடுத்ததுண்டு.

இந்தியாவில் எத்தனையோ இராமாயணங்கள் உண்டு. அதில் இராவணன் மகள் சீதை என்ற கதையும்கூட உண்டு.

இராவணன் ஒன்றும் கடவுள் மறுப்பாளனும் அல்ல _ சிவ பக்தன் என்று சொல்லப்படுவதும் உண்டு. ஆரியர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், அவர்கள் நம்பும் சிவபக்தன் எப்படி அரக்கன் ஆனான்? பக்தர்களுக்கு இரக்கம் கிடையாது என்று கூற வருகிறார்களா? அல்லது சிவன் தன் பக்தனுக்கு அந்த உணர்வை ஊட்டவில்லையா என்கிற கேள்விகளுக்கெல்லாம் மரியாதையாகப் பதில் சொல்லியாகவேண்டும்.

ஆரியர் _ திராவிடர் போராட்டம் என்ற வரலாற்றுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் பிரதமர் இந்திரா காந்திக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் அதிகாரப்பூர்வமாகவே கடிதம் எழுதி, இராம் லீலாவில் பிரதமர் என்ற நிலையில் உள்ள இந்திரா காந்தி பங்கேற்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதனைப் பொருட்படுத்தாத நிலையில், தந்தை பெரியார் அவர்களின் முதலாண்டு நினைவு நாளையொட்டி (25.12.1974) பல்லாயிரக்கணக்கான திராவிட மக்களின் உணர்ச்சிக் கொப்பளிக்கும் ஒரு சூழலில் இராமன், சீதை, லட்சுமணன் உருவங்களை எரித்தார் என்பது என்றென்றைக்கும் வரலாறு கம்பீரமாகப் பேசிக்கொண்டிருக்கும். அன்னை மணியம்மையாரின் புகழும் பட்டொளி வீசிப் பறந்துகொண்டேயிருக்கும்.

--------------- மயிலாடன் அவர்கள் 22-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: