Search This Blog

22.9.09

பார்ப்பானின் இன உணர்வை ஒடுக்கப்பட்ட மக்களே அடையாளம் காண்பீர்!


சமூகநீதியும்,
கழகத்தின் குரலும்!

நீதித்துறை பிரச்சினையில் பொதுவாக எந்தக் கட்சியும் தலையிடுவதில்லை. அதன் போக்குகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதும் கிடையாது. திராவிடர் கழகம் இதற்கு விதிவிலக்காகும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் சில தீர்ப்புகளை எதிர்க்கவேண்டிய ஏன் எரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனால் கடும் விலை கொடுக்கவேண்டியிருந்தாலும், அதுபற்றிக் கவலைப்படாமல், அத்தகு போராட்டங்களில் ஈடுபட்டதுண்டு கழகம்.

தனிப்பட்ட எந்த ஒரு நீதிபதியின்மீதும் கொண்ட வெறுப்பு அல்லது பரிவு என்ற தன்மையில் அத்தகு போராட்டங்களை திராவிடர் கழகம் மேற்கொண்டது கிடையாது.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகவிருந்த ஆர்.எஸ். மலையப்பன் என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்மீது உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் அத்துமீறி சில கருத்துகள் கூறியதை எதிர்த்து, அந்தத் தீர்ப்புக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார் தந்தை பெரியார்.

அதன் காரணமாக தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கூட தொடரப்பட்டது. அதுபற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், அந்த வழக்கில் நீதிமன்றத்திற்கே சென்று பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு என்று கர்ச்சனை செய்தார்.

அதே வழியில் சமூகநீதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய தருணத்தில் அந்தத் தீர்ப்பைக் கொளுத்தி, அதன் சாம்பலை சம்பந்தப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே அனுப்பி வைத்து, அதற்காகத் திராவிடர் கழகத் தோழர்கள் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் சிறையேகிய நிகழ்வுகளும் உண்டு.

உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு தேவை என்று எத்தனையோ முறை திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தின்முன் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடத்தியதும் உண்டு. அதனால் ஏற்பட்ட பலன்களும் மிக உண்டு.

இப்பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கருநாடக மாநிலத் தலைமை நீதிபதியுமான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதியரசர் பி.டி. தினகரன் அவர்கள் தமது திறமையாலும், சிறந்த செயல்-பாட்டாலும் உச்சநீதிமன்ற நீதிபதியாக அமர இருக்கும் இக்காலகட்டத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் திட்டமிட்ட வகையிலே அவர்மீது பழிசுமத்தும் வேலையிலே வேகமாக இறங்கியுள்ளனர். ஹிந்து போன்ற பார்ப்பன ஊடகங்கள் திமிர் முறித்துக் கிளம்பியிருக்கின்றன.

ஒரு கட்டத்தில் இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகக் கூட வர வாய்ப்பு இருக்கிறது என்பதை தொலைநோக்கோடு புரிந்துகொண்ட நிலையில், தொடக்க நிலையிலேயே முட்டுக்கட்டை போடவேண்டும் என்ற மூளையோடு களத்தில் இறங்கியுள்ளனர்.

சமூகநீதிக்காகத் தொடர்ந்து போராடும் இயக்கமாம் திராவிடர் கழகம் தன் கடமை முத்திரையைப் பொறிக்கக் களத்தில் இறங்கியுள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்றால் கிள்ளுக்கீரை என்று கருதும் சக்திகளின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், அதே நேரத்தில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டே தீரவேண்டும் என்ற உறுதியிலும் திராவிடர் கழகம் உறுதி பூண்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் மீது சகதி வாரி இறைக்கும் இந்த உயர்ஜாதிக்காரர்களை நோக்கிக் கேட்கிறோம்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகவிருந்த ஒய்.கே. சபர்வால் மீது ஊழல் குற்றச்சாற்று சுமத்தப்பட்டதே நினைவிருக்கிறதா? தமது பதவிக்காலத்தில் தமக்கு வேண்டியவர்கள் சிலருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார் என்பது சாதாரணமானதா?

டில்லியில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களை மூடி முத்திரையிடுவதற்கான உத்தரவு தமது மகன்கள் இருவர் பலன் அடைவதற்காகப் பிறப்பிக்கப்பட்டது என்ற புகார் எழுந்ததே!

நீதித்துறை வல்லுநர்கள் குழு மட்டுமல்ல; நடுவண் அரசின் கண்காணிப்பு ஆணையமும்கூட, இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிட்டதே அந்தக் குற்றச்சாற்று என்னாயிற்று? அதன்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?

நீதியைக் காப்பாற்றத்தான் செயல்படுவதாகப் பார்ப்பனர் _ பார்ப்பன ஊடகங்கள் கூறுமேயானால், அது உண்மையானால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சபர்வால்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூற முன்வராதது ஏன்? கட்டுரைகள் தீட்டாதது ஏன்?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால் மட்டும்தான் நீதியின் மீது கரிசனம் பொத்துக்கொண்டு கிளம்புமோ!

பார்ப்பானின் இன உணர்வை ஒடுக்கப்பட்ட மக்களே அடையாளம் காண்பீர்!

--------------------"விடுதலை" தலையங்கம் 22-9-2009

0 comments: