Search This Blog

14.9.09

எண்ணில்லாத வகுப்புகள் தமிழரிடம் எப்படி வந்தன?




தமிழரியக்கம்

தற்கால நிலையும் வாக்காளர் கடமையும்


எண்ணில்லாத வகுப்புகள் தமிழரிடம் எப்படி வந்தன? அய்ம்பொறி அடக்கல் ஆத்ம நிவேதனம் என்ற கொள்கையையுடைய சித்தர்கள் மலிந்த இந்தத் தமிழ் உலகில் பல திறப்பட்ட வகுப்புகள் எப்படி நுழைந்தன? பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணங்கள் தமிழ் உலகில் இயற்கையில் சமுதாய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளனவா? அன்றியும், மேற்படி மொழிகளின் உச்சரிப்பைக் கொண்டே அவைகள் தமிழ் மொழிகள் அல்ல என்பதை யாவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆரியர்களால் அம் மொழிகள் தமிழ் மொழியில் கலப்புறச் செய்யப்பட்டன என்பதும் வெள்ளிடைமலை.

ஆரியர்கள் இந்நாட்டுக்கு வந்த பிறகே மேற்படி மொழிகளும் வழங்கப்பட்டன. ஷத்திரியர் என்னும் தனி வகுப்பார் தமிழ் உலகத்தில் இல்லாததே, மேற்படி நான்கு வருணங்களும் இந்நாட்டில் ஏற்பட்டதல்ல என்று சொல்வதற்குப் போதிய சான்று ஆரியர்கள் தங்கள் சமுதாய வாழ்க்கைக் கட்டுப்பாட்டில் கைதேர்ந்தவர்களாயிருந்தனர். அவர்கள் இத்தேசத்திற்கு வந்த பின், மேற்படி சமுதாய வாழ்க்கையையும் உயர்வையும் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்து அதன் பலனாய் அவர்களும் மேன்மையான இடம் அமைத்துக் கொண்டனர். காலஞ் செல்லச் செல்ல அவர்களுக்கு மேன்மேலும் சுயநலம் பலப்பட்டுவிட்டது. தங்களது உயர்வும் வாழ்வும் தங்களுக்கும் தங்கள் சந்ததியாருக்கும் நிரந்தரமாயும் உறுதியாயும் இருக்க வேண்டுமென்றே பலவித சூழ்ச்சிகள் செய்து நம்மையும் வகுப்பு, வகுப்புக்களாக பிரித்து ஒவ்வொரு வகுப்பாரும், தான், தான் மேல் என்றும், மற்றவர்கள் கடவுள் இயற்கையிலேயே தாழ்ந்தவர்கள் என்றும் நினைத்துக் கொள்ளும்படியாகவும், ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) தாங்களைத்தான் எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவர்களென்று ஒப்புக் கொண்டு வணங்கும் படியாகவும் செய்து கொண்டனர். இதன் பலனாக ஆரியரொழிந்த மற்ற வகுப்பாருக்குள் வித்தியாசங்களும் பொறாமைகளும் வளர்ந்து ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படவும், ஆரியர்கள் ஆதிக்கம் பலப்படவும் ஏற்பட்டுப் போயிற்று.


தென்ஆப்பிரிக்காவில் இந்துக்கள் சில வீதிகளில் நடமாடக்கூடாது என்று நிபந்தனையைக் கண்டிக்கப்புகும், நாம் நம் தேசத்திலேயே, நம்முடனிருந்து, நம்முடன்பழகி, நம்மொழிபேசி, நம்மதத்தை அனுசரிக்கும் ஒரே உரிமையாளரைத் தொடவும் கூடாது, வீதியில் நடக்கவும் கூடாது, என்ற சமுதாய நிலை நம் முன் பரப்பி, அதை நிலை நிறுத்திக் கொண்டிருப்போர் யாவர் என்பதை விசாரிக்காமலே, தன்னுடைய குற்றத்தை மறைத்து, பிறர்மீது குற்றம் கூறுபவர்களாக இருக்கின்றோம். மேற்சொல்லிய, சமுதாய வாழ்வின் குற்றமும் உயர்வு தாழ்வும் நமது நாட்டில் எதனால் இன்னும் நிலைத்துக் கொண்டிருக்கிறது என்று ஒருவன் ஆராயப் புகுந்தால் அதன் மேற்படி ஆரியர் (பார்ப்பனர்) இவ்விடம் நம்மை ஏமாற்றி மேற் பதவிகளைக் கைக்கொண்டு அதிலிருந்து கொஞ்சமும் கீழ் நழுவ இஷ்டமில்லாமல் குரங்குப் பிடியாயிருக்கும் மனப்போக்கே அல்லாமல் வேறல்ல வென்பது புலப்படும். இவ்வித மனப்போக்கு உள்ளவர்களுக்கு முதன் முதல் நாம் மனமார வேண்டுமென்றே அடிமையாயிருக்கிறோம்.

அடிமைத் தனத்திலிருந்து விலகுதல் எப்படி?

ஒரு கூட்டத்தார் தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மற்றொரு கூட்டத்தாரிடம் இருந்து விடுதலை பெறவேண்டுமானால் தாங்களே தங்கள் காலில் நிற்கும் படியான சக்தியை ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். தங்களது உயர்வு தாழ்வுக்குத் தாங்களே காரணம் என்று நினைக்க வேண்டும். நமது நன்மை தீமைக்கு மற்றவர்களை எதிர்பார்க்கக்
கூடாது, ஆரியர்களுக்குச் (பார்ப்பனர்களுக்கு) செய்வதுதான் நமது கடமை. நமக்கு வேண்டியவற்றை ஆரியர்கள் செய்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையால் நாம் இதுவரை செய்து வந்த காரியங்கள்தான் நாம் சமுதாய வாழ்க்கையில் தாழ்த்தப்படவும், சூத்திரர்கள் என்று பிறரால் அழைக்கப்படவும் செய்து விட்டது. காலத்திற்குத் தகுந்தபடி ஒத்துப்போவதில் ஆரியர்கள் சமர்த்தர்களானபடியால் ஆங்கில அரசாங்கம் வந்தவுடன் தங்கள் சமுதாய உயர்வும், பழைய பஞ்சாங்கமும் செல்லாதென்றுகண்டு, அதைச்செல்லுபடியாக்க அரசாங்கத்திலும் ஆதிக்கம்பெற ஆங்கில பாஷையைக்கற்று, அதன் வழியே மேல்பதவியும் அடைந்தனர். அவ்வாங்கிலத்தையும் பதவியையும் தாங்கள் மாத்திரமே முறையே கற்கவும் அடையவுமான வழிகளையும் தேடிக்கொண்டார்கள். அதுதான் காங்கிரஸென்பது. முன்னாளிலிருந்தே வந்த மூளையின் உருப்போடும் சக்தியினாலும், அவர்கள் ஏற்படுத்தி வைத்துக் கொண்ட அமைப்புகளினாலும் அவர்களுக்கு ஆங்கிலப் படிப்பு இலகுவில் வந்துவிடுகிறது. இதனாலேயே இப்பொழுது பதவியில் இருப்பவர்களில் முக்காலே மூன்று வீசம் பேர்களும் அவர்களாகவே இருக்க நேர்ந்தது. இப்பதவியின் வேட்கையினாலேயேதான் இப்பொழுது வகுப்புப்போர் நிகழ்ந்து வருகிறதே அல்லாமல் வேறில்லை.

இப் பதவியின் வேட்கையும் தொலைந்து சமுதாய வாழ்க்கையிலும் அமைதி வரவேண்டுமென்றால், தமிழர் ஒவ்வொருவரும் தமது கடமை என்ன என்பதை நன்றாய் யோசிக்க வேண்டும். தான் செய்தால் உத்தமம், தம்பி செய்தால் மத்திமம், பிறர் செய்தால் அதர்மம், என்ற பழமொழிக் கிணங்க ஒவ்வொருவரும் அரசியலில் தனது கடமை என்ன வென்று யோசிக்கவும் வேண்டும். பிறர் நமக்காகச் செய்வார்கள் என்று நம்பி இருத்தல் மோசமே. தன் நலம் கருதி தமிழ் மொழியையும் தமிழ் மறைகளையும் அழித்து நம்மையும் தாழ்த்தி நமது சுயமரியாதையையும் ஒழித்து ஆரியரிடம் நமது அரசியல் சுதந்திரத்தையும் ஆத்ம சுதந்திரத்தையும் ஒப்படைத்தது பெரும் ஆபத்து. அதன்மூலம் நாமே நம்மை அடிமைப் படுத்திக்கொள்ளுகின்றோம். அன்னியர் உழைப்பினால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு சரீரத்தின் பிரயாசை எப்படி தெரியும்? கிராம வாழ்க்கை அறியாதவர்கள் கிராமத் தாருடைய சுக துக்கங்களை எப்படி அறியமுடியும்? சரீரப் பிரயாசைப் படுவது கேவலமென்று நினைப்பவர்கள் ஏழை மக்களுடைய தொழிலைப்பற்றியும் ரத்தம் சொட்டும் உடல் வருத்தத்தைப்பற்றியும், என்ன அறிவார்கள். தங்களுடைய முன்னேற்றம் திறம்படுவதற்காக எவ்வழியோ அதை அரசாங்கத்தாருக்குப் போதித்து கோடாரிக் காம்புகளாக நிற்பவர்கள் நமது நாட்டுக்கோ நமக்கோ என்ன செய்யப் போகிறார்கள்? சோர நாயகியின் உள்ளம், தன் புருஷன் வீட்டில் சரியாகக் காரியங்களைப் பார்த்து வந்தாலும், சோர நாயகனிடம் இருப்பதுபோல் தமிழிலே பிறந்து, தமிழிலே வளர்ந்து, தமிழிலேயே மேம்பாடடைந்து விட்டு, தமிழ்மொழி பேசும் மற்றவர்களைச் சகோதரர்களென்று நினைக்காமலும், அவர்களைச் சூத்திரரென்றும், சமுதாய வாழ்க்கையின் நிலையில் தாழ்ந்தவர்களென்றும் செய்து தங்கள் சமற்கிருத பாஷையில் சோரநேசம் வைத்திருக்கும், பாவிகளால் தமிழ்நாட்டிற்காவது தமிழர்களுக்காவது விடுதலை உண்டாகுமா?


தேசப்பற்று, மொழிப்பற்று இல்லாதவர்களும் தன் குலநலத்தையே கருதுபவர்களுமான ஒரு கூட்டத்தாரால் நம் சமுதாய வாழ்க்கைக்கு எப்படி முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்? ஆதலால் இந்நிலையில் வருந்தேர்தலில் வாக்காளர்கள் (ஓட்டர்களின்) கடமை என்ன?

வாக்காளர்கள் தங்கள் நிலைமையை நன்றாய் ஓர்ந்து பார்க்க வேண்டும் சமுதாய வாழ்க்கையில் நம்முடைய நிலைமையைத் தாழ்த்திச் சொல்லுபவரான எந்த பிராமணர் வாக்குரிமை கேட்ட போதிலும் அவருக்கு வாக்குரிமை மறுக்க வேண்டும். அவர் எவ்வித நன்மை செய்யப் போகிறதாய்ச் சொல்வோராயினும். அவருக்கு வாக்குரிமை கொடுக்கவே கூடாது. பிராமண வாக்காளர் பிராமணருக்கு வாக்குரிமை மறுக்க வேண்டும். அவர் எவ்வித நன்மை செய்யப் போகிறதாய்ச் சொல்வோராயினும், அவருக்கு வாக்குரிமை கொடுக்கவே கூடாது. பிராமண வாக்காளர் பிராமணருக்கு வாக்குரிமை கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. சூத்திரனென்று ஒருவனை சமுதாய வாழ்க்கையில், கேவலம் செய்து அவனுடைய சுக துக்கம் இன்னதென்று அவனுடன் ஒன்றி அறிய மாட்டா பிரமாணருக்கு வாக்குரிமை கொடுத்தால், தமிழன் பிராமணரல்லாத எந்த ஜாதியானா யிருந்தாலும், தன்னைத்தான் தாழ்த்திக் கொண்டவனாகின்றான். தனது சுயமரியாதைக்கு துரோகம் செய்தவனாகிறான். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பதும், முட்டி புகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே எந்நாளும் நாப்பாரே வேளாளர்தான் என்பதும், கன்மனப் பார்ப்பனர் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப்படைத்தாய் என்பதும், நுலெனிலோ கோல்சாயும், நுந்தமரேன் வெஞ்சமமாம். கோலெனிலோ ஆங்கே குடிசாயும் நாலாவான், மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான், அந்த அரசே அரசு என்பதும், ஆறுகெட நாணலிடு; ஊருகெட பூணூலிடு என்பதும் நமது பழம்பெரும் புலவர்களும் பெரியோரும் பாடியிருக்கும் அரிய உபதேச மொழிகள் அன்றோ? பார்ப்பனர் குற்றங்களை எடுத்துச் சொல்வதான, வகுப்பு பிணக்குகள் அரசாங்கத்தாராலாவது நம்மாலாவது இன்று நேற்று ஏற்பட்டதா அல்லது ஆயிரகணக்கான வருஷத்துக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறதா என்பது மேற்படி முதுஆரியர்களை (பார்பனர்கள்) வகுப்புப் பிரிவு ஏற்படுத்தின காலத்திலேயே வகுப்பு துவேஷங்களுக்கு விதை நாட்டப்பட்டது.

தீண்டாமை

ஆரியர்களுடைய கொள்கையின் மாய்கையில் சிக்கி அதையே ஒப்புக்கொண்ட தமிழ் மக்கள் தங்களுடைய ஆதிக்கத்தையும், அதற்கடுத்தாற் போல் நிலை நிறுத்ததுவதற்காக கீழ் வகுப்பார்கள் எனவும், தீண்டாதவர் எனவும் சில மக்களை ஒதுக்கிவைத்ததை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இதன் பலனாய் இப்பொழுது எங்கு பார்த்தாலும் தீண்டாமையே தாண்டவமாடி தத்திக்குதிக்கின்றது. அய்ம்பொறி அடக்கல், ஆத்மநிவேதனம், ஆனந்த தெரிசனம் என்று சித்தர்கள் பாடியுள்ள ரகசியங்களைப் பாக்கி தீண்டாமையே இந்து மதமாக ஒப்புக்கொண்டு நீ அவனைத் தொட்டால் தீண்டல், அவன் உன்னை தொட்டால் தீண்டல்; ஆதலால் எல்லோரும் எங்களிடம் வாங்குங்கள் நாங்கள் செய்த பண்டங்களை வாங்கி சாப்பிடுங்கள் அதில் தீட்டில்லை. என்று சொல்லி ஓட்டலும் காப்பி பலகாரக் கடைகளும் வைத்து பார்ப்பனர் பிழைக்கத்தான் இப்போது பிராமண மதமும் தீண்டாமையும் உயிர் பெற்றிருக்கிறது. தீண்டாமைப் பேயின் கோரத்தை அடக்கவே எழுந்த மகான் மகாத்மா காந்தியாவார். தீண்டாமையை ஒழித்துவிட்டால் ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் என்று சொல்லி ஒத்துழையாமை என்ற இயக்கத்தைப் பரப்பி அதன் மூலம் தீண்டாமை என்ற பேயைத் துறத்த வழி பார்த்தார். தன் நலம் கருதும் பார்ப்பனர் கூட்டத்தார் தீண்டாமை ஒழிந்தால் தம்மாதிக்கம், ஒழிந்துவிடும் என்ற பயத்தினாலும் தங்களுக்குள்ள மேலான பதவிகள் சமுதாய வாழ்க்கையில் தாழ்ந்துவிடுமென்ற பயத்தினாலும், தீண்டாமை என்றவுடன் மகானுடைய கருத்து முற்படா வண்ணமும் தங்களுடைய பதவிகளை ஊர்ஜிதப்படுத்தவும் கருதி அம்முயற்சியை ஒழிக்க சுயராஜ்யக் கட்சி என்ற ராட்சசனை உண்டாக்கி அவ்வியக்கத்தை விழுங்கச் செய்து விட்டார்கள். அவ்விராட்சசனைக் கொண்டே காங்கிரசையும் ஜெயித்து அதைத் தங்களுக்கு அடிமையாக்கி அதன் மூலம் தமிழ் மக்கள் சுயமரியாதை பெறுவதற்கு விரோதமாகவும் தீண்டாமை ஒழிப்பதற்கு விரோதமாகவும் தமிழ் மக்களின் வாக்குரிமை என்னும் ஓட்டுகளை சூழ்ச்சி வலையோடு அரிக்கிறார்கள். இவ் வாக்குரிமையை சுயராஜ்யக் கட்சியால் விழுங்கப்பட்ட எந்தப் பார்ப்பனரல்லாதாருக்கு கொடுத்தாலும் கூட அது தமிழ் மக்களின் விடுதலைக்கு எமனாய்த்தான் விளங்கும். இவர்களால் சுயராஜ்யமோ சுயமரியாதையோ வேறு எவ்வித தன்மையோ வருமென்று நினைப்பது கனவிற்காணும் கனவேயாகும். கிராம வாழ்க்கை, சரீர பிரயாசை இன்னது என்றறியாத ஜாதிகளிடமிருந்து கிராமத்தாருக்கு எவ்வளவு நலம் ஏற்படப்போகின்றதென்பது ஆண்டவனே அறிவான். அரசாங்கத்தாரோ அறுநூறு காததூரத்திற்கு அப்பாலிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பழக்கம், வழக்கந் தெரிந்து கொள்வதற்கு இடையூறாக நிற்பவர்களாகிய ஆங்கிலம் படித்து ஆதிக்கம் பெற்று சுயநலம் நிறுத்துவதற்காக உழைக்கும் இப்பார்ப்பனர்களா தமிழர்களுக்கு வழிகாட்டிகள்? தங்கள் இனத்தார்களே சகல பதவிகளையும் பெற்று சிறிதேனும் சரீரப்பிரயாசையின்றி அன்னியன் உழைப்பில் சுலபமாக தங்கள் மேன்பாட்டை நிலை நிறுத்தக் கருதிக் கொண்டிருப்பவர்களாக, தொழிலாளருக்கு சிநேகிதரும் பிரதிநிதிகளும் ஆவர்கள். ஆதலால் வாக்காளர்கள்! சுயநலம் கருதும் ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பார்ப்பனருக்காவது உங்கள் அருமையான வாக்குரிமை கொடுக்கலாமா? அறியாமையாலோ கவலையீனத்தாலோ சுயநலத்தாலோ ஏமாற்றப்படுவதாலோ உங்கள் வாக்கை எந்தப் பார்ப்பனருக்காவது கொடுப்பீர்களேயானால் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொண்டவர்களாவீர்கள். உங்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக் காம்பாவீர்கள். காங்கிர போர்வையைப் போர்த்துக் கொண்டும் ஜனங்களுக்கு உழைப்பதாகப் பாசாங்கு பண்ணி சுயராஜ்யக்கட்சி என்று சொல்லிக்கொண்டும் ஏமாற்றவே பிராமணர் கிளம்பியிருக்கிறார்கள். இது சத்தியம்! சத்தியம்!! முக்காலும் சத்தியம்!!! இவர்கள் விஷயத்தில் பிராமணரல்லாத ஒவ்வொரு தமிழனும் இது சமயம் கண்டிப்பாய் ஏமாந்து போகாமல், ஜாக்கிரதையாக இருங்கள். இக்கூட்டத்தாருக்கு சுயநலமும் பதவி வேட்டையும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை அழுத்தி ஆதிக்கம் பெறுவதே அடிப்படையான கொள்கை ஆதலால் ஏமாந்துவிடாதீர்கள்.

- "குடிஅரசு", கட்டுரை, 17.10.1926

0 comments: