Search This Blog

18.9.09

சேலம் நீதிமன்றத்துக்கு வெளியே பணத்தை உருவிக்கொள்ளும் கைரேகை சோதிடன்!




தொழில் யுக்தி

ஆண்டவன் சொல்றான் இந்த அருணாசலம் செய்றான் என்பது எங்கேயோ கேட்ட குரல் அல்ல. நடிகர் ரஜினிகாந்த் படத்தில் சொல்லும் வசனம்தான் இது.

அதே பாணியில் ஓர் ஆசாமி சேலத்தில். ஆண்டவன் சொல்றான், இந்த சிவம் செய்கிறான்.

யார் இந்த சிவம்? சேலம் நீதிமன்றத்துக்கு வெளியே இந்தக் கைரேகை சோதிடன்!

நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு என்ன ஆகும்? சாதகமா? பாதகமா?

வழக்கறிஞர்கள் வாதாடுவது நீதிபதிகள் தீர்ப்பு, சட்டப் புத்தகம் எல்லாம் ஒரு பக்கத்தில் கிடாச வேண்டியதுதான். கைரேகை சோதிடன் சிவம் சொன்னால் சொன்னதுதானாம்.இப்படி ஒரு கட்டுக்கதை. ஆசையும், அச்சமும் கலந்த இந்த அவியல் மனிதர்கள் இதுபோன்ற பேர்வழிகளிடம் கையை நீட்டிக் காசையும் கொட்டி ஏமாறுவதுதான் மிச்சம்.

வாதியும் கையை நீட்டுகிறான். பிரதிவாதியும் கையை நீட்டுகிறான். இதில் ஒருவருக்குத்தானே வழக்கில் வெற்றி கிடைக்கும்? இவனோ இரண்டு பேர்களின் காசையும் களவாடுகிறானே, அது எப்படி?

இதைப்பற்றியெல்லாம் அந்த நீதிமன்றத்துக்குள் நாள்தோறும் செல்லும் நீதித்துறையினரும் கவலைப்படவில்லை. வழக்கறிஞர்களும் கண்டுகொள்வதில்லை. பலியாவது பாமர மக்கள்தான்.

என்ன ஆகுமோ? என்கிற திகிலில் உறைந்து கிடக்கும் மனுஷனுக்கு ஒத்தடம் கொடுத்து பணத்தை உருவிக்கொள்ளும் ஒரு தந்திரம்தான் இந்தக் கைரேகை.

மருத்துவமனையில் அன்றாடம் ஒரு நிகழ்ச்சி அரங்கேறுமே, அது தெரியுமா? அறுவை சிகிச்சை உள்ளே நடந்துகொண்டிருக்கும் அவரின் நெருங்கிய உற்றார் உறவினர் பல்வேறு மன உளைச்சலுடன் வெளியே உலாவிக் கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் பார்த்து அந்த இடத்தில் குதிப்பார்கள் இந்த மதவாதிகள்.

ஜெபம் செய்யுங்கோ என்பார் ஒரு பாதிரியார். இந்தா திருநீறைப் பிடியுங்கோ என்பார் அர்ச்சகர். பாத்தியா ஓதச் சொல்லுவார் சாயபு.

உள்ளே தன் மகனுக்கோ, வீட்டுக்காரருக்கோ நடக்கும் ஆபரேசன் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற அச்சத்திலும், ஆயாசத்திலும் உழன்று கொண்டிருக்கும் உறவினர்களுக்கு அந்த இடத்தில் ஆபத்பாந்தவனாக வரும் ஆசாமிகள்தான் இத்தியாதி, இத்தியாதி ஏஜெண்டுகள்.

ஒரு பலகீனத்தை எப்படி தங்களின் தொழில் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா?

-------------- மயிலாடன் அவர்கள் 15-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: