Search This Blog

25.9.09

பெரியாருக்குப்பின் பெரியாரை நிலை நிறுத்தியவர்

காஞ்சிபுரம் அழைக்கிறது
தொண்டர்களுக்குக் கிடைத்த கிரீடம்

"நான் உங்கள் நம்பிக்கையின் அளவுக்கு ஏற்ப, நான் எனது ஆற்றலோடு பாடுபட முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். உங்கள் இறுதி மூச்சு நிற்கும் வரையில், எந்தக் கொள்கை இந்த நாட்டில் நிலை பெறவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, எந்தப் பணியைச் செய்யவேண்டும் என்று என்னை ஊக்கப் படுத்துகிறீர்களோ, அய்யாவின் பணி, அகிலம் எல்லாம் தொடரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதற்கு எள்ளளவும் துரோகம் செய்யாத நிலையில், என் இறுதி மூச்சு அடங்கும்வரையில் தமிழ்ச் சமுதாய அடிமையாக சொல்லடிமையாக, தமிழ்ச் சமுதாயம் எஜமானன் என்ற நிலையில் நான் உண்மையான பணியாளனாகத் தொண்டாற்று வேன் என்று மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன் (22.11.1981, கடலூர்)."

திராவிடர் கழகத் தலைவரின் இந்த எளிமையும், அடக்கமும்தான் அவரை உலகளவில் உயர்த்தியுள்ளது.

தொண்டு செய்யும் ஒவ்வொருவரும் இந்த அணிகலனைப் பூண்டொழுகினால், சமுதாயத்தில் கூட ஆர்ப்பாட்டம் அழிந்து, ஆணவம் ஒழிந்து, ஆண்டான் அடிமை என்னும் தோரணை சுக்கல் நூறாகி அருமையான சீர்மைச் சமுதாயம் ஆனந்த தாண்டவம் ஆடும்.

இது தந்தை பெரியார் அவர்களிடத்தில் நம் தலைவர் பெற்ற வற்றா நன்கொடை.

எப்படி கணித்தார் தந்தை பெரியார்?

அறிவுள்ளவர்,

ஆற்றல் உள்ளவர்,

பொறுப்பானவர்

(விடுதலை, 25.2.1968).

தந்தை பெரியார் அவர்களிடம் நூற்றுக்கு நூறு இத்தகு நற்சான்று பத்திரம் ஒருவர் பெற்றார் என்றால், அவர் நமது தமிழர் தலைவராகத்தான் இருக்க முடியும்.

அந்த அறிவும், ஆற்றலும், பொறுப்பும் நாளும், நாளும் மெருகேறி, அய்யாவைக் காணாத தலைமுறையினரும், அய்யாவை இழந்தோமே என்று அலமரும் பெருமக்களும் ஆச்சரியப்படுகின்றனர்; ஆறுதல் பெறுகின்றனர்.

இந்தியத் துணைக் கண்டத்தில் பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றி, அவற்றின் தோற்றுநர்களின் மறைவிற்குப் பிறகு அந்த அமைப்புகளும் மண் மூடிப் போன வரலாற்றினை நாடு அறியும்.

அய்யா சொன்ன

அந்த அறிவு, அந்த ஆற்றல், அந்தப் பொறுப்பு உள்ள ஒருவர் ஆசிரியராக தலைவராக கிடைத்ததனால், தந்தை பெரியார் பெருமையை, கொள்கைகளை மேலும் சுடர்விடச் செய்யும் பணிகளை ஆற்றிட முடிந்திருக்கிறது.

பெரியார் சமூகநீதி விருது இவரை நோக்கி வந்ததும், சமூகநீதிக்கான வீரமணி விருது உலகளாவிய வகையில் உருவானதும், கருத்துக்கனல் என்று மலேசியா கேடயம் அளித்ததும், பேரறிவாளர் என்று மியான்மா பட்டம் தந்ததும், பாரத்ஜோதி பரிசைப் பெற்றதும்,

முரசொலி அறக்கட்டளை விருது அளித்து உச்சி மோந்ததும்,

வரும் 26 ஆம் தேதி காஞ்சியில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், தி.மு.க. பெரியார் விருது அளித்து மகிழ இருப்பதும் எல்லாமே, கழகத் தலைவருக்கு மட்டும் அல்ல, கருஞ்சட்டைத் தோழன், உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர், மனிதநேயர் ஒவ்வொருவர் சிரத்திலும் சூட்டப்படும் விலை மதிப்பில்லாக் கிரீடமாகும்.

பெரியாருக்குப் பின்னால் நமது இயக்கத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும். மத்திய அரசு அய்யாவைப் போற்றி அஞ்சல்தலை வெளியிட்டதும்; சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டதும், அய்யாவின் போர் வாளான விடுதலையின் பவள விழாவினையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டதும் எல்லாமே, பெரியாருக்குப்பின் திராவிடர் கழகம் திருவுடையதாய் திக்கெட்டும் புகழ் பரப்புவதாய், தீவிரமும் உடையதாய், தீரமிக்க தலைமை உடையதாய் திகழ்கிறது என்பதற்கான தீர்ப்பாகும்.

1991 இல் அமெரிக்காவின் மில்வாக்கி செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட அந்தக் காலகட்டத்திலும் இந்தத் தலைவரின் நெஞ்சைப் பிடித்து உலுக்கியது உயிரின்மீது கொண்ட ஆசையல்ல! அய்யாவின் இறுதிக் கட்டளையை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலைப்பாட்டை நிறுவ முடியாமல் வாழ்வு முற்றுப் பெற்றுவிடுமோ என்ற ஏக்கம் இதயத்தைப் பிசைந்தது, பிடித்து இறுக்கியது என்றாரே இத்தகைய தலைவருக்கு இன்னும் எத்தனைப் பட்டங்கள்தான் தேடி வராது? எத்தனைக் கிரீடங்கள்தான் தவம் இருக்காது?

அகில இந்தியக் கட்சிகள்கூட ஆச்சரியமாகப் பார்க்கும் அளவுக்கு ஆட்சிப் பீடங்களில் பலமுறை ஏறிய கட்சிகள்கூட கண்கொட்டாது காணும் அளவுக்கு, அப்பப்பா, எந்த அளவு அடிப்படைக் கட்டுமானங்கள்! கழகப் பிரச்சாரத்தில்தான் நவீன யுக்திகள், புயல் வேகப் பாய்ச்சல்கள்; அய்யா காலத்திலேயே அச்சுறுத்த ஆரம்பித்த வருமான வரித்துறையின் கோபாக்னியை குன்றுபோல் நின்று சந்தித்து அறக்கட்டளைதான் என்று ஒப்புக்கொள்ளச் செய்த உரம் எந்த மன்றத்திற்குள் நுழைந்தாலும் முதல் மரியாதை கொடுக்கப்படும் மானமிகு மாண்பமை எந்த உரிமை மறுப்பு எக்காளமிட்டுச் சிரித்தாலும், அதனை முகத்துக்கு முகம் சந்தித்து, களம் அமைத்து காரியத்தில் வெற்றி என்ற ஜெயபேரிகை கொட்டும் சீலம் இப்படி ஒரு தலைமை நமக்கு _ நமது கழகத்துக்கு!


ஊராட்சி மன்றத்தின் படிக்கட்டைக்கூட மிதிக்காத கருஞ்சட்டைத் தலைவர் மம்சாபுரத்தில் தாக்கப்பட்டார் என்றதும், வீரமணி ஜிந்தா பாத் என்ற முழக்கம் நாடாளுமன்ற அவையில் ஒலித்ததே!

ஜெய்ப்பால் காஷியப் (20.7.1982) முழங்கினாரே. உலக மனிதநேய அமைப்பின் தலைவர்கள் லெவிஃபிராகல், ராய்பிரவுன், பால்கர்ட்ஸ் மற்றும் நைபால் போன்றவர்கள் தங்களின் பேனா முனையால் உயர் சித்திரம் தீட்டினார்களே _ ஆம், மண்டைச் சுரப்பை உலகு தொழச் செய்தாரே. பெரியாருக்குப்பின் பெரியாரை நிலை நிறுத்தியவர் இளவல் வீரமணி (29.9.2007); வீரமணி எங்கிருந்தாலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார் என்றாரே மானமிகு கலைஞர் (3.12.1998) ஆம், அந்த மானமிகு மாண்புமிகு கலைஞர்தான் அந்த ஈரோட்டுக் குருகுலவாசிதான் அண்ணாவின் காஞ்சிக்கு ஆசிரியரை அழைத்து பெரியார் விருது அளித்து பெருமைப்படுத்த இருக்கிறார்.

நினைவிருக்கட்டும், செப்டம்பர் 26 மாலை 6 மணி _ கருஞ்சட்டைத் தோழர்கள் களிப்புக் கடல் நீந்தி, கரை தொடும் இடம் காஞ்சீபுரம்.

திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தன் என்று சிறுவன் வீரமணியைத் தட்டிக் கொடுத்த கரத்துக்குச் சொந்தக்காரரான அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அதுவும் அண்ணா பிறந்த காஞ்சியில் கருஞ்சட்டைக் கடலின் கையிருப்பைக் காட்டுவோம், வாரீர்! வாரீர்!!

காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தோழர் டி.ஏ.ஜி. அசோகனும், கழகப் பொறுப்பாளர்களும் நமது வருகையை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர், வாரீர்! வாரீர்!

-------------------------"விடுதலை"23-9-2009

1 comments:

Unknown said...

What he has done for peoples suffered in Srilanka and the defeat of LTTE? Does this world still believe him as a Tamil Leader? He amassed crores and crores of rupees and built many colleges, but none of the colleges are given free seats to people who have married (inter caste) or widows etc.