Search This Blog

11.9.09

ரத்தம் சிந்தாத புரட்சி




சமுதாயப் புரட்சி ஏற்பட்டிட விடுதலை, முரசொலி
எல்லா கிராமங்களுக்கும் செல்ல வேண்டும்


விடுதலை, முரசொலி இரண்டு ஏடுகளும் எல்லா கிராமங்களுக்கும் சென்றடைந்து சமுதாய புரட்சி ஏற்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரை ஆற்றினார்.

ஈரோடு விடுதலை பவள விழாவில் (25.8.2009) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு

அதேபோல முரசொலிக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காக அல்ல.

பன்றிக் காய்ச்சலைவிட பதவிக்காய்ச்சல்

இந்த நாட்டிலே அறியாமையைப் போக்க வேண்டும். பன்றிக் காய்ச்சலைவிட, பதவிக் காய்ச்சல் என்பது மிகப்பெரிது. எனவே பதவிக் காய்ச்சலுக்காகவே சிலபேர் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டிலே எது சுலபம்? தொழில-திபர்கள் பாராட்டப்பட்டார்கள். டாக்டர் அம்மா அவகள் பாராட்டப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் நிரம்பப் படித்து ஆராய்ச்சி செய்து கஷ்டப்பட்டு வந்தார்கள். இந்த நாட்டில் அதெல்லாம் தேவையில்லை.

இரண்டு காரியங்கள் சுலபம்

இரண்டே காரியங்கள் சுலபம். ஒன்று அரசியல் கட்சிகள் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். இல்லையானால் கஞ்சா சாமியார், சுருட்டு சாமியார், சாமியாரிணிகள் வரலாம்.

எனவே, இவைகளை எல்லாம் எதிர்த்துப் பேசுவதற்கு இந்த இரண்டு ஏடுகளைத் தவிர, வேறு கிடையாது. ஆகவேதான் இந்த இரண்டு ஏடுகளையும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக, மக்களுக்குப் போய்ச் சேரக்கூடிய அளவிற்கு துணிச்சலாக நீங்கள் செய்யுங்கள்.

மிசா காலத்திலே...

இறுதியாக ஒன்றைச் சொல்கின்றேன். மிசா காலத்திலே முரசொலி, விடுதலை தணிக்கை செய்யப்பட்டுத்தான் வெளியே வந்தன. நாங்கள் கருப்புடை தரித்தவர்கள். எங்களுக்கு வந்த ஏடு எழுத்துகள் அழிக்கப்பட்டு கருப்படித்து வந்தது. அந்த எழுத்துகள் எல்லாம் புரிந்து கொள்ளக்கூடாது என்று.

ஆனால், கலைஞருடைய விவேகம் எப்படிப்பட்டது? அண்ணா அவர்களுடைய நினைவு நாள் பிப்ரவரி 3ஆம் தேதி. அன்றைக்கு யார் யாரைக் கைது செய்தார்கள் என்று பட்டியல் போட்டு வெளியிட முடியாது.

அண்ணா நினைவிடத்திற்கு வந்தவர்கள் என்று முரசொலியிலே எழுதினார் கலைஞர். இதைப் படித்தவர்கள் புரிந்துகொண்டார்கள். உள்ளே இருப்பவர்கள் யார்? வெளியே இருப்பவர்கள் யார்?

தந்தை பெரியார் என்று எழுதாதே. அடித்தார்கள் தணிக்கையாளர்கள். பெரியார் என்று எழுது. சங்கராச்சாரி என்று எழுதாதே; பெரியவாள் சங்கராச்சாரியார் என்று எழுது. இது அன்றைக்கு விடுதலை சந்தித்த கணைகள்.

அப்படி எல்லாம் விடுதலை வந்த நேரத்திலே விடுதலை ஏட்டில் கருப்பை அடித்துக் கொடுத்தார்கள். அதை எல்லாம் தாண்டி விடுதலை ஏடு வெளிவந்தது. மத்திய அரசின் அங்கீகாரத்தோடு. அண்மையில் படித்த ஓர் செய்தி

அதுவும் மத்திய அமைச்சர் ஆ.இராசா இந்த பண்ணையத்திலே விளைந்த விளைச்சல். மிக அருமையானவர்.

இந்த மேடையே தாய்க்கழகம் என்ற பண்ணையத்தால் உருவான மேடை. இதைக் கண்டதைவிட பெருமகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்?

நான் அண்மையிலே ஒரு செய்தியைப் படித்தேன். தென்னார்க்காடு மாவட்டத்திலே 1920லே ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி வந்த காரணத்தினாலே ஓர் ஆதிதிராவிடத் தோழர் தபால்காரராக நியமிக்கப்பட்டார். அந்தக் கிராமத்தின் பெயரோடு அந்த ஆராய்ச்சியாளர் அவருடைய நூலிலே எழுதியிருக்கின்றார். சமூக மாற்றம் என்பதுதான் அந்த ஆராய்ச்சியாளர் எழுதிய நூலின் தலைப்பு. அதிலே உள்ள செய்தியைச் சொல்கின்றேன்.

கிராமத்திற்கு தபால் கொடுக்கப் போகின்றார் இந்த ஆதிதிராவிடத் தோழர். அக்கிரகாரத்தில் இருக்கிறவர்கள் சொல்கிறார்கள். அக்கிரகாரம் இது; அக்கிரகாரத்திற்கு வந்து நீ தபால் கொடுக்கக்கூடாது; வெளியிலே வைத்து விட்டுப்போ என்று சொல்கின்றார்கள்.

சமுதாய மாற்றம்

நூலிலே கட்டி வைத்துவிடு என்று சொல்லியிருக்கின்றார்கள். இப்படி நடந்திருக்கிறது. எங்கே? தமிழ்நாட்டிலே நம்முடைய நாட்டிலே நீதிக்கட்சி ஆட்சி வந்த பிற்பாடு நடந்திருக்கிறது.

ஆனால் விடுதலை செய்த தொண்டு திராவிடர் இயக்கம் செய்த தொண்டு தந்தை பெரியார் உழைத்த உழைப்பு எந்த அளவிற்குப் பயன்பட்டிருக்கிற தென்றால் யார் ஆதிதிராவிடத் தோழரைப் பார்த்து தபாலை நூலிலே கட்டிவைத்துவிடு என்று சொன்னார்களோ அதே சமுதாயத்தின் நிலை என்ன? எங்களுக்கு ஜாதி கிடையாது. எனக்கோ , அவருக்கோ மற்றவருக்கோ. மற்றவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக நாங்கள் இதைச் சொல்கின்றோம். அதே ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை முதலமைச்சர் கலைஞர் மத்தியிலே அமைச்சராக ஆக்கியிருக்கின்றார்கள்.

அந்த அமைச்சரின் கீழே முகத்திலே பிறந்த ஜாதியினர் எல்லாம் இன்றைக்கு அதிகாரியாக இருக்கின்றார்கள். இது எவ்வளவு பெரிய மாற்றம்.

ரத்தம் சிந்தாத புரட்சி


ஒரு துளி ரத்தம்கூட சிந்தவில்லை. கருத்துப் புரட்சி. விடுதலை ஏட்டில் சிந்திய மை இருக்கிறதே. அதுதான் இந்தப் புரட்சியை உருவாக்கியிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் சொல்லவேண்டும்.

எனவே, நண்பர்களே, நான் ஒன்றைச் சொல்கின்றேன், குன்றக்குடி அடிகளார் இனமானத்தின் பெரியவர். அவர் விடுதலை அலுவலகத்திற்கு வந்து புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும்பொழுது தந்தை பெரியார் அவர்களை வைத்துக்கொண்டு சொன்னார்.

தமிழன் உள்ளத்திலும் இல்லத்திலும் ....

தமிழன் வீடு என்பதற்கு ஏதாவது ஒரு அடையாளம் வேண்டுமானால் விடுதலை ஏடு வரவேண்டும். அதுதான் தமிழன் வீடு, அதுதான் தமிழன் இல்லம் என்று சொன்னார்.

எனவே, உங்கள் இல்லத்தை தமிழன் இல்லமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தை மட்டும் தமிழன் உள்ளமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் இல்லத்தையும் தமிழன் இல்லமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களையும் கேட்டு, ஊரையும் தமிழன் ஊராக ஆக்கவேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சரையும் கேட்டு, அமைச்சர்களையும் கேட்டு, ஏனென்றால் அமைச்சர்கள் வந்தால் கோரிக்கை வைக்காமல் அனுப்பக் கூடாது.

அதுவும் இப்பொழுது இருக்கின்ற அரசாங்கம் இருக்கிறது பாருங்கள். விடுதலையில் ஒன்றை எழுதிவிட்டால் அடுத்த நிமிடத்திலேயே அது நடந்துவிடும்.

கஞ்சா சாமியாரைப் பற்றி எழுதினோம். இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள் என்றால் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள்.

நாங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆகவேதான் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசு வந்திருக்கிறது.

இது எங்களுக்காக அல்ல. டாக்டருக்காக யாரும் மருந்து சாப்பிடுவதில்லை; நோயாளிகளுக்காக மருந்து சாப்பிடுகின்றோம்.

விடுதலை வெள்ளம் பாயட்டும்...

மருந்து கண்டுபிடித்தவர்களுக்காக மருந்து சாப்பிடுவதில்லை. நோய் போவதற்காக மருந்து சாப்பிடுகிறோம்.

ஆகவே, விடுதலை வெல்லட்டும்! விடுதலை வெள்ளம் பாயட்டும் என்று அனைவருக்கும் நன்றி கூறி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய தோழர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய என்.கே.கே.பி.ராஜா, மற்றும் மேயர் அவர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகூறி, இந்த நிகழ்ச்சியில் சிறப்பாளராக கலந்து கொண்ட துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி கூறி ஈரோட்டு குருகுலத்தினுடைய நான்காவது தலைமுறை இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே சிறப்பான மகிழ்ச்சியோடு நாங்கள் விடைபெறுகிறோம் என்று கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------"விடுதலை" 11-9-2009

0 comments: