Search This Blog

10.9.09

முகத்தில் ரத்தம் வழிய விழுந்தவர் மு.க.ஸ்டாலின்- ஏன்?





ஒரு நாடோ, ஒரு சமூகமோ முன்னேற வேண்டுமானால் அந்த நாடு முழுவதும்
பத்திரிகைகளும் பாடசாலைகளுமாக மிளிர வேண்டும்!
ஈரோடு பவள விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பேச்சு


ஒரு நாடு முன்னேற பத்திரிகைகளும், பாடசாலைகளும் மிளிர வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரை ஆற்றினார்.

ஈரோடு விடுதலை பவள விழாவில் (25.8.2009) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

86 வயது இளைஞரைப்போல....

என்னுடைய உரை ஒரு வகையிலே நன்றி உரையாகும். ஏனென்றால் எத்தனையோ பணிகளுக்கிடையிலே நம்முடைய துணை முதல்வர் அவர்கள் காலையிலிருந்து மாலைவரையிலே எப்படி கடும் உழைப்புக்கு உதாரணமாக, நமது 86 வயது இளைஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பணியாற்றுகிறார்களோ, அவர்களோடு போட்டிபோட்டுக் கொண்டு இன்றைக்குப் பணியாற்றக் கூடிய அளவுக்கு தினமும் கடமையாற்றுகிறார்கள்.

துணை முதலமைச்சர் அவர்களை இந்த விழாவில் கலந்துகொள்ள நாம் அழைத்தபொழுது, எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல், உறவோடு, உரிமையோடு அவர்கள் இங்கே வந்து ஓர் உற்சாகமான உரையைத் தந்திருக்கிறார்கள்.

33 ஆண்டுகளுக்கு முன்னாலே என் நினைவு

எனக்கு 33 ஆண்டுகளுக்கு முன்னாலே என்னுடைய நினைவு சென்றது. விடுதலையினுடைய வரலாற்றை துணை முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். எதிர் நீச்சல் அடித்துத்தான் இந்த விடுதலை வளர்ந்திருக்கிறது.

நெருக்கடி காலத்திலே கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்ட நிலையிலே கலைஞரைப் பார்த்து, செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. நீங்கள் தேசிய நீரோட்டத்தோடு போகவில்லை என்பதுதான் உங்கள் மீது குற்றச்சாட்டு. அதன் காரணமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திராவிடர் கழகத்தினர், மிசாவிலே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னபொழுது எப்பொழுதுமே வில்லிலிருந்து அம்பு பளிச்சென்று கிளம்புவதைப்போல, கலைஞர் அவர்களிடத்திலே பட்டென்று தெறிப்பதைப் போல உடனே அவர்கள் பதில் சொன்னார்கள்.

ஈரோடு போனவன் நீரோடு போகவேண்டிய அவசியமில்லை!

ஆம். நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. தேசிய நீரோடு போகவில்லை என்றுதானே கேட்கிறீர்கள். நான் ஈரோடு போனவன்; எனவே நீரோடு போகவேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது என்று பதில் சொன்னார். (கைத்தட்டல்)

நீரோடு போவதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். அது அலையோடு சேர்ந்து போவது. ஆனால் ஈரோடு போவது என்பது எதிர் நீச்சல் அடிப்பது என்று அருமையான விளக்கத்தைச் சொன்னார்கள்.

அப்படி எதிர்நீச்சல் அடித்ததினுடைய விளைவாகத்தான் சற்று அவர்கள் வளைந்து கொடுக்காத காரணத்தால்தான் ஆட்சியா? கொள்கையா? என்று வரும்பொழுது கொள்கைதான் முக்கியமே தவிர, அந்த கொள்கையும் இனத்தின் மீட்சிக்காக என்ற காரணத்திற்காகத்தான் விடுதலைக்கு என்ன கொள்கையோ அந்தக் கொள்கையை உள்ளார்ந்த நிலையிலே ரத்த அணுக்களிலே அவர்களுக்கு உறைந்த காரணத்தால், குருகுலத்திலே அவர்கள் அதைப் பயின்ற காரணத்தால் அவர்கள் இதைச் செய்தார்கள். அதன் காரணமாகத்தான், அவர்களோடு இருந்தோம் என்பதற்காக, திராவிடர் கழகத்துக்காரர்கள் நாங்கள் எல்லாம் என்ன காரணத்திற்காக, என்ன குற்றத்திற்காக உள்ளே போனோம் என்று அன்றும் தெரியாது. இன்றும் தெரியாது.

என்ன குற்றத்திற்காக மிசா கைதியானோம்?

என்ன குற்றத்திற்காக நாங்கள் மிசா கைதிகளாகப் போனோம்? துணை முதலமைச்சருக்கும் தெரியாது. முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்தார் என்பதுதான் காரணமா? அல்லது இளைஞரணியை சிறப்பாக நடத்தினார் என்பதுதான் காரணமா? என்றெல்லாம் நாம் யூகம் செய்து கொள்ளலாம்.

ஆனால் காரணம் தெரியாது. அந்த நேரத்திலே நான் எண்ணிப்-பார்த்தேன். அவருக்கு இங்கே பொன்னாடை போர்த்தி விடுதலையின் சார்பாக சிறப்பு செய்த நேரத்திலே இதைச் செய்வதைவிட, எனக்கு மிகுந்த உணர்ச்சி பூர்வமான சிந்தனை என்னவென்று சொன்னால் 33 ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு குற்றமும் செய்யாத அவரை, உடனடியாகத் தேடுகிறார்கள் என்று சொன்னவுடனே முதலமைச்சர் கலைஞர் அவர்களே தன்னுடைய பிள்ளையை காவல்துறையிடம் ஒப்படைக்கின்றார்.

கலைஞரின் வீரத்தை குறிக்கும்...

நீயே போய் காவல்துறையினரைப் பார் என்று சொல்லி காவல்துறையினருக்கும் தொலைபேசியில் இவர் வருவதைச் சொல்லி அனுப்பினார். அது கலைஞருடைய வீரத்தைக் குறிக்கும், பெருமையைக் குறிக்கும்; நாணயத்தைக் குறிக்கும். (கைத்தட்டல்)

நம்முடைய ஸ்டாலின் அவர்களும் சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார். சிறைச்சாலையிலே எங்களுக்குக் கிடைத்த சிறப்பு வெளியில் எவருக்கும் தெரியாது. சென்னை சென்ட்ரல் சிறைச்சாலையிலே 9ஆம் எண் கொட்டடியிலே நாங்கள் அடைக்கப்பட்டோம். இப்பொழுது அந்தச் சிறையை இடிக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது.

சிறையை இடிப்பதற்கு முன்னாலே அந்த இடத்தை நாங்கள் சென்று பார்த்தோம். அந்த இடத்தை ஒளிப்பட மெல்லாம் எடுத்து வைத்தேன். அது ஒரு வரலாற்று உண்மை என்பதற்காக.

9ஆம் எண் பிளாக்

அந்தச் சிறைச்சாலையிலே 9ஆம் எண் கொண்ட கடைசி பிளாக் தொழு நோயாளிகளை மட்டும் வைக்கக்கூடிய அந்த பிளாக்கிலேதான் இரவு 9 மணிக்கு காரணமில்லாமல் சட்டவிரோதமாக எங்களை எல்லாம் அடித்துத் துவைத்தார்கள். அப்படி அடிவாங்குவது எங்களுக்குப் பழக்கமாகிவிட்டது.

24 மணி நேரத்தில் உணவு நேரத்தைத் தவிர வெளியில் விடமாட்டார்கள்.

எங்களுக்கு சில நாட்களிலேயே அந்த சம்பவங்கள் பழகிவிட்டது. ஆனால் இரவு 11 மணிக்கு மேலே ஒரு இளைஞனை ஒரு காரணமும் இல்லாமல் அடித்துத் தலையிலே ரத்தம் சொட்டச்சொட்ட அவரை இழுத்துக் கொண்டு வந்து அறையில் தள்ளினார்கள்.

முகத்தில் ரத்தம் வழிய விழுந்தவர் மு.க.ஸ்டாலின்

அந்த அறையில் ஏற்கெனவே நாங்கள் 8 பேர் இருக்கிறோம். அந்த அறையிலே அவரைத் தள்ளியபொழுது, வந்து விழுந்த இளைஞர் அவருடைய ரத்தத்தைத் துடைத்து, அரைகுறையாகத் தெரிகின்ற வெளிச்சத்தில் அவருடைய முகத்தைப் பார்த்தோம்.

அந்த வெளிச்சத்திலே பார்த்தபொழுது அவர் யார் என்று சொன்னால் இங்கே துணை முதலமைச்சராக இருக்கிறாரே நம்முடைய தளபதி அவர்கள்தான்.(கைதட்டல்)

அவரைப் பார்த்தபொழுது எங்களுக்கெல்லாம் ஆத்திரம் வந்தது. எங்களைத் தாக்கியபொழுதுகூட எங்களுக்கு ஆத்திரம் வரவில்லை. காரணம் எங்களுக்கு அது பழக்கப்பட்டது.

டைரியிலேகூட பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், அதற்கு முன்னாலே அவருக்கு இப்படிப்பட்ட ஒரு கொடுமை நிகழ்ந்திருக்க முடியாது. எனவே ஸ்டாலின் அவர்களுடைய இரத்தத்தை அப்பொழுது துடைத்து அவருக்கு ஆறுதல் சொல்லி, அந்த செய்திகளை அதை அவர் அவருடைய டைரியிலே-கூட பதிவு செய்ததை சொல்லியிருக்கிறார்.

அன்றைக்கு அவர் செய்த தியாகம். அவர் அடிபட்டபொழுது அவரை நாங்கள் தடவி ரத்தத்தை துடைத்தபொழுது இருந்த நிலை இன்றைக்கு அவருக்கு விருது கொடுத்தபொழுது ஏற்பட்ட நிலை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இன்றைக்கு விருது கொடுத்ததில் மகிழ்ச்சி குறைவுதான்.

திடீரென்று வரவில்லை

ஏனென்று சொன்னால் அவர் திடீரென்று இந்த நிலைக்கு வந்துவிடவில்லை. அவர் விடுதலையின் பவள விழாவிற்கு வந்திருக்கிறார் என்றால் விடுதலை எவ்வளவு தடைக்கற்களைத் தாண்டியிருக்கிறதோ, அதே போலத்தான் அவரும் பொது வாழ்க்கையிலே பல தடைக்கற்களைத் தாண்டி வெற்றிகளைப் பெற்றிருக்கக் கூடியவர்களாக வந்திருக்கிறார்கள்.

எனவே, அவர்களுடைய வாழ்த்து என்பது பயனுள்ள வாழ்த்து. அது மட்டுமல்ல தந்தை பெரியார் அவர்கள் தெளிவாகச் சொன்ன ஒரு கருத்தை நினைவூட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.





1929இல் விடுதலை

நம்முடைய அமைச்சர் பெருமக்களுக்கெல்லாம் இந்த நேரத்திலே நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

ஒவ்வொருவரும் இங்கே கருத்தரங்கம் போல எல்லா கருத்துகளையும் இங்கு சொல்லிவிட்டார்கள். ஒரு பத்திரிகை ஆசிரியருடைய வேலை அதையெல்லாம் வெளியிடுவதைத் தவிர, தலையங்கத்திலே குறிப்பிட்டு எழுதலாம்.

அதுபோலத்தான் என்னுடைய உரையும்கூட, ஆகவே நான் முழுநேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

நீண்ட நாள்களுக்கு முன்னாலே 1929இல் ஈரோட்டிலிருந்து விடுதலை வருகிறது. விடுதலை துவக்கப்படுகிறது.

நாடு முன்னேற்றமடைய

அந்தக் காலகட்டத்திலே அய்யா அவர்கள் சொல்கின்றார்கள். அந்தப் பகுதியை மட்டும் நன்றாக நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாடோ, ஒரு சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், அந்த நாடு முழுவதும் பத்திரிகைகளும், பாடசாலைகளுமாக மிளிரவேண்டும். இதை உத்தேசித்துத்தான் சில அறிவிற்சிறந்த பெரியார்கள், எந்த சமூகத்தையேனும், எந்த நாட்டையேனும் முன்னேற்றமடைந்திருக்கின்றதா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்த நாட்டினரையோ, அவர்களது அந்த சமூகத்தினரையோ கண்டால் இலக்கணம் போல வகுத்திருக்கிறார்கள்.

அந்த சமூகத்தினரையோ கண்டால், உங்களுக்கு எத்தனை பத்திரிகைகள்? எத்தனை பாடசாலைகள்? எத்தனை கலா சாலைகள் இருக்கின்றன? என்ற கேள்வியைக் கிளப்புகின்றனர்.

ஆகவே, எத்தனை பத்திரிகைகள் எண்ணிக்கை மிகுவதை தாழ்வாக நினைப்பதோ, சொல்லவோ சற்றும் இடமில்லை.

ஒரு சாண் வயிறை நிரப்பி...

ஆனால் அதே நேரத்திலே வெறும் பத்திரிகைகள் இருந்தால் போதுமா? வெறும் நாட்டுச் செய்திகளையே தனக்கு அணியாகத் தாங்கி, அதைத்தான் நம்முடைய அமைச்சர் பொன்முடி அவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள். இருவகையான ஏடுகள் என்று சொன்னார்கள்.

அய்யா சொல்லுகிறார்: வெறும் நாட்டுச் செய்திகளையே அணியாகத் தாங்கியும் சில தொகையினரான கூட்டத்திற்கு மட்டும் நலத்தைத் தருவதாகவும் ஆசிரியர்களின் இத்தியாதி லாப பூஜைகளுக்காகவும் மக்களின் பொருள்களையும் அவர்களின் அருமையான பொழுது போக்குகளையும் கொள்ளை கொண்டு ஒரு சாணை நிரப்பி (வயிறு) பெருமை சின்னங்களைப் பரிமாறி காலத்தைக் கழித்துவரும் சிலபோலிப் பத்திரிகைகளைப் போன்று இல்லை. (இப்பொழுது சாமியார்களில் போலி, நீதிபதிகளில் போலி, சட்ட வழக்கறிஞர்களிலும் போலி, இப்படி பலதரப்பட்ட அளவுக்கு அவர்கள் பெயரைப் பயன்படுத்துகின்றார்கள்)

சிலபோலிப் பத்திரிகைகள்

சில போலிப் பத்திரிகைகள் போல் இல்லாமல் இது சிறப்பாக ராயல் ஒன்றுக்கு 20 பக்கங்கள் கொண்டு தலைவர்கள் தோறும் கண்கவர் படங்களாலும் நல்ல பதிப்புள்ள, நல்ல தமிழில் பண்டித, பாமர முறைகளில் உயர்ந்த அனுபவமும் பரோபகாரமுள்ள அறிவாளிகளால் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டதோடு, ஒவ்வொரு மலர்களிலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் சுயமரியாதைத் தத்துவத்தின் தேன்துளிகள் கசிந்து ஒழுகும் மாதிரி அமைந்து ஒளிர்வதால் இக்காலத்திற்கேற்ப ஒரு நற்பெயரை மக்கள் யாவரும் தந்து இதை ஆதரிப்பார்கள், நம்புகிறோம் என்று சொன்னார்கள்.

எனவே, இந்தப் பத்திரிகையினுடைய ஆதரவு தேவை. அது மட்டுமல்ல கலைஞரின் ஆட்சி சிறப்பான பணியைச் செய்கிறது. என்ன பெரிய காரியம் என்று சொல்கின்றார்கள்?

இவை எல்லாம் எடுத்துச் சொல்வதற்கு ஏடுகள் தேவை. எனவேதான் நான் மாண்புமிகு துணை முலமைச்சர் அவர்களை, அமைச்சர் பெருமக்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் தயவு செய்து கொஞ்சம்கூட கூச்சப்படாமல் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருக்கின்றன என்பதைப் பார்த்தோம்.

ஈரோட்டில் தி.க., தி.மு.க. கொடிகள்

ஈரோட்டிலே இரண்டு கொடிகள். ஒன்று தி.மு.க. கொடி, இன்னொன்று திராவிடர் கழகக் கொடி. எங்கு பார்த்தாலும் இந்த இரண்டு கொடிகள்தான் காட்சி அளித்தது. கண்ணுக்கு மட்டுமல்ல, கருத்துக்கும் விருந்தாக இருந்தது.

அதுபோல, இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா அவர்களே சொன்னார்களே, அந்த இரட்டைக் குழல் துப்பாக்கி திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமல்ல. விடுதலையும், முரசொலியும்கூட!

எனவே, இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகள் எல்லா பஞ்சாயத்துகளிலும் இருக்க வேண்டும். எப்படி துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களிலே ஒரு புரட்சியை செய்திருக்கிறார்களோ, அதுபோல முரசொலியும், விடுதலையும் யாருடைய விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களுக்கு நாம் சொல்லவேண்டிய கருத்தை கிராம மக்கள்வரை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் அருள்கூர்ந்து, ஆணையிட்டு அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

விடுதலை லாபத்திற்காக நடத்தப்படக்கூடிய ஏடு அல்ல.

----------------------------தொடரும்

0 comments: