Search This Blog

23.9.09

இலங்கைக்கு இந்தியா உதவப் போகிறதா?



இலங்கையின் வடபகுதியில் உள்ள முக்கிய துறைமுகமான காங்கேசன் துறைமுகத்தைச் சீரமைத்துக் கொடுக்கும்படி இந்தியாவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது என்ற ஒரு செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது. இந்தக் கோரிக்கையினை இந்தியத் தூதரிடம், துறைமுகத்தின் தலைவர் பி.விக்கிரமா வைத்துள்ளார்.

இந்தத் துறைமுகம் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில் சீரழிந்துவிட்டது; சுனாமியாலும், பெரும் சேதத்திற்கு ஆளாகிவிட்டது. இந்தத் துறைமுகத்தை இந்தியா சீரமைத்துக் கொடுத்தால், கப்பல் கட்டும் தளம் அமைக்கவும், கப்பல் போக்குவரத்தினை மேம்படுத்தவும் பெரிய உதவியாக இருக்கும் என்பது இலங்கைத் தரப்பின் கோரிக்கையாகும்.

இந்தப் பிரச்சினை மட்டுமல்ல, வேறு எந்த வளர்ச்சிப் பணிக்காகவும், இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டினாலும் அதைவிடக் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொறிந்துகொள்வது வேறு ஒன்றும் இருக்க முடியாது, முடியவே முடியாது.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிடம் இலங்கை உதவி கோருகிறது? இந்தியாவின் எந்தக் கோரிக்கையை இலங்கை செவிமடுத்தது?

போர் முடிந்த சில மாதங்களுக்குள் முள்வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்புவதாக உறுதி அளித்தாரே ராஜபக்சே அதனை இதுவரை நிறைவேற்றினாரா? இதுகுறித்து இந்தியா இன்று கேள்வி கேட்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்துக்கு ரேடார் கருவிகளும், ஆயுதங்களும் அளித்தும், சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தும் உதவிகளைத் தாராளமாக செய்ததே இந்தியா. அதன் பலன் என்ன? தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவினரான தமிழர்களை முற்றிலுமாகக் கொன்று குவிக்கத்தானே அவையெல்லாம் பயன்பட்டன?

நேபாளம் பசுபதிநாதன் கோயிலில் பணியாற்றும் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த இரு பார்ப்பனர்களின் பூணூல் அறுபட்டது என்றதும், ஆவேசப்பட்ட இந்தியா, இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கைத் தீவில் கொன்று குவிக்கப்பட்டும், உண்மையான உள்ளத்துடன் ஒரு கண்டனக் குரலை எழுப்பியதுண்டா?

இந்திய அரசின்மீது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், இலங்கையின் வளர்ச்சிக்குக் காதொடிந்த ஊசி முனை அளவுக்கு உதவி செய்ய முன்வந்தாலும் அது எரிகிற நெருப்பில் எண்ணெய்க் கொப்பறையைச் சாய்த்ததாகத்தான் கருதப்படும்.

இன்னொரு வகையிலும் இந்தியா நினைக்கவேண்டுமே! அதுதான் இந்தியாவின் பாதுகாப்பைக் குறித்த பிரச்சினையாகும்.

இலங்கையுடன் சீனா இன்றைய தினம் நகமும், சதையுமாக, ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளை-களாகக் குலவிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுதுகூட இந்திய எல்லைப் பகுதியில் சீனா தன் வாலை அடிக்கடி நுழைத்து நோட்டம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. லடாக் பகுதியில் வாழும் மக்கள் யதார்த்தமான நிலையை வெளிப்படுத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். இந்தியாவின் மிக அருகில் உள்ள இலங்கையைத் தன் கையில் போட்டுக் கொண்டால், அதைவிட சீனாவுக்குப் பேருதவியாகவும், இந்தியாவுக்கு ஆபத்தானதாகவும் வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?

இன்னொரு பக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக இருக்கக்கூடிய பாகிஸ்தான் தோளிலும் ராஜபக்சே கைபோட்டுக்கொண்டுதானிருக்கிறார்.

இதற்குமுன் நடைபெற்ற இந்தியா _ சீனா போரின்போதும், இந்தியா_ பாகிஸ்தான் சண்டையின் போதும்கூட இலங்கை இந்தியாவுக்கு எதிராகத்தான் பயன்பட்டிருக்கிறது.

இலங்கையை இந்தியா தாஜா செய்யும் காலகட்டமெல்லாம் முடிந்த பிறகும், கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் இந்தியா இலங்கைக்கு உதவும் நிலை ஏற்பட்டால், அது எதிரியின் ஒற்றனை வீட்டுக்குள் நுழையவிட்ட கதையாகத்தான் முடியும்.

உள்நாட்டிலும் அதிருப்தி, வெளிநாட்டு நடவடிக்கையிலும் கோளாறு என்றால், அதைவிட இந்தியாவுக்குக் கடுமையான காலம், ஆபத்து வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?

-------------------"விடுதலை" தலையங்கம் 23-9-2009

0 comments: