Search This Blog

27.9.09

தமிழகத்தின் முதல் பேராசிரியர் - பெரியார்


தமிழகத்தின் முதல் பேராசிரியர்
அறிஞர் அண்ணா

பல வருடங்களுக்கு முன் நான் எனது திராவிடநாடு பத்திரிகையில் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக்கவிஞர்கள், பலநாட்டுப் பேராசிரியர்களைப்பற்றி குறிப்புத் தந்த போது நமது தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார் என்று எழுதி இருக்கிறேன்; அவர் சமுதாயத்துறையில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துகளை, கொள்கைகளை, இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் பெறவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான் பயிர் வளர முடியும்; அதுபோல மனவளம் பெற்றவர்களால்தான் பெரியாரின் கருத்துகளை வளர்க்க முடியும்.

அவரது தொண்டு வீண்போகவில்லை. பெரியார் அவர்கள் நினைக்கும் அளவுக்கு வேகமான அளவு பலன் ஏற்படாமலிருக்கலாம்; ஆனால் பெரியார் அவர்களின் 30, 40 ஆண்டு தொண்டுக்குப் பிறகு புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை, பள்ளிகள் எத்தனை என்று கணக்கில் பார்த்தால், தமிழகத்தில் அறிவுப்புரட்சி ஏற்பட்டிருப்பதும், வெற்றி பெற்றிருப்பதும் தெரியும். பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வலிமை எவ்வளவு என்பது தெரியும்.

அவர் பிரசாரத்தைத் தொடங்கிய காலத்தில் பல வகுப்பார் படிப்பதற்கே அருகதை இல்லாதவர்கள் என்று எழுதிவைக்கப்பட்டது மட்டுமல்ல, நாட்டிலே சொல்லப்பட்டும் வந்தது. அந்த வகுப்பாரே கூட நம்பினார்கள்; நமக்குப் படிப்பு வராது என்று! நாம் எதற்காகப் படிக்க வேண்டும் என்று அவர்கள் தெரியாமல் தடுமாறினார்கள்.

நான் கல்லூரியில் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பை எடுக்கச் சென்றபோது அதற்கு ஆசிரியராக இருந்த பார்ப்பனர் ஒருவர் இந்தப் பொருளாதாரப் பாடம் உனக்கு வருமா? உனக்கேன் இது? வேறு ஏதாவது எடுத்துக் கொள்! என்று கூறி, என் ஆர்வத்தைக் குறைக்கப் பார்த்தார். நான் பொருளாதாரத்தையே எடுத்து சிறந்தமுறையில் தேர்வும் பெற்றேன்.

நான் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

நம் மாணவர்கள் ஒன்றும் அறிவில் குறைந்தவர்கள் அல்லர்; அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், தகுந்த வாய்ப்பும் கொடுத்தால் முற்போக்கு சமுதாயத்தோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு அவர்கள் முன்னேற்றத்தையடைவர்; அடைந்திருக்கின்றனர் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஆயிரம் ஆயிரம் மேடைகளிலே பேசியுள்ளேன். அதற்குமுன் தமிழகத்திலே தலைசிறந்த வக்கீல் யாரென்றால் அல்லாடி கிருஷ்ணசாமி, தலைசிறந்த டாக்டர் யாரென்றால் ஒரு ரங்காச்சாரி, நீதிபதி என்றால் முத்துசாமி அய்யர், சிறந்த நிர்வாகி யாரென்றால் கோபால்சாமி அய்யங்கார் என்று இப்படித்தான் சொல்லக்கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது என்று கூறி வந்தேன். இன்றையதினம் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்தவர்கள் முதல்தரமான வக்கீல்கள், தலைசிறந்த மருத்துவர்கள் என்று இப்படித்தான் இருக்கிறார்கள்.

சர்.ஏ.இராமசாமி முதலியார் அரசியலில் இருந்து விரட்டப்பட்டார் என்றாலும், அய்தராபாத் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு அய்.நா.வில் பேச அவரை நேரு விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள் என்றால் அவர் திறமையைக் கருதியே அல்லவா?

சர்.ஏ.இராமசாமி அய்.நா. சென்று வந்தது மட்டுமல்ல வென்றும் வந்தார்! இப்படி நம்மிலே. பல அறிஞர்கள், படித்தவர்கள் இருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட இனம் என்று தவறான காரணங்களைக் காட்டி அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று உயர்பதவிகளில், உத்தியோகங்களில் நல்ல செல்வாக்கோடு இருக்கின்றனர். இந்த அளவு அதிகப்படவேண்டும். பெரியார் அவர்களின் அரைநூற்றாண்டு இடைவிடாத தொண்டினால் ஏற்பட்ட பலன் இது.

பெரியார் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற பணி சமுதாயத்தை மாற்றியமைக்கும் பணியாகும். சர்க்காரின் மூலம் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்துவிட முடியாது. சர்க்காருக்கு அந்த வலிமை இல்லை. என்னிடம் ஒரு சர்க்கார் அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே தவிர தன்னிச்சையாகக் காரியம் ஆற்ற முடியாது. இதனைப் பெரியார் அவர்கள் நன்கு அறிவார்கள். உலகத்திலேயே எந்த நாட்டிலும் சர்க்காரால் சாதித்ததைவிட தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது,

ஒரு மாதத்திற்கு முன் காமராசரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிக அன்போடு சொன்னார். நமது பெரியாரவர்களைப் போன்று பத்துப் பெரியார்கள் இருந்திருந்தால் இந்தியா நல்லவண்ணம் சமுதாயத் துறையில் சீர்திருத்தம் அடைந்திருக்கும்; உலகநாடுகளைப்போல சிறந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

பெரியார் அவர்கள் தரும் பெரும் பேருரைகளால், அவருடைய சலியாத உழைப்பால், அவர் தந்துள்ள பகுத்தறிவுக் கருத்துகளால் இன்றைய தினம் நம் சமூகம் மிக நல்ல நிலையிலே முன்னேறிக்கொண்டு வருகிறது. அவருக்குத் திருப்தி ஏற்படுகிற வகையிலே இல்லாமலிருந்தாலும் என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்குக்கூட மாறுமா என்று எண்ணிப் பார்த்ததில்லை.

இப்போது பெரியார் அவர்கள் பேசும் பேச்சுகளைக் கேட்டால் ஒரு கணம் மயக்கம் வருகிறது. அடுத்து ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும்போது நியாயம்தான் தேவைதான் என்ற எண்ணம்தான் வருகிறதே தவிர, அதைக்கேட்ட உடனேயே பதறிய காலம் பகைத்தெழுந்த காலம் இவர்களைப் படுகொலை செய்யலாகாதா என்று பேசிக்கொண்டிருந்த காலம் இந்தக் காலங்கள் எல்லாம் அந்தக் காலங்களாகி விட்டன.

இப்போதிருக்கும் காலம் மிகப்பக்குவம் நிறைந்த காலம். பெரியார் அவர்களின் கருத்துகளை சட்டமூலம் செயல்படுத்த இந்த சர்க்காரின் அதிகார எல்லைக்குட்பட்டு, என்னென்ன செய்யமுடியுமோ அவைகளைச் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.

பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகின்ற கருத்துகளையும் கொள்கைகளையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே இருந்து கொண்டு ஏதோ சில காரியங்களை செய்யவா? அல்லது விட்டுவிட்டு உங்களோடு வந்து தமிழகத்திலே இதே பேச்சையே பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியார் அவர்களுக்கே விட்டுவிடுகின்றேன். அவர் என்னோடு சேர்ந்து பணியாற்று என்றால் அதற்குத் தயாராக இருக்கிறேன்.

பெரியாரவர்களுக்கு நாம் தந்துள்ள சமுதாய சீர்திருத்த வேலை. அவர் இறுதி மூச்சுள்ள வரை செய்து தீரவேண்டிய வேலை ஏனென்றால் அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. நேற்று இருந்ததில்லை. நாளைக்கு வருவார்களா என்பதும் அய்யப்பாட்டிற்குரியது. அவர்கள் செய்யும் வேலையில் ஒரு மன நிம்மதியோடு, இருக்கலாம். தமிழகம் இன்று எந்தப் புதுக்கருத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும், தாங்கிக்கொள்வதற்கும் தயாராக இருக்கிறது. அது செயல்வடிவத்திலே வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கலாம்.

அவரது கொள்கைகளும், கருத்துகளும் இன்னும் முற்றும் செயல்படவில்லை. அது செயல்வடிவத்திற்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் அது செயல்பட்டே தீரும்! பெரியாரவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகச்சிறந்த பணி. நம் நாட்டிற்குத் தேவையான பணி; அதை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பெரியார் அவர்களுக்கே உண்டு அவருக்கு ஓய்வு கொடுத்து அவரது வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நான் ஏற்றுக்கொண்டிருக்கிற துறை வேறு. அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற துறை வேறு; நான் மேற்கொள்ளும் முறை வேறு. அவர் கொள்ளும் முறை வேறு, இந்தத் துறை இல்லை என்றால் அந்தத் துறையில்லை அந்தத் துறை இல்லை என்றால் இந்தத் துறையில்லை என்ற நிலை உள்ளது.

நானிருக்கிற இடத்தில் அவருடைய கருத்திருக்கும். அவர் இருக்கிற இடத்தில் நானிருப்பேன்.

நாம் அவரை வெகுவாகக் கஷ்டப்படுத்தி விட்டிருக்கிறோம். அவர் இப்போது ஓய்வெடுத்துக்கொண்டு, கட்டளை இடவேண்டிய வயது. அவரது தொண்டினை நாம் மேற்கொள்ளவேண்டும். அப்படி சூழ்நிலை நமக்கு ஏற்படவில்லை. ஆனதினாலே நாம் அவருக்குக் காட்டவேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக் கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------(நாகரசம்பட்டி (19.12.1967), அரூர் (12.7.1968) ஆகிய இரு நிகழ்ச்சிகளில் முதல்வர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகள்)

0 comments: