Search This Blog

16.9.09

மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய என்ன செய்ய வேண்டும்?

வினா-விடை சித்திரபுத்திரன்

வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

விடை: நமது மதமும் ஜாதியும்

வினா: நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100_க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாக இருக்கிறோம்.

ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100_க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

விடை: மதமும் ஜாதியும்

வினா: உண்மையான கற்பு எது?

விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு

வினா: போலி கற்பு என்றால் எது?

விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.

வினா: மதம் என்றால் என்ன?

விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்துவதும் தான் மதம்.

வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓவு (லீவு) கொடுக்கப்படுகின்றது.

விடை: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.

வினா: பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

விடை: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

வினா: மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு, ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக்கொள்ளா விட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.

வினா: பெரிய மூடன் யார்?

விடை: தனது புத்திக்கும் பிரத்தியேக அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா: ஒழுக்கம் என்பது என்ன?

விடை: ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா: சமயக் கட்டுப்பாடு, ஜாதி கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை: மனிதனை தன் மனசாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்கமுடியாமல் கட்டுப்படுத்துவது தான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.

வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

வினா: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து அவரைக் காக்கப் பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை: இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா: கிறித்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிறிஸ்துவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மான உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமானதுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை: மத விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடை வேண்டியர்களாவார்கள்.

வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாகிருக்கின்றது?.

விடை: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

---------------சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -"விடுதலை" 2.5.1949

2 comments:

Thamizhan said...

ஆத்திகக் குடும்பத்தில் பிறந்த
நாத்திகச் செம்மலே!
ஏணியாய் நீ இருந்தாய் ஏற்றங்கள்
நாங்கள் கண்டோம்.
ஆணிவேர் கடவுளென்றே அதனையே
ஆட்டி வைத்தாய்.
நன்றி என்னால் என்னவென்றே தெரியாத
தமிழ் மக்கள்
இன்றுனக்குப் பிறந்தநாள் பெருநாள்
நன்றியுள்ளோர் வாழ்த்துகின்றோம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா