Search This Blog

16.9.09

தந்தைபெரியாரின் தத்துவக் கதிர்கள்



பகுத்தறிவு


பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; வெகு காலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பி விடக்கூடாது; ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.

---------------(குடிஅரசு, 9.12.1928)

சுயமரியாதை

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால், அதுவே அரசியலையும், தேசியத்-தையும், மற்றும் இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும்.

----------------- (குடிஅரசு, 17.2.1929)

கல்வி

ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல் வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

-------------------(குடிஅரசு, 26.12.1937)

தமிழ்

தாய்மொழி என்பதற்காகவோ, நாட்டு மொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ்மொழியினிடத்து எவ்விதப் பற்றும் இல்லை. தமிழ் தனிமொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி சிவபெருமான் பேசியமொழி என்பதற்காகவோ, அகத்தியரால் உண்டாக்கப்பட்டது என்பதற்காகவோ கூட எனக்கு அதில் பற்றில்லை. குணத்திற்காகவும், குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவுமே நான் எதனிடத்திலும் பற்று வைக்கக் கூடும்! எனது மொழி, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ என்னுடையது பழமையானது என்பதற்காகவோ ஒன்றை நான் பாராட்டுவதில்லை.

நான் தமிழினத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே, நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.

------------------------(நூல்: தமிழர் தலைவர்)

இலக்கியம்

இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் உயர் வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் அது இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

-------------------------(விடுதலை, 24.11.1961)

கலைகள்

தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன?

---------------------(குடிஅரசு, 22.1.1944)

பொருளாதாரம்

நான் ஒரு நிமிடம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் திருமணம் முதலிய பல வகைகளில் ஏற்படும் பொருள் விரயத்தைத் தடுக்கத் தூக்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். பொருள் நட்டம் தான் இன்று இந்த இந்தியாவைப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன்.

--------(குடிஅரசு, 13.12.1936)

சமதர்மம்

பொது உடைமைக் கொள்கையின் கடைசி லட்சியம், உலகம் முழுவதும் ஒரு குடும்பம் _ உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள் உலகத்தில் உள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து _ குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரி பாகம் என்பதேயாகும்.

------------------------(குடிஅரசு, 10.9.1933)

சுயமரியாதை இயக்கம்

உலகில் எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால், மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திறகும், முற்போக்குக்கும் தடைகளும், காந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவைகளையெல்லாம் ஒழித்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகச் செய்ய வேண்டியதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியமாகும்.

-------------------(குடிஅரசு, 27.8.1933)

ஒழுக்கம்

மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்; அதுதான் ஒழுக்கம்.

-------------------------(விடுதலை, 7.2.1961)

பெண்ணுரிமை

பெண்களே! வீரத்தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிக மிக எளிது. ஆண்கள் உங்களைத் தான் பிற்போக்காளிகள் என்று உங்கள்மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படாமல், இவன் இன்னாருடைய கணவன் என்று அழைக்கப்பட வேண்டும்.

--------------------(குடிஅரசு, 5.6.1948)

திருமணம்

கணவன்_மனைவி என்பது கிடையாது; ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான். இதில் ஒருவருக்கொரவர் அடிமை_ஆண்டான் என்பது கிடையாது. இருவரும் சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

-----------------------(விடுதலை, 12.2.1968)

0 comments: