
பேசவேண்டாம் - பிரதமர் செயல்படட்டும்!
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அடிக்கடி கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த வழக்குகளில் 30 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் தண்டனை அளிக்கப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் தொடரப்படும் வழக்குகளில் 42 சதவிகிதம் தண்டனை விதிக்கப்படும்பொழுது இதில் மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
என்ற வினாவை எழுப்பியுள்ளவர் இந்தியாவின் பிரதமர் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
ஒரு பிரதமர் இந்தக் கேள்வியை எழுப்புவது ஆச்சரியம்தான். இதற்கான காரணங்களை அறிந்துகொள்வதற்குத் தாராளமான வசதி வாய்ப்புகள் பிரதமருக்கு இருக்கும்பொழுது இத்தகைய கேள்வி எழுப்பப்படுவது ஏன்?
முதலில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள்மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்று மேலான அதிகாரம் படைத்த பிரதமர் ஒருவர் சொல்லும் நிலையில்தான், நாடும், சமூக அமைப்பும் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டு, இதனை மாற்றி அமைப்பதற்கான உருப்படியான வரலாற்றுக் காரணங்களை முக்கியமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு திட்டங்களையும், முயற்சிகளையும் எடுப்பதற்குப் பதிலாகக் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து பிரதமர் போன்ற பதவிகளில் இருப்பவர்களும் மூக்கால் அழுவது சரியல்ல.
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று வெறும் ஏட்டளவில் தானே இருக்கிறது. இதன் மூல வேர் எங்கே இருக்கிறது? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூக மறுமலர்ச்சியாளர்களின் சிந்தனைக்கும், கருத்துகளுக்கும், திட்டங்களுக்கும் மத்திய அரசு கொடுக்கும் மதிப்பீடு என்ன? இந்தத் தலைவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள்? அவர்களின் சமுதாயச் சிந்தனைகள் என்ன என்பதை இந்தியா முழுமையும் பாடத் திட்டங்களில் வைத்துச் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டாமா?
காந்தியார் பிறந்த நாளில் சமபந்தி போஜனம் நடத்துவதால் தாழ்த்தப்பட்ட மக்களின் தாழ்நிலை தகர்ந்திடுமா?
இன்றைக்கும் அதிகாரப்பூர்வமாகத் தீண்டாமை தலைவிரிகோலமாய் ஆட்டம் போடுவது இந்து மதக் கோயில்களில்தானே! இக்கோயில் மூலக் கிரகங்களில் தாழ்த்தப்பட்டோரும் சென்று அர்ச்சகராகும் உரிமையை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டியதுதானே?
மத்திய அரசு நியமித்த இளையபெருமாள் தலைமையிலான குழு இந்தப் பரிந்துரையை வலியுறுத்தியதே. மத்திய அரசு இதனைச் செயல்படுத்தி இருக்கவேண்டாமா?
தமிழ்நாட்டில் தந்தை பெரியார், திராவிடர் கழகம் தொடர்ந்து கருத்துருவாக்கம் - சட்ட அமலாக்கம் என்கிற திசையில் பல்வேறு நடவடிக்கைகளை அழுத்தங்களை மேற்கொண்டதன் விளைவாகவே அந்தக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவரும் அர்ச்சகர் என்ற நிலை செயல்படுமேயானால், மகத்தான சமூகப் புரட்சி நாட்டில் நிகழ்ந்துவிட்டது என்றே கருதப்பட முடியும்.
இனவெறிக்கு எதிராக உலகளாவிய மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பனில் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இந்து மதம் வாழும் இந்தியாவின் ஜாதி பாகுபாடு குறித்து விவாதிப்பதற்கே தடையாக இருந்தது இந்திய அரசு தானே! (வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அப்போது) உலகளாவிய அளவில் இந்தியாவில் நிலவும் பிறப்பின் அடிப்படையிலான பேதத்தை மறைத்து விடுவதில் கட்டுக்கடங்கா ஆர்வத்தைக் காட்டினர்.
டர்பன் மாநாட்டு முடிவுகள் எந்தளவு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பது குறித்து மதிப்பீடு செய்ய ஜெனீவாவில் கூடிய (2009 ஏப்ரல், 20_24) கூட்டத்தில் கூட அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எடுத்த அதே பாணியைத்தான் இன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியும் எடுத்தது என்பது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு.
இந்த நிலையில், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் நோய்க்கான மூலத்தை விட்டுவிட்டு நிழல்மீது போர் தொடுத்து என்ன பயன்?
பாடத் திட்டங்களில் மனித உரிமைக்கு எந்த அளவு இடம் அளிக்கப்படுகிறது? வழக்குகளைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்கவேண்டும் என்ற வரையறை உண்டா?
வரையறையற்ற காலம் நீள நீள என்ன ஆகும்? சாட்சிகள் பல்டி அடிப்பார்கள். இதுதானே காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கிலும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றால், அந்தப் பாதிப்புக்குக் காரணமாக இருக்கிறவர்கள் மேல்தட்டு மக்கள் வசதி வாய்ப்புள்ளவர்கள் அவர்களால் எளிதில் சாட்சிகளை தங்கள் வசதிக்கேற்ப திருப்ப முடியும்.
நீதித்துறையில் இட ஒதுக்கீடு கிடையாது என்றால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி எங்கிருந்து கிடைக்கும்?
உண்மையான அக்கறையோடு பிரச்சினையை அணுகினால் தீர்வு கண்டிப்பாகக் கிடைக்கும். உதட்டளவில் பேசிப் பயன் இல்லை. உள்ளத்தின் வேரிலிருந்து ஊற்றெடுக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் 131 தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்து இருக்கிறார்களாம்!
---------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 10-9-2009
0 comments:
Post a Comment