Search This Blog

5.9.09

சனிப்பார்வை கடவுளையே கழுத்தறுக்குமாம்!என்று ஒழியுமோ, மூட நம்பிக்கைகள்?


சனி வீடு மாறுகிறதாம்!

சனிக்கோளை (Saturn) சனிபகவான் ஆக்கி அது இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை குடியிருக்கும் வீட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று கதை கட்டி, காசு பார்க்கிறது இந்து மதப் புரோகிதக் கூட்டம். கணக்கற்ற ஜோசியர்கள் இதை வைத்து கைநிறையப்பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வருகிற 9 ஆம் தேதி புதன் கிழமை இரவு (நள்ளிரவு) 12.01 மணிக்கு சனிபகவான் சிம்மராசி (வீட்டின் பெயர்)யிலிருந்து இடம் பெயர்ந்து கன்னிராசி எனும் வீட்டிற்குக் குடிபோகிறதாம். (தட்டு முட்டுச் சாமான்கள் தனியே வந்து சேருமோ?)

அந்த வீட்டில் கூட 14.1.2011 வரை தான் வசிக்குமாம். பிறகு 15.11.2011 ஆம் தேதியிலிருந்து துலாம் ராசி எனும் வீட்டுக்குக் குடி போய்விடுமாம். இந்துக்களின் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்தத் தேதிகள். இன்னும் ஒரு பஞ்சாங்கம், சுத்த வாக்கியப் பஞ்சாங்கம் என்ற பெயரில் வைத்திருக்கிறார்கள். அதன்படி என்ன தேதிகளோ?

வானவெளியில் இருக்கும் ஒரு கோளைப் பகவானாக்கி, அது பாதகம் செய்கிறது என்று புளுகி, மக்களைப் பரிகாரம் என்ற பெயரில் காசு, பணம் செலவழிக்கச் செய்து ஏமாற்றி வரும் கும்பல் பலப்பல புளுகுகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

சனியின் தந்தை சூரியனாம். தாய் சாயாதேவியாம். சனியின் உடன் பிறப்புகள் சாவர்ணிமனு, தபதி எனும் பத்திரை.இதன் பெரிய தாய் உஷாவாம். அதன் மக்கள் வைவஸ்த மனு, யமன், யமுனை. சனியின் வண்டி காக்கை. அது இரும்பால் செய்யப்பட்டதாம். அதனை இழுத்துச் செல்பவை 8 குதிரைகளாம். (அப்பன் சூரியனின் தேருக்கு 7 குதிரைகள்தான்.)

சனிபகவான் ஆணுமற்ற, பெண்ணுமற்ற அலி கிரகமாம். நிரம்பக் குரூரக் குணம் கொண்டதாம். ஆனால் மந்தமானதாம். இதன் பார்வை பட்டதால்தான் பார்வதியின் மகன் பிள்ளையாரின் தலை காணாமல் போய்விட்டதாம். பிறகு கிருஷ்ணன் யானைத் தலையைஅரிந்து எடுத்து வந்து கழுத்தில் பொருத்தினான் என்று புராணம் புளுகுகிறது.


சனிப்பார்வை கடவுளையே கழுத்தறுக்கும் என்று எழுதி வைத்துவிட்டால் படிக்கும் - கேட்கும் மக்கள் பயப்படுவார்கள் என்பது உள்நோக்கம்!

இரும்பைக் காய்ச்சி அடித்து, கருவிகள் செய்வது போலவே, சனி பகவான் கஷ்டங்களைக் கொடுக்கிறதாம். மனிதர்களின் ஆயுளை சனிதான் தன் பொறுப்பில் வைத்திருக்கிறதாம். எனவே 100 ஆண்டு வாழ்வதும் அல்ப ஆயுளில் சாவதும் சனியின் செயலால்தானாம்!
இப்படியே இந்து மதத்தவர் புளுகும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்! இதையும் நம்பும் மடையர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

என்று ஒழியுமோ, மூட நம்பிக்கைகள்?

-------------------"விடுதலை" 4-9-2009

0 comments: