Search This Blog

29.9.09

ஆட்சி மொழியும், மாநில சுயாட்சியும்



காஞ்சிபுரத்தில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட விழாவில் நிறைவேற்றப்பட்ட எட்டு தீர்மானங்களும் நறுக்குத் தெறித்தவையே!

இந்தியாவில் உள்ள தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும் என்ற ஒரு தீர்மானமும், அதனையொட்டி மாநிலங்களுக்கு சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற தீர்மானமும் இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளே!

இது இன்று நேற்றல்ல வெகுகாலமாக தி.மு.க.வால் எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகள்தான்.

இப்பொழுது மேலும் அழுத்தம் கொடுத்து, ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, செயல்பாடு என்கிற கட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான முனைப்பு என்றே இதனைக் கருதவேண்டும்.

இது ஒரு கட்சியின் தீர்மானமாகக் கருதப்படாமல், இனம், மொழி, பண்பாடு என்ற தனித்தன்மையைக் காப்பாற்றவேண்டும் என்கிற இயல்பான உணர்வு கொண்ட அனைவராலும் வரவேற்கப்படவேண்டியதுமாகும்.

இது ஏதோ இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எழுந்துள்ள உயிர்த்துடிப்புள்ள பிரச்சினையாகும்.

உண்மையைச் சொல்லப்போனால், இந்தியா என்பது ஒரே நாடல்ல பல முரண்பட்ட இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழுகிற துணைக் கண்டமாகும்.

தேசிய ஒருமைப்பாடு என்றால், மாநிலங்கள் தங்கள் இனம், மொழி, பண்பாடு அனைத்தையும் துறந்துவிட்டு கரைந்துபோய்விடவேண்டும் என்று பொருள் அல்ல!

இனத்தைப்பற்றிப் பேசினால் இனவாதம், மொழியைப்பற்றிப் பேசினால் மொழிவாதம், பண்பாட்டைப் பற்றிப் பேசினால் துவேஷம் என்று நினைக்கிற, சொல்கிற, பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறது. இதுதான் பார்ப்பனர்கள்; ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்றால், தங்களுக்கு இல்லாதது மற்றவர்களுக்கும் இல்லாததாக ஆக்கப்படவேண்டும் என்கிற குறுகிய புத்தியாகும்.

அவர்களுக்கென்று ஒரு நாடு கிடையாது; அவர்களுக்கென்று உள்ள சமஸ்கிருத மொழியோ செத்துச் சுண்ணாம்பாகி விட்டது_ செத்த மொழி (Dead Language) என்று கூறப்படும் அவல நிலைக்கு ஆளாகிவிட்டது. இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவதாகக் கூறப்படுவோர் எண்ணிக்கை 0.01 ஆகும்.

இந்த நிலையில் பார்ப்பனர்கள் தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள எங்குப் போய் முட்டிக்கொள்ள முடியும்?

இன்று உலகில் கிட்டத்தட்ட 20 நாடுகளில் கூட்டாட்சி முறை வெற்றிகரமாக நடந்துதான் வருகிறது. பிரிந்து செல்லும் உரிமை கூட வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பெற்று வரும் ஒரு சிந்தனைப் போக்கில் பெட்டியில் அடைக்கப்பட்டு பூட்டப்பட்ட பொருள்களாக மக்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மாநிலங்களில் சுயாட்சிபற்றி ஆய்வு நடத்தி கற்றுத்தேர்ந்த அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்கள் அறிக்கைகளைக் கொடுத்திருக்கின்றன. ராஜ மன்னார் குழு (1969_71), சர்க்காரியா தலைமையிலான குழு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பூஜ் தலைமையிலான குழு (2007) என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன; அதற்காக பல கோடி ரூபாய்களும்கூட செலவழிக்கவும்பட்டன. ஆனாலும், அவற்றைச் செயல்படுத்த மத்தியில் உள்ளவர்களுக்கு மனம் மட்டும்தான் இறங்கி வரவில்லை. ஆதிக்கத்தின் சுவையை ருசித்தவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள்.

நிலைமை என்ன ஆயிற்று என்றால், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல் மாநில அதிகாரத்தின் கீழிருந்த பல துறைகள், அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுப்பட்டியலுக்குக் கடத்தப்பட்டன என்பதுதான் உண்மை.

எடுத்துக்காட்டாக, மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இப்பொழுது கூட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் இருந்த உள்ளாட்சித் துறையை மத்திய ஆட்சியின் நேரடித் தொடர்பில் கொண்டு செல்லும் முயற்சிதான். அதற்காக மிகப்பெரிய திட்டம் பின்னப்பட்டது.

2008 ஏப்ரல் 22_24 ஆகிய நாள்களில் புதுடில்லியில் உள்ளாட்சித் தலைவர்களின் மாநாட்டினை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கூட்டியது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உள்ளாட்சியை வலுப்படுத்துவது உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு ஏராளமான நிதிகளை ஒதுக்கச் செய்து, அவர்களின் உதடுகளில் தேன் தடவி, மாநிலப் பட்டியலில் இருப்பதைவிட மத்திய ஆட்சியின் நேரடித் தொடர்பில் இருந்தால் நல்லது என்கிற தன்மையான ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதுதான் மத்திய அரசின் நோக்கமாகும். அதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு, மாநாட்டில் பிரதமரிடம் அளிக்கும் வரைவுத் தீர்மானமும் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலையிட்டதன் காரணமாக அந்தப் பரிந்துரை விலக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகள் அம்மாநாட்டுக்குச் செல்லவில்லை.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் காஞ்சிபுரம் விழாவில் சரியான ஒரு காலகட்டத்தில் ஆட்சி மொழித் தீர்மானமும், மாநில சுயாட்சித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று பொதுக் கருத்தை உருவாக்கும் ஒரு முயற்சியில் முதல்வர் கலைஞர் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்!


--------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 29-9-2009

0 comments: