Search This Blog

5.9.09

பார்ப்பனருடைய ஆதிக்கத்தைப் புறந்தள்ள வேண்டும் - வ.உ.சி.



வ.உ.சி.

இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த நாள் (1872). பொதுவாக வ.உ.சி. என்றால் அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதேசிக் கப்பல் ஓட்டினார் என்பது மட்டுமே தெரியப்பட்ட ஒரு பக்கமாகும். அந்த வகையில் பார்த்தாலும் இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டதில் அவருக்கு நிகராகத் தியாகம் செய்த செம்மல் ஒருவரை பார்ப்பனர் சமூகத்தின் எந்த மூலையில் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்.

ஆனாலும், அவர் தமிழராகப் பிறந்த ஒரு குற்றத்துக்காக அவரின் உயர் பெரும் தியாகம் இருட்டடிக்கப்பட்டது. அவரின் வாழ்வும், வாரிசுகளும் வறுமைச் சிறையில் சிக்கினர்.
அவரது இன்னொரு பக்கம் என்பது பார்ப்பனர் அல்லாதார் உணர்வின் வயப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வயப்பட்டது.

இதோ வ.உ.சி. பேசுகிறார்:

நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்கள் அந்தஸ்து உயர்ந்துள்ளது. நீதிக்கட்சிதான் தமிழ் மக்களிடத்துப் பிறப்பும், தமிழர்களின் வாழ்வில் ஒரு உருப்படியான சேவையும் செய்துள்ளது.
உதாரணமாக நான் முன்பெல்லாம் இந்து பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றபோது திரு. கஸ்தூரி ரெங்க அய்யங்கார், வாடா சிதம்பரம் என்று அழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் நான் போனேன், வாங்கோ சிதம்பரம் பிள்ளை; சவுக்கியமா? என்று அழைத்தார் என்று குறிப்பிடுகிறார்.


மிக மேன்மையான கல்வியும், அந்தஸ்தும் பெற்றிருந்த வ.உ.சி.க்கே இந்த நிலை என்றால், பார்ப்பனர்களின் ஜாதி ஆணவத்தின் திமிர் எத்தனை டிகிரியில் இருந்திருக்கும் என்பதை எளிதில் அறியலாம்.

3.5.1936 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சர்வக்கட்சிப் பார்ப்பனர் அல்லாதார் கமிட்டிக் கூட்டத்திற்கு வ.உ.சி. அனுப்பிய ஒரு செய்தியில் வ.உ.சி. என்னும் பத்தரை மாற்றுத் தங்கத்தின் தகதக ஒளியை உணரலாம்!

நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில், அதிலும் முக்கியமாகத் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில் பெருந்தொகையினர்களாகிய பார்ப்பனரல்லாதார்கள் பல துறைகளி-லும் சிறு தொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்திற்குட்பட்டுப் பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவு நிலைமையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை. அதைப்பற்றி நான் பெரிதும் கவலையடைகிறேன். பார்ப்பனருடைய ஆதிக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு, பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன் என்று வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த வ.உ.சி.யை இந்த வகையில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

---------------- மயிலாடன் அவர்கள் 5-9-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: