Search This Blog
7.4.09
நமது வாழ்க்கையில் கொள்கைகள், இலட்சியங்கள் (Principles) என்பவை கலங்கரை விளக்கு போன்றவை!
ஒரு பழைய "ரீடர்ஸ் டைஜஸ்ட்" மாத ஏடு - 1983 (டிசம்பர்) ஒரு நகைச்சுவை உணர்வு ஊட்டும் ஒரு துணுக்கு:
"மிகவும் பனிமூட்டம் நிறைந்த இரவு. நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருக்கிறது.
திடீரென ஏராளமான விளக்கு வெளிச்சத்துடன் ஓர் அசைவு - மற்றொரு கப்பல் எதிர்த் திசையில் இக்கப்பலை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
இக்கப்பலில் உள்ள கேப்டன், அங்குள்ள சிக்னல் மேனை - விளக்கொளிமூலம் பாதை காட்டும் பணியாளர் - அழைத்து ஓர் அவசரச் செய்தியை உடனே அனுப்பித் தொடர்புகொள்ளுமாறு பணித்தார்.
அச்செய்தி இதுதான்:
"உங்கள் பாதையை தெற்குப் புறமாக 10 டிகிரி மாற்றிச் செல்லுங்கள் உடனே!"
உடனடியாக எதிர் வந்த கப்பலிலிருந்து ஒரு பதில் - அவசரச் செய்தி:
"நீங்கள் (இந்தக் கப்பல்) உங்கள் பாதையை (நடுக்கடலில்) 10 டிகிரி வடக்கே மாற்றுங்கள்."
உடனே, அக்கப்பலிலிருந்து, "நான் கப்பலின் கேப்டன் சொல்கிறேன்; உங்கள் பாதையை 10 டிகிரி தெற்கே மாற்றிச் செல்லுங்கள்."
அதற்கும் எதிர்க்கப்பலிலிருந்து உடனடியாக ஓர் அவசரச் செய்தி:
"நான் அனுபவம் மிகுந்த கடற்பயண நிபுணன் (Seaman first class) சொல்கிறேன். உங்கள் கப்பலின் பாதையை 10 டிகிரி வடக்கே மாற்றுங்கள்."
இந்தப் பதில் அக்கப்பலின் கேப்டனை மிகவும் எரிச்சலூட்டி ஆத்திரமடையச் செய்தது!
அதனால் அக்கேப்டன் மீண்டும் ஒரு செய்தி அனுப்புகிறார்:
"நான் ஒரு சண்டைக்கப்பல் (battle Ship) எனவே அதைப் புரிந்து உங்களது பாதையை உடனடியாக 10 டிகிரி தெற்கே செல்லுமாறு மாற்றுங்கள்!"
அதற்கும் உடன் ஒரு பதில் அக்கேப்டனுக்குக் கிடைக் கிறது.
"நான் கலங்கரை விளக்கு. (லைட் அவுஸ்) உங்கள் பாதையை 10 டிகிரி வடக்கே போகும்படி மாற்றுங்கள்" செய்திகள், கருத்துப் பரிமாற்றம் முடிவுற்றது!
இந்த இரு தரப்புச் செய்திகள் - பதிலடிகளிலிருந்து நாம் புரிந்துகொண்டு வாழ்க்கையில் செயல்பட பல பாடங்கள் உண்டு அல்லவா?
என்னதான் நாம் போர்க்கப்பலாக இருந்தாலும், அந்த மாலுமி எவ்வளவுதான் திறமையுள்ளவராக இருந்தாலும், அவர் தகுதி, ஆற்றல், அந்தஸ்து (Rank) எவ்வளவு பெரியதானாலும், எதிரே இருந்து வரும் எச்சரிக்கை எங்கிருந்து வருகிறது? அதற்குப் பணிந்தாக வேண்டிய நேரத்தில் பணிந்துதானே ஆகவேண்டும்? இதைப் புரியாமல் நாம் வறட்டு ஜம்பமும், தேவையற்ற அதிகார ஆணையும் கொண்டு நடந்துகொண்டால் நட்டம் யாருக்கு? அறிவுரையை அலட்சியப்படுத்திடுவோருக்குத் தானே!
கப்பல்கள் கடலில் பயணிக்கக் கூடியவை; அவை தத்தம் பாதையை மாற்றிடுவது - கவுரவம் பார்க்காமல், தன்முனைப்புக்கு ஆளாகாமல் செயல்படவேண்டியது அவசியம்.
அதைவிட அலட்சியப்படுத்தப்பட முடியாத ஓர் எச்சரிக்கை (லைட் அவுஸ்) கலங்கரை விளக்கிலிருந்து கிடைக்கும் போது யாரும் அலட்சியப்படுத்த முடியாதே!
கப்பல்கள் அசையும் பொருள்கள்; கலங்கரை விளக்கமோ என்றும் அசையாமல் அதே இடத்திலிருந்து ஒளி பாய்ச்சி கப்பல்களுக்கு வழிகாட்டும் ஒளிகூட உதவியாளர் பங்கைச் செய்யும் கருவி அல்லவா?
நமது வாழ்க்கையில் கொள்கைகள், இலட்சியங்கள் (Principles) என்பவை கலங்கரை விளக்கு போன்றவை! அது இடம் மாறாது ஒளி காட்டும் பணியாற்றுபவை. கப்பல்களை ஓட்டுவது போன்றது நமது வாழ்க்கை. அதனை "விபத்தில்" சிக்காமல் பயணிக்கச் செய்யவேண்டுமானால், தன்முனைப்புக்கு (Ego) இடந்தராது, கொள்கைச் சமரசத்தை செய்துகொள்ளாது வாழ நமக்கு அந்தத் துணுக்கு அறிவைப் போதிக்கும் பாடம் அல்லவா?
இது தனி நபர், குடும்பங்களுக்கு மட்டுமல்ல, இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகளில் உள்ளவர்கள் உள்பட அனைவருக்கும் பொருந்தும் படிப்பினையை வழங்கும் துணுக்கு அல்லவா?
கலங்கரை விளக்குகளுக்கு மாறாகச் செல்லும் கப்பல்கள் இலக்கை அடைய முடியாதே! கலங்கரை விளக்கு யாருக்காகவும் தன் கடமையிலிருந்து பின் வாங்காதே!
--------------கி.வீரமணி --- 6-4-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment