Search This Blog

23.4.09

தனியீழமே தீர்வு

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரின் கொடுமையை இன்றைய தினம் உலகமே உணர்ந்துவிட்டது. சொந்த நாட்டு மக்களை இராணுவம் கொண்டு தாக்குவது என்பது எங்குமே கேள்விப்படாத ஒன்று.

இதன்மூலம் ஈழத் தமிழர்களை அந்நாட்டு குடி மக்கள் அல்ல என்று இலங்கை அரசு பிரகடனப் படுத்திவிட்டது. அந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களான சிங்களர்கள் தமிழர் இனம் என்பதை தங்களின் பகைமைக்குரிய இனமாகக் கருதும் நிலை அங்கு அப்பட்டமாகத் தெரிகிறது.

தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சிங்களர்களைக் கொண்டு வந்து வலுக்கட்டாயமாகக் குடியேற்றியது என்றால், இதன் பொருள் என்ன?

தமிழர்களின் மரபுவழி பூர்வீகப் பகுதிகளில்கூட அவர்கள் சிறுபான்மையினர்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற சதி இதன் பின்னணியில் இருப்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆட்சிமொழித் தகுதியிலிருந்து தமிழும் தூக்கி எறியப்பட்டுவிட்டது. சிங்களர் - பவுத்தர் மட்டும்தான் அதிபராக முடியும் என்பது சட்ட ரீதியாகவே ஆக்கப்பட்டுவிட்டது.
தமிழ் மக்களின் பிள்ளைகளின் கல்வி என்பது அநேகமாக இல்லாமலே ஆக்கப்பட்டுவிட்டது. யுத்த பூமியாக ஆக்கப்பட்ட ஒரு மண்ணில் பிள்ளைகள் படிப்பைப்பற்றித்தான் கவலைப்பட முடியுமா?

இத்தகைய ஒரு மோசமான சூழ்நிலையில், ஈழத் தமிழர்கள் இலங்கை இறையாண்மைக்குக் கட்டுப் பட்டு வாழவேண்டும் என்று யாரேனும் கருத்து சொல்வார்களேயானால், அவர்கள் மனித உரிமை, சமத்துவம் இவற்றைக் காலில் போட்டு மிதிப்பவர் களாகத்தான் இருக்க முடியும் - புழுவாக, பூச்சியாக வாழவேண்டியதுதானே என்று கூறும் பாசிஸ்டு களாகத்தான் இருக்க முடியும்.

தொடக்கக்கால கட்டத்தில் வெறும் மாநில உரிமை என்ற முழக்கம்தான் எழுந்தது. சிங்கள பாசிச இராணுவ ஆட்சிதான் ஈழத் தமிழர்களை தனி ஈழம் முழக்கத்தை எழுப்ப வைத்தது.

இன்றைக்கு ஈழத்தமிழர்கள் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களில்கூட இதில் தெளிவற்ற நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) செயலாளர் திரு. என். வரதராசன் அவர்கள் என்ன கூறுகிறார்?

ஈழத் தமிழர்களுக்காக சுய நிர்ணய உரிமை என்று ஜெயலலிதா கூறும் கோஷத்தை நாங்கள் ஏற்க வில்லை. தனி ஈழம் என்பதற்கும், சுய நிர்ணய உரிமை என்பதற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை! (தீக்கதிர், 4.11.2008) என்று கூறியிருக்கிறார்.

சுய நிர்ணய உரிமை என்பதுபற்றி புரட்சியாளர் லெனின் கூறியவை எல்லாம்கூட, தமிழர்கள் என்று வரும்போது மார்க்சிஸ்ட்களின் கண்களை மறைத்து விடுகிறது.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்கூட, இலங்கையின் இறையாண்மைக்கு உள்பட்ட தமிழர்களின் வாழ்வு பற்றிதான் இதுவரை கூறி வருகிறார்கள்.

இதுவரை யார் என்ன கூறியிருந்தாலும், கருத்துகளை வைத்திருந்தாலும் இலங்கையில், தமிழின அழிப்பு (Genocide) என்பது திட்டவட்டமான வகையில் நடைபெறும் கொடுமையை அறிந்த இந்த நிலையில் - தனி ஈழம்தான் இதற்கொரு தீர்வு என்ற முடிவுக்கு வந்தாகவேண்டும்.

ஒன்றுபட்ட ருசியாவே இன, மொழி, பண்பாடு அடிப்படையில் பிரிந்து தீரவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டது.

இலங்கை இறையாண்மைக்கு உள்பட்ட தமிழர் வாழ்வு என்ற பல்லவியை இனி யாரும் பாடாமல் இருப்பதுதான் ஈழத் தமிழர்களுக்குச் செய்யப்படும் மகத்தான உதவியாகும்.

-------------------"விடுதலை"தலையங்கம் 22-4-2009

2 comments:

மனசாட்சி said...

/*இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரின் கொடுமையை இன்றைய தினம் உலகமே உணர்ந்துவிட்டது. */

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை

ஆனால் தமிழர்களை அனைவரையும் கொலை செய்யும் காங்கிரஸிம், இன்னும் அவர்களுடந்தான் கூட்டணி வைப்பேன் என்று கருணாநிதியும்

இதை ஆதரிக்கும் வீரமணியும் புரிந்து கொள்வார்களா

நம்பி said...

Blogger மனசாட்சி said..

//ஆனால் தமிழர்களை அனைவரையும் கொலை செய்யும் காங்கிரஸிம், இன்னும் அவர்களுடந்தான் கூட்டணி வைப்பேன் என்று கருணாநிதியும்//

என்ன செய்வது? இலங்கை நாட்டில் போய், தமிழக மக்கள் நலனுக்காக, இந்த கட்சியோடகூட்டணி வைக்காதீங்க! தேர்த்லை முற்றிலும் புறக்கணியுங்க! என்று இலங்கைத் தமிழர் கட்சிகளை நாம் சொல்ல முடியாதே! சொன்னாலும் கேட்கப் போவதில்லை! போயா பேக்குப்! அப்படின்னு சொல்லுவாங்க! எங்களுக்கு எங்க பிரச்சினைதான் முக்கியம் என்று சொல்லுவாங்க!

அதே போல இங்க வந்து இலங்கைத் தமிழர்களின், ஒரு சில நபர்களின் திருப்திக்காக எல்லாம் இங்கே கூட்டணி அமைக்க சொல்ல முடியாதே...! சொன்னா மேலே சொன்னது தான் நடக்கும்!....என்னஞ் நான்ஞ் சொல்வது!