Search This Blog

26.4.09

பா.ம.க.வின் தமிழ்ஓசை ஏடு வெளியிட்டசெய்தியின் தன்மை

யாருக்காக வக்காலத்து?

இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி டாக்டர் அன்புமணி குரல் கொடுக்கவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். அன்புமணி சுகாதாரத் துறையைக் கவனித்து வந்தார். வெளியுறவுத் துறை செய்யவேண்டியதை சுகாதாரத்துறை மந்திரி எப்படி செய்ய முடியும்? பொறாமையின் காரணமாக அன்புமணியையும், பா.ம.க.வை யும் விமர்சித்து வருகிறார்.
-----------(தினத்தந்தி, 19.4.2009).

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் தான் இவ்வாறு கூறியுள்ளார்.

தன் மகனைக் காப்பாற்றுவதில் எப்பொழுதுமே மருத்துவருக்குக் குறிதான்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டம் (14.10.2008) கூட்டி இரண்டு வாரங்களில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி பா.ம.க.வின் தமிழ்ஓசை ஏடு எப்படி செய்தி வெளியிட்டது?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று செய்தி வெளியிட்டபோது, நாடாளுமன்றம் என்பதையடுத்து அடைப்புக்குறியில் (மக்களவை) என்று குறிப்பிடுகிறது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை வரவேற்று, அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட மிகவும் விழிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று தெரிவித்து அடைப்புக் குறிக்குள் மக்களவை என்று திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஏன் அப்படி ஒரு நிலைப்பாடு - அக்கறை? தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் மக்களவையைத்தான் கட்டுப்படுத்தும் - மாநிலங்களவைக்கு அது பொருந்தாது என்று காட்டவேண்டும் - அதற்காகத்தான் இந்த குயுக்தி.


ஏன் அப்படியொரு நிலை? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் மகன் மருத்துவர் அன்பு மணி ராமதாசு மாநிலங்களவை உறுப்பினராயிற்றே - அவர் பதவி விலகலாமா? அதற்காகத்தான் அந்தப் பாதுகாப்பு வளையம் - அதாவது அடைப்புக் குறி.
அதன் பின்னால் விளக்கங்கள் வேறு. பொதுவாக நாடாளுமன்றம் என்று சொன்னால் அது மக்களவையைத் தான் குறிப்பிடுமாம்.

அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். ஒரு முன்மாதிரியாக ஈழத் தமிழர்ப் பிரச்சினையின் அதிமுக்கியத்துவத்தைக் கருதி, மாநிலங்களவை உறுப்பினரான நானும் பதவி விலகுகிறேன் என்று சொல்லவேண்டியதுதானே! சாவின் விளிம்பில் நிற்கும் இலட்சோபலட்ச ஈழத் தமிழர்களுக்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதா?
சம்பிரதாய சந்து பொந்துகளில் போய் ஒளிவானேன்? தன் மகன் என்றால் அப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

பொதுத்தேர்தலில் நிற்க வைக்காமல், மாநிலங்களவை உறுப்பினராக ஆக்குவது சங்கடம் இல்லாத, உழைப்பே இல்லாத, உல்லாசமாக எம்.பி.யாகும் வாய்ப்பு இருக்கும் போது எதற்காக பொதுத்தேர்தலில் ஈடுபட்டு, பல நாள்கள் இரவு பகலாக அலைவது - பணத்தைச் செலவழிப்பது இத்தியாதி, இத்தியாதி சங்கடங்கள்.

இந்தத் தந்தையின் பாசம்தான் ஈழப்பிரச்சினையில் சுகாதார அமைச்சரான அன்புமணி தலையிட முடியுமா? ஈழப் பிரச்சினை என்பது வெளியுறவுத் துறையையல்லவா சார்ந்தது? என்று தொழில்நுட்ப ரீதியாக பேச ஆரம்பிக்கிறார்.

அமைச்சர்களுக்குத் தனித்தனி துறைகள் இருந்தாலும் அது கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததே! அமைச்சரவையில் விவாதம் என்று வரும்பொழுது எந்தத் துறை அமைச்சரும் தம் கருத்துகளை, ஆலோசனைகளை எடுத்துக் கூறலாமே!

எடுத்துக்காட்டாக ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 170 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலைச் சந்தித்த குழுவுக்குத் தலைமை வகித்தவர் யார் தெரியுமா? அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். இது அவரது சுகாதாரத் துறையைச் சார்ந்ததா? சமூகநீதித் துறை - புள்ளியல் துறையைச் சார்ந்ததாயிற்றே!

இந்தச் செய்தியை ஒரு அறிக்கை வாயிலாக வெளியிட்டவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள்தான்.

தன் மகன் சுகாதாரத் துறை அமைச்சர், அவர் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த ஈழப் பிரச்சினையில் தலையிட முடியாது என்று வக்காலத்து வாங்கிய மருத்துவர் இராமதாசுதான், ஜாதி வாரியாகக் கணக்கெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உள்துறை அமைச் சரிடம் வைத்தவர் அன்புமணி ராமதாஸ் என்று பெருமை யோடு, புளகாங்கிதத்தோடு அறிக்கைமூலம் வெளிப்படுத்துகிறார்.


எதிலும் தன்னலம் என்ற பார்வை தவறானது - அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் எடுத்துக் காட்டாக இருக்கவேண்டுமே தவிர, கெடுத்துக்காட்டுவதாக அமையக்கூடாது.


-------------------"விடுதலை" தலையங்கம் 254-2009

0 comments: