Search This Blog

8.4.09

'மதம்' வந்தது எப்போது?






தமிழர்க் கடல் மறைமலை அடிகளார் தமிழர் மதம் என்ற நூலில்
மதம் இன்னதென்பது என்ற அத்தியாயத் தலைப்பில் குறிப்பிடும் சில கருத்துக்களில், சமயம் மதம் என்பதே கூட தமிழர்களுக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்னே, இல்லை, காணவே இல்லை.

கடவுள், மதம், ஜாதி, ஆத்மா போன்ற சொற்கள் கூட நமது பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தேடினாலும் கிட்டாது பிறகு இடையே வந்த பிறகு புகுத்தவைகளாக ஆகிவிட்டன.

அதிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தியே பார்ப்பனர் அதிலும் ஊடுருவி, பக்தி போதையை ஊட்டினர் என்பது ஆழ்ந்து சிந்திக்கும் எவருக்கும் புரியும்.

சைவ சமயக் குரவர்களில் நால்வரில் மூவர் (அப்பர் என்ற திருநாவுக்கரசரைத் தவிர்த்து) பார்ப்பனர்களே,

அவர்கள் கடவுள், மதங்களை மிகவும் சாமர்த்தியமாக எப்படிப் புகுத்தினர். ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு போன்றவைகளை உள்ளடக்கிய சமணத்தையும், பவுத்தத் நெறிகளையும், எப்படி விரட்டி அழித்தனர் என்பதுகூட, (மறைமலைஅடிகளார் சைவப் பெரியார் என்பதை மறக்காமல்) பார்த்தால் தெளிவு பெறுவோம்.

அவர் கூறுகிறார்:

இங்ஙனமாக இமயம் முதற் குமரி வரையிற் பண்டும் இன்று பரவியிருப்பவர் பெரும்பாலும் தமிழரும் அவரினத்தைச் சேர்ந்த திராவிடருமே என்பது பெறப்படுதலால், இனி அம் மக்களில் மதம் பண்டும் இன்றும் எத்தன்மையதாய் இருந்தது; இருக்கின்றது, இனி எதிர்காலத்தே அஃதெவ்வாறு இருக்குமென்பது ஆராயற்பாற்று. அவ்வியல்புகளை ஆராயும் முன் மதம் என்னுஞ் சொற்பொருளும் அதன் வழக்கும் ஆராய்ந்து காண்பது இன்றியமையாததாய் இருக்கின்றது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல்கள் மட்டுமே மதம் என்னுஞ் சொற், கடவுளைப் பற்றியாதல் உயிரை பற்றியாதல் உலகத்தைப் பற்றியாதல் ஒழுக்கத்தைப் பற்றியாதல் மக்கட் குழுவினர் கொண்ட கொள்கைக்கும் பெயராய்த் தமிழ் நூல்களில் வழங்கப்பட்டு வருகின்றது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு அஃதாவது இன்றைக்கு ஆயிரத்தெழுநூலு ஆண்டுகட்டு முற்பட்ட நூல்களில் மதம் என்னுஞ் சொல் கொள்கையென்னும் பொருளில் வருதலைக் காண்கிலோம். புறநானூறு, பரிபாடல், பத்துப்பாட்டு முதலான பழைய இலக்கியங்களில் மதம் என்னும் சொல் வலிமை, செருக்கு அறியாமை, அழகு முதலான பொருள்களில் வருகிறதே யன்று கொள்கை யென்னும் பொருளில் வரவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதான மணிமே-கலையிங் கூட சமயம் என்னுஞ்சொல் வந்திருக்கின்றதேயன்றி, அதற்கு ஈடாக மதம் என்னும் சொல் வரவில்லை. கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதற்பாதியிற்றோன்றிய மாணிக்க-வாசகப் பெருமான் அருளி செய்த திருவாசக காலத்திலிருந்து தான் மதம் என்னும் சொல் கொள்கை யென்னும் பொருளில் இன்றுகாறும் வழங்கி வருகின்றது. இடைப்பட்ட காலத்தெழுந்த நன்னூல் முதலாவது இலக்கண நூல்களும் மதம் என்னும் சொல்லைக் கொள்கையென்னும் பொருளில் வழங்கி வருதல் ஏழு வகை மதமே யுடம் பாமறுத்தல் என்னும் நன்னூற் சூத்திரத்தால் அறியப்பட்ட ஆனாற், பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தில் மதம் என்னும் சொல்லாதல் சமயம் என்னும் சொல்லாதல் எவ்விடத்துங் காணப்படவே இல்லை. இதுகொண்டு பல்வகை மதங்களும் இத்தமிழ் நாட்டிற் தோன்றுவதற்கு முன்னமே தொல்காப்பியம் இயற்றப்பட்டமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு விளங்காநிற்கும்; அங்ஙனமே மணிமேகலை காலத்திற்கு அஃதாவது ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட எந்தத் தமிழ் இலக்கியத்திலும் சமயம், மதம் என்னும் சொற்கள் வழங்காமையை உற்று நோக்குங்கால், ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னே இத்தென்றமிழ் நாட்டின்கண்ணே பல்வகைச் சமயப் பகுப்புகள் பல்வகை மதவேறுபாடுகள் இருந்திலாமை தெற்றென விளங்கா நிற்கும்.
மற்றும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னில்லா சமயப் பகுப்புகளும் மத மாறுபாடுகளும் இத்தென்றமிழ் நாட்டிற் றோன்றித் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து, அவரை ஒருவரோடொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலானமை, மாணிக்கவாசகப் பெருமான்,
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்,
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின;
ஆத்தமானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்;
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்;
விரத மேபர மாக வேதியருஞ்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்,
சமய வாதிகள் தத்தம் மதங்களில்
அமைவதாக அரற்றி மலைந்தனர்;
மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து
உலோகா யதனெனும் ஒண்டிறப் பாம்பின் கலாபேதத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்
என்று அருளிச் செய்த போற்றித் திருவகவற் பகுதியால் நன்கு புலனாகின்றதன்றோ? கடவுளும் உயிரும் இல்லையெனப் பாழ் கொள்கை பேசும் நாத்திகரும்; வேள்வி மாற்றுதல் பட்டினி கிடத்தல் முதலான வினைகளே ஒருவர்க்கு வீட்டின்பத்தைத் தரும்; இவற்றின் வேறாகக் கடவுள் ஒருவன் உளனென்று கொண்டு அவனை வழிபடுதலும் பிறவும் வீணேயாமெனக் கரையும் மீமாஞ்சகரும், உயிருங் கடவுளுமெல்லாம் பொய், அறவே மெய்யெனக் கழறும் பௌத்தரும், இவ்வுடம் போடிருந்து உலக இன்பங்களை நுகருதல் விடுத்துக் கடவுளும் உயிரும் இருவினையும் மறுமையும் மறுபிறப்பும் உளவெனக் கொண்டு உழன்று உடம்பை மாய்த்தல் அறியாமையேயாம் எனக் கூவும் உலோகாய தரும் இவரின் இன்னும் பல்வேறு வகையான சமயவாதிகளும் மாணிக்கவாசகர் காலத்தும் அவர்க்கும் முற்பட்ட மணிமேகலை ஆசிரியரான கூலவாணிகன் சாத்தனார் காலத்தும் இத்தமிழ் நாட்டின்கண் வந்து பல்கிவிட்டமை மேற்காட்டிய மாணிக்கவாசகர் திருமொழியாலும், மணிமேகலையிற் சமயக்கணக்கர் தந்திறம் கேட்ட காதையாலும் நன்குணரப்படும்.
கௌதம புத்தர் காலத்திருந்து வடநாட்டுப் பார்ப்பனர் தென்றமிழ் நாடு புகுந்து சோழ பாண்டிய அரசர்களைத் தம் வயப்படுத்தி, அவருதவியாற் பல வேள்விகள் வேட்டு ஆரிய சிறு தெய்வ வெறியாட்டு வேள்வியை இந்நாட்டிற் பரப்ப முயன்றவராயினும், அருளொழுக்கத்திம் ஒரு முழுமுதற் கடவுள் வழிபாட்டிலும் உறைத்து நின்ற வேளாண் மாந்தர்க்கு அவரையே பெரிதுஞ் சார்ந்த ஏனைத் தமிழ்ப் பொதுமக்கட்கும் ஆரிய வேள்வி இசையாமையின், அஃதிங்கு வேரூன்றாமலே ஒழிந்து போயிற்று. ஆகவே, ஆரிய மதம் என ஒன்று இத்தமிழ்நாட்டில் நிலை பெறாதொழியினும், இங்கு வந்த வடநாட்டுப் பார்ப்பனர் தமிழ்ப் பொதுமக்களுடன் கலந்து தமிழ்மொழியை நன்கு பயின்று அதில் வல்ல நல்லிசைப் புலவர்-களாயுந் தமிழ் தெய்வமாகிய சிவபிரானையே வணங்கித் தமிழ் மேன்மக்கள் கொள்கையின் பாலராயும் மாறிவிட்டமையின் ஆரியமதம் தமிழர் மதம் என இருவேறு மதங்கள் தோன்று-வதற்கு இடமில்லா நா போந்து நிலைபெற்ற பௌத்தர் சமணர்களாலே தாம் இங்கே பல வேறு மதங்களும் மத வழக்குகளும் கிளைக்கிலாயினவென்று அறிதல் வேண்டும். அசோக வேந்தன் காலத்திருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சிறிதேறக்குறைய முந்நூறாண்டுகளாக இங்கு வந்து அமைதியாய் வாழ்ந்த பௌத்த சமணர்கள், சோழ, பாண்டிய அரசு நிலைகுலையலான கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதற் றமிழ்நாட்டின் மேற் படையெடுத்துவந்த கருநட மன்னரின் துணைகொண்டு, தஞ் சமயக் கொள்கைகளை இந்நாட்டின் கட் பரப்ப மிக முயன்று, தங்கொள்கைகளுக்கு இணங்காத தமிழ் மக்களை-யெல்லாம் தம் மதங்களிற் றிருப்புதற்குப் பல திய முறைகளை யெல்லாம் கையாள்-வாராயினர். இதிலிருந்து நாம் பார்ப்பன பண்பாட்டின் பன்முகத் தோற்றத்தினை வெகுவாக உணரலாம்.


------------- "உண்மை" இதழில் கி.வீரமணி அவர்கள் எழுதிய -தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு - 11 லிருந்து

2 comments:

Unknown said...

//சைவ சமயக் குரவர்களில் நால்வரில் மூவர் (அப்பர் என்ற திருநாவுக்கரசரைத் தவிர்த்து) பார்ப்பனர்களே,//

இதிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தானா? பார்ப்பான் ஊடூறுவாத துறையே இல்லையா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி