Search This Blog

21.4.09

புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் ஏப்ரல் 29 - நினைவுநாள் ஏப்ரல் 21




அறுபடை வீடு


வியப்பு மேலிட்டு என்மீது எரிவை வீசாதீர்!

முருகன் அமர்ந்தருளும் படைவீடு பற்றியல்ல நான் சொல்லப்போவது!! முருகனைப் பற்றித் துதியமுது பாடிய சுப்புரத்தினக் கவிஞர், தாம் பணிபுரிந்த பள்ளிகளைப் படைவீடாக மாற்றியமைத்ததைத்தான் குறிப்பால் உணர்த்த நினைக்கிறேன் இந்தக் கட்டுரையில்!

சந்தனப் பொட்டும் திருநீற்றுப் பட்டையும் கட்டுக்குடுமியும் கையிலே பட்டைக் காப்புமாய்க் கடவுள் வழிபாட்டுச் சின்னங்களுடன் ஆசிரியர்ப் பணியில், காரைக்காலை அடுத்த நிரவி எனும் சிற்றூரைச் சேர்ந்த சுப்புரத்தினம், தமது இளம்பருவத்தில் உடற்பயிற்சி செய்து வருவதுண்டு. அற்கேற்ற உணவு கிடைக்காததால் சிற்றூருக்கு வந்து சேர்ந்தார்.அந்த வகுப்பில் படித்த மாணவர்கள் இந்த ஆசிரியரை-விட உடல்வாகு வாய்ந்திருந்தனர். தங்கள் வாத்தியார் எந்த உணவை உட்கொள்கிறார், யார் வீட்டில்? என்ற கேள்விகள் மாணவர்களிடையே எழுந்தன.

அவரிடமே கேட்டு விட்டால்?

- வாட்டசாட்டமான ஒரு மாணவன் கேட்டேவிட்டான்:


முசியே, நீங்க எங்கே சாப்பாடுவீங்க? அசந்தேபோனார் ஆசிரியர். உங்க வீட்டுல சாப்பிடட்டுமா? - கேள்வியாலேயே மடக்கிய ஆசிரியரை மாணவனும் மடக்கினான்; வாங்க முசியே! எங்க வீட்ல உடும்புக்கறி ஆக்குவாங்க. நீங்க சாப்பிடு..........

இழுத்தான் மாணவன். ஆசிரியர் புனைந்திருந்த குறியீடுகள் பழுத்த சைவர்! என்று தோற்றம் காட்டின.

அடேடே! உடும்புக்கறியா? நான் சாப்பிடுவேனே!

- இப்படிச் சொன்ன நாள்தொட்டு நிரவியில் இவர் ஆசிரியப் பணிபுரிந்த நாள் வரை ஒரு வீடுமாற்றி மற்றொரு வீட்டிலிருந்து உடும்புக்கறிதான்! உடும்புக்கறி உண்டால் அது செரிமானம் ஆவது மிகக் கடினம். ஓடியாடி கடுமையாக வேலை செய்தாக வேண்டும். மேலும், உடும்புக்கறி சமைப்பதும் மிகக் கவனமாக முடிக்கவேண்டிய வேலை. ஆசிரியர் சுப்புரத்தினம், நிரவியில் தமக்கு நல்ல உணவு - கிடைத்தமைக்கும் கைம்மாறாக - மாணவர்களைக் காலையும் மாலையும் பள்ளிக்கு வரச்சொல்லி தண்டால், மல்லாட்டம், சிலம்பாட்டம் முதலிய பயிற்சிகளை அளித்தார். மாணவர்க்கும் மிகுந்த மகிழ்ச்சி. பெற்றோர்க்குத்தான்! வம்புச் சண்டை வளர்க்க யாரேனும் வந்தால் தங்களின் உடும்புப் பிடியில் சிக்கவைக்கும் திறன் மாணவர்க்கு வாய்த்தது. ஆசிரியருக்கோ உரமேற்றும் உணவு கிடைத்தது.

இதுதான் முதல் படைவீடு.

அடுத்த படைவீடு செல்வோம்!

புதுச்சேரியிலிருந்து ஏறத்தாழ 22 கி.மீ. தொலைவில் உள்ள திருபுவனை சிற்றூருக்கு மாற்றப்பட்டார் தமிழாசிரியர் சுப்புரத்தினம். இப்போது கட்டுக்குடுமி இல்லை. பின்கழுத்து வரை நீண்ட சிகை அமைப்பு. மற்ற குறியீடுகள் முன் போலவே. அடர்மீசை இருந்தது! இவர் இந்தச் சிறிய சிற்றூருக்கு மாற்றப்பட்டதற்கு, காரணம் அன்றைய பிரஞ்சு ஆட்சியமைப்பில் இந்த ஆளுங்கட்சி. இந்தத் தமிழாசிரியர் அன்றைய ஆளுங்கட்சித் தலைவரான கெப்ளே துரைக்கு எதிர் அணியில் இருந்தார். மாற்றப்பட்ட திருபுவனையில் இவர் வாலாட்ட முடியாது என்ற இறுமாந்து கிடந்த கெப்ளே கட்சி, தேர்தலில் பெருந்தோல்வி ஏற்படக் காரணமானார் சுப்புரத்தினம்! குறுக்கியிருந்த ஓர் சிற்றாற்றின் கரையைக் கடந்து திருபுவனைக்குள்ளே கெப்ளே ஆட்கள் வரமுடியாதபடி மக்கள் வேலிபோட்ட மாதிரித் தடுத்துவிட்டார். இந்த எழுச்சிப்படையின் தளபதி சுப்புரத்தினம். இதை அறிந்து பொய்வழக்குத் தொடுத்து அரசு. வேலை நீக்கம் செய்யப்-பட்டார். பாரீசு உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்த பின்பு வேலைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு உரிய சம்பளத் தொகையையும் வழங்கச் செய்தது! அப்போதுதான் இவரைப் பெண்வீட்டார் வந்து சந்தித்து 1920இல் திருமணம் நடைபெற்றது.

இந்தப் படைவீட்டு மகாத்மியம் சிறைச்சாலையையும் இல்லற ஏற்பாட்டையும் செய்துகாட்டியது!

அடுத்த படைவீடு:

புதுச்சேரியின் வட எல்லையில் உள்ள சிற்றூர். அங்கே தருமப்பள்ளிக்கூடம், என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட அரசினர் பள்ளிக் கூடம். திருவனையிலிருந்து வேறு சில ஊர்கட்கு மாற்றம் பெற்றது போலவே கதர், காந்தியம் போன்ற கருத்துகளால் ஊறிப்போயிருந்த சுப்புரத்தினம் பச்சை அட்டை பேட்ட ஈரோட்டுக் குடிஅரசு இதழைப்படிக்கும் நிலைக்கு வந்திருந்தார். முத்தியால்பேட்டை, கைத்தறி நெசவாளர்கள் நிரம்பிய பகுதி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கைத்தறித்துணிகளை உருவாக்கிய நெசவுத் தொழிலாளர்கள் அவ்வப்பொழுது பட்டினிச் சாவுக்கு ஆளாவார்கள். பல குடும்பங்கள் வெளியூர்கட்குச் சென்று-விடுவதுண்டு. இங்கே நடந்த மூடத்தனங்களுக்கு எல்லையே இல்லை! காலம் செல்லச் செல்ல அப்பகுதி இளைஞர்கள் பலரைத் தமது படையில் சேர்க்கும் வாய்ப்பு வந்தது. மிகவும் ஆழமான கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த குடும்பத்து இளைஞர்களை ஈர்க்கும் தொண்டினைச் செய்தார். இந்தத் தமிழாசிரியர். சுயமரியாதை இயக்கத் தோற்றத்தின் போதே இங்கே இளைஞர் கூட்டத்தைக் சேர்த்திட முடிந்தது.

மாணவப் பருவத்திலிருந்த க.சிவப்பிரகாசம் இவரின் கருத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். அப்போது நிலைவிய கடும் பஞ்சத்தில் இவரும் இவருடைய குடும்பமும் எங்கள் வீட்டுக்கே வந்து குடியமர்ந்தது. இதனைத் தொடர்ந்து முத்தியால்பேட்டையில் சுயமரியாதை இயக்கத் திருமணங்கள் நடபெறத் தொடங்-கின. தந்தை பெரியாரும், முதன்முதலாகப் புதுச்சேரிக்கு வந்ததும் இந்த ஆண்டுகளில்தான்!

1929இல் புதுவையில் முதலாவது செங்குந்தர் மாநாடு. ஜாதி குறித்த மாநாடாக விளம்பரப்படுத்தியிருந்தாலும், அது சுயமரியாதைக் கொள்கை விளக்க மாநாடாகவே நிகழ்ந்தது. இதுகுறித்த செய்தி 21.1.1929 குடிஅரசு இதழில் வந்தது!

இந்த மூன்றாம் படைவீடு சுயமரியாதை இயக்கப் படைக்கு ஆள் சேர்க்க உதவிற்று என்று சொல்லலாம்.

நான்காம் படைவீடு:

புதுச்சேரி நகரின் மய்யப்புள்ளியாக விளங்கும் மாதாகோயில் தெரு, அரசினர் பள்ளிக்குத் தூக்கிப்போடப்-பட்ட சுப்புரத்தினம் அங்கே தமது படைப்புத் திறத்தையும் மாணவர் தம் நலம் விரும்பும் ஆர்வத்தையும் சமன்பாட்டு அரசு நிலைபெற வேண்டும் என்கிற கோட்பாட்டையும் நிலைநிறுத்த முடிந்தது.

இந்தப் பள்ளியில் பொறுப்பேற்றபோது பிரான்சு நாட்டுக் குடியரசுத் தலைவர் முய்ல் பெர்ரி என்பவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவர்தான் மதகுருமார்களின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டிருந்த கல்வித்துறையை அரசின் பொறுப்பில் கொண்டு வந்தவர். கேள்வி வளர்ச்சி பெற்றால்தான் குடியரசுக் கோட்பாடுகள் நிலைபெற முடியும் என்ற கொள்கையை வரவேற்று விழாக்கள் நடைபெற்றன. அப்போது தமிழாசிரியர் சுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் எழுதிய பாடல் வரிகள்தான் இவை:


வறியோர்க் கெல்லாம் கல்வியின்வாடை

வரவிடவில்லை மதகுருக்களின் மேடை

நறுக்கத் தொலைந்தத ந்தப்பீடை

நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!


இந்தப் பாடல் இடம்பெற்ற பள்ளிவிழா நாடகத்தைக் கண்ட புதுச்சேரி கவர்னர், சுப்புரத்தினம் அவர்களின் தெளிந்த கருத்தினை அறிந்து பாராட்டினார். சுப்புரத்தின வாத்தியாரால் தான் எல்லா மாணவர்களும் கெட்டுக்குட்டிச்சுவராய்ப் போகிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த ஏனைய ஆசிரியர்கள் இஞ்சிதின்ற குரங்காய் வெட்கி நின்றனர்.

அய்ந்தாம் படைவீடு:

இது சின்னஞ்சிறிய சிற்றூர். அதாவது அக்கால வழக்கின்படி பட்டிக்காடு - சுப்புரத்தின வாத்தியார் கொட்டம் அடங்கிப்போவார் என்று திட்டமிட்டே மாற்றம் செய்யப்பட்டார்.

அவர்களின் திட்டம் வெறுங்கனவாகிப் போனது. ஊரின் மேட்டுக் குடியினர், காவல் துறையையும், வருவாய்த் துறையையும் தம் வசத்தில் வைத்துக்கொண்டு, ஏழை எளிய உழைப்பாளிகளை உதைத்தனர். நீர்ப்பாசனம் முழுதும் செல்வந்தர்களின் வயல்களுக்கே உரியதானது. இதனை முறையிடச் சென்றால் காவலர்கள் முறையிட்ட ஏழையரைக் காவலில் வைத்துவிடுவர். இந்தச் சிற்றூர்ப் பள்ளிக்கு அரசிடமிருந்து சுற்றறிக்கை ஒன்று வந்தது. அரசினர் பள்ளிகளில் நூற்றுக்குப் பத்துமாணவர் என்ற கணக்கில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை இருக்கிறதா என்று, அந்தச் சுற்றறிக்கை கேட்டது. பள்ளி நிருவாகமே விழி பிதுங்கித் தவித்தது. ஆண்டைமார்களின் ஆடு, மாடுகளைப் பராமரிப்பதும், இந்தப் பள்ளியில் அவர்கள் வந்து படிக்க எண்ணியதே. இஙகே மதிய உணவு வழங்கப்படும் திட்டம் நீண்ட காலமாக இருந்ததால்தான்!

மதிய உணவு உண்டபின் சில மாணவர்கள் விளையாட்டுத்திடலிலிருந்து சுவரேறிக் குதித்து வீட்டுக்குச் சென்றுவிடுவர். சுப்புரத்தினத்திடம், மதிய உணவுத் திட்டத்தின் மேற்பார்வைப் பொறுப்பு ஏற்பட்டபின், அந்த மாணவர்களைத் தனித்தனியே அழைத்து அன்பாகப் பேசித் திருத்துவார். சில மாணவர்களோ இவரின் பிரம்படி பெற்றுத் திருந்துவர்.

மாணவர்களின் நலனில் அக்கறை இவர் காட்டுவதால், ஊழல்புரியும் சமையல் நிருவாகத்திற்கு இழப்பு நேரும்! உடன்பணியாற்றும் ஆசிரியர்களும் உள்ளூர எரிச்சல் கொள்ளுவர். மிகவும் ஏழை எளிய மாணவர்கள் ஆண்டு மதிப்பெண் குறைவால் மேல்வகுப்பிற்குச் செல்லமுடியாத நிலை ஏற்படும் - இதற்காக முன்கூட்டியே ஓர் காப்பு நடவடிக்கை எடுப்பார் பாரதிதாசன்.

தம் வகுப்பு மாணவர்களுக்கு பிரஞ்சு மொழியில் பாடம், உடற்பயிற்சி, வரலாறு, புவியியல், கணிதம் முதலிய பாடம் நடத்தும் ஆசிரியர்கள், இந்த மாணவர்க்கு அளிக்கும் மதிப்பெண்களையும் போடுமாறு முதலில் பெற்றுக்கொண்டு, இந்த மாணவர்கள் மேல்வகுப்புச் செல்ல எத்தனை மதிப்பெண் குறைகிறதோ அவற்றை இவர் போட்டுக்-கூட்டி வயல்வெளி உழைப்பினில் ஈடுபடுவதுவே தாழ்த்தப்பட்ட சிறுவர்களின் வேலையாக இருந்தது. தலைமுறை தலைமுறையாக இந்த அடிமைச்சாசனம் நடைமுறையில் இருந்தது. ஆசிரியர் சுப்புரத்தினம் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளில் அந்த மக்களைச் சந்தித்து மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டினார்.

அய்யோ, ஆண்டைமாரின் பிள்ளைகளோடு சரிசமமாய் அமர்ந்து எங்கள் பிள்ளைகள் படிப்பதா?

எங்கள் சிறுவர்கள் ஆடு, மாடு ஓட்டிப் பராமரித்தால்தானே ஆண்டைமார்கள் கேழ்வரகோ, கம்போ கொடுப்பார்கள் என்று அங்கலாய்த்தார்கள் அந்த எளியவர்கள். இவர்களின் அச்சத்தைப் போக்கி அந்த மாணவர்-களைப் பள்ளிக்கு வரச்செய்தார் சுப்புரத்தினம். மேட்டுக் குடியினர் தீக்கண் பாய்ச்சினர்! தலைமை ஆசிரியர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வேறு ஊருக்கு மாற்றப்பெற்றுச் சென்றுவிட்டார்.

அடுத்தது ஆறாவது படைவீடு:

புதுச்சேரி சுய்ர்கூப் வீதி அரசினர் பள்ளி. மிகப்பெரும்பான்மை மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினர். தேர்வுப்பட்டியலை அளித்துவிடுவார். நம் பிள்ளைகள் கல்விபயில வருவதே குறைவு. அவர்களின் மதிப்பெண்ணை உயர்த்திப்போட்டு மேல் வகுப்புக்கு அனுப்பிவைப்பதுதான் சரி. வைரம் எடைபோடும் விதத்தில் கடுமைகாட்ட வேண்டியதில்லை என்பார்.

பாரதிதாசன் எந்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டாலும் அது அவரின் படைவீடாக மாறிவிடும். மாணவர்கள் சுப்புரத்தின வாத்தியாரின் கொள்கை மறவர்களாகிவிடுவது வழக்கம்.

38 ஆண்டுகள் தமிழாசிரியர் பணிபுரிந்த சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்; புதுச்சேரி மாநிலத்தின் 13 பள்ளிகளில் பணிபுரிந்தார். மேலும், இரண்டு பள்ளிகளில் இருமுறை பணிபுரிந்தார்.

அவற்றில் ஆறு பள்ளிகள் பற்றி மட்டுமே விவரம் கூறினேன். ஏனையவை பாரதிதாசன் வாழ்க்கையில் மறக்கமுடியாத அல்லல்கள் நிறைந்தவை. அங்கும் பேராடிப்போராடி வென்றவர்தான்!

கொள்கைப் பிடிப்பும், அஞ்சாமையும் மக்கள் நல வேட்கையும் இவர் பணிபுரிந்த இடமெல்லாம் படைவீடுகளாகவே விளங்கின என்பது நன்கு விளங்குகிறது.


------------- மன்னர்மன்னன் அவர்கள் -ஏப்ரல் 16-30_2009 "உண்மை" இதழில் எழுதிய கட்டுரை

0 comments: