
சேது சமுத்திர திட்டத்தைப் போல்
தனி ஈழத்திற்கும் நாளை ஜெயலலிதா பல்டி அடிப்பார்!
தமிழக மக்களுக்கு தமிழர் தலைவர் எச்சரிக்கை
தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று திடீரென்று ஜெயலலிதா கூறியிருப்பதை நம்பி ஏமாந்தால், அது மாபெரும் வரலாற்றுப் பிழையாகி விடும் என்று திராவிடர் கழகத் தலைவர் -தமிழர் தலைவர் - கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
நேற்று ஈரோட்டிலும், சேலத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்த செல்வி ஜெயலலிதா திடீரென்று தனி ஈழம் பிரிவதற்கு, தான் வெற்றி பெற்றால் உதவிடுவேன் என்று முழங்கி, இலங்கைத் தமிழர் பிரச்சினையையே தனது தேர்தல் வெற்றிக்கு ஒரே கடைசி ஆயுதமாகக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்!
இந்த அம்மையாரின் இந்த தனி ஈழம் பேச்சு மே 13-ஆம் தேதிக்குப் பிறகு கேட்குமா என்றால் ஒரு போதும் கேட்காது என்பது உறுதி.
ஜெயலலிதாவுக்கு வெற்றியைத் தேடித் தர பாபநாசம் பார்ப்பனர் பழைய ரவிச்சந்திரன் தற்போதைய ஸ்ரீ ஸ்ரீ குருஜி ரவிஷங்கர்ஜி அவர்கள் இந்த அம்மையாரைப் பார்த்து, இலங்கையில் தமிழர்கள் படும் அவதிகளைச் சொன்ன பிறகுதான் இவருக்கு இப்படி ஒரு புதிய ஞானோதயம் - போதி மரத்தடியில் அமராமலேயே தோன்றியுள்ளது போலும்!
பிரபாகரனைக் கைது செய்யச் சொன்னவராயிற்றே!
ஏமாளித் தமிழர்களின் வாக்குகளைப் பெற இப்படி ஒரு கடைசி கண்ணிவெடி முயற்சியா? இதற்கு முன் இவர்தானே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, அதுவும் இந்திய இராணுவத்தை அனுப்பியாவது - (சிங்கள இராணுவத்தால் முடியாது என்றால்) இங்கே கொண்டு வர வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் 16.4.2002 இல்! அப்போது மட்டுமல்ல, சகோதரர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த போது செய்தியாளர்கள் உங்கள் கூட்டணிக் கட்சியில் உள்ள சில கட்சிகள் அவரது உண்ணா விரதத்தினை ஆதரிக்கின்றனவே, உங்கள் நிலை என்ன என்று கேட்டபோது (2009 ஜனவரியில்) ஜெயலலிதா என்ன சொன்னார்?
இந்த உண்ணாவிரதம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற, கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்தும் கபட நாடகம் என்று கூறவில்லையா?
அப்போதெல்லாம் ஈழத்தில் தமிழர்களை சிங்களவர்கள் அழிக்கும் இனப்படு கொலைகள் நிகழாமலா இருந்தன?
அம்மையார் அப்போது கூறியதற்கு நேர் எதிரிடையாக தலைகீழாக, நான் ஜெயித்தால் தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பொய் வாக்குறுதியை அள்ளி வீசுகிறாரே!
சிங்கள ராணுவம் தமிழர்களை, இனப்படு கொலைகளை ஈவு இரக்கமின்றி செய்கிறதே என்று கேட்டவுடன் ( 8-1-2009- தினத்தந்தி) செய்தியாளர்களிடம் என்ன கூறினார்? ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் சாவது சகஜம்தான்; தவிர்க்க முடியாததுதான் என்று கொஞ்சமும் பச்சாதாபமின்றி பேசியவருக்கு தேர்தல் நாள் நெருங்க நெருங்க இப்போது தனி ஈழம் காணும் வேட்கை உச்சத்தை அடைந்துவிட்டதோ? உண்மையாகச் சொல்கிறார் என்று நினைத்தால் அதை விட ஏமாளித்தனம் வேறு உண்டா?
கம்யூனிஸ்டுகள் தனி ஈழம் ஏற்பார்களா?
மத்தியில் இவர்ஆசைப்படியே மூன்றாவது அணியே ஆட்சி அமைத்தாலும்கூட தனி ஈழம் அமைவதை அதில் பங்கு பெறும் இடதுசாரிகளான வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்குமா?
மற்ற கூட்டணிக் கட்சிகள் ஏற்குமா? அப்படியானால் அந்த அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்து, மூன்று இடங்களைப் பெற்றுள்ள கம்யூனிஸ்டுகள், பிரகாஷ்காரத்கள், ஏ.பி.பரதன்கள் இதை ஏற்பதாக வாக்காளர்களுக்குச் சொல்ல முன் வருவார்களா? தமிழ் இன உணர்வும் கூட தேர்தல் வெற்றிக்குத் தூண்டில்தானா?
தேர்தல் நெருங்க நெருங்க எத்தனைக் குட்டிக்கரணம்?
சேதுசமுத்திரத் திட்டத்தினை இரண்டு தேர்தல் அறிக்கையில் வற்புறுத்திவிட்டு, இந்த 2009 தேர்தல் அறிக்கையில் நாங்கள் பதவிக்கு வந்த 100 நாள்களுக்குள் சேதுக் கால்வாய்த் திட்டத்தை ரத்து செய்வேன் -ராமர் பாலம் புனிதமானது; இடிக்கப்படக் கூடாது என்று கூறிடுவது போல மற்றொரு திடீர் பல்டி அடிக்கமாட்டாரா?
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை குட்டிக் கரணம் வேண்டுமானாலும போடலாம்!
ஏமாறாதே - ஏமாற்றாதே!
ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை நம்மைப் பொறுத்தவரை தேர்தல் சூதாட்டத்திற்குரிய மூலதனம் அல்ல; அது ஓர் இனத்தின் விடியல் பிரச்சினை. அதனைக் காட்டித் தமிழர்களை ஏமாற்ற, முதலைக் கண்ணீர் விடும் முப்புரி நூல் கூட்டம் வலை விரிக்கிறது!
அதில் வீழ்ந்தால் சரித்திரப் பிழையாக அது ஆகிவிடும் என்பது உறுதி!
ஏமாறாதே! ஏமாற்றாதே! என்று எச்சரிக்க வேண்டியது எம் கடமையாகும்.
---------------- "விடுதலை" 26.4.2009
2 comments:
இவ்வளவுகாலமும் கருணாநிதியும் அவரது அல்லக்கை வீரமணியும் தான் ஈழத்தமிழர் பிரச்சினையை தேர்தல் சூதாட்டத்துக்கான முலதனமாக நினைத்து செயற்பட்டார்கள் ஆனால் இப்ப நிலமை கையை மீறிவிட்டுது. இனி என்ன செய்வது துண்டை எடுத்து தலையில போட்டுக்கொண்டு கல்லாவைக் கட்டுங்கள். :lol:
அவங்க அடிச்சா பல்டி. நீங்க அடிச்சா டகால்டி.
Post a Comment