Search This Blog

15.4.09

இந்தியாவில் முதன் முதலில் நடந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் என்ன?

சோறு தீட்டானதால் ஸ்டிரைக்

தொழிற்புரட்சியால் ஏற்பட்ட விளைவுகளை, மாற்றங்களை வரலாறு பக்கம் பக்கமாக வருணிக்கும். தொழிற்சாலைகள் ஏற்பட்டு, தொழிலாளர்கள் எனும் புதிய வர்க்கம் உருவாகியதும் அதன்பிறகு தான் நகரங்கள் உருவாகியதும், சேரிகள் (SLUMS) உருவாகியதும் அதற்குப் பின்னர்தான். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தொழிலாளர் சங்கங்கள் ஏற்பட்டதும் அப்போதுதான்.

எட்டு மணிநேர உழைப்புக்காகத் தொடங்கி பிறகு ஊதிய உயர்வுக்காகக் குரல் கொடுத்து, ஆண்-பெண் தொழிலாளரிடைய இருந்த ஊதிய வேறுபாட்டை எதிர்த்து முழங்கி, தொழிற் சங்கங்கள் வளர்ந்துள்ளன,மேலை நாடுகளில். தொழில் ஏதும் இல்லாமல், வெறும் கைவினைஞர்களை மட்டுமே கொண்டிருந்த இந்தியாவில் அந்நியர் ஆட்சி இருந்த காரணத்தால் அவர்களாலே ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உரிமை ஏதும் தெரியாத நிலை. நம் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருந்தவர்கள். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று போதிக்கப்பட்டுக் கிடந்தவர்கள் இந்நாட்டின் தொழிலாளர்கள்.இவர்களும் சங்கம், வேலை நிறுத்தம் என்று வரத் தொடங்கி இன்றைக்கு 100 ஆண்டுகள் ஆகின்றன.

1907-இல் பரேல் ரயில்வே ஸ்டிரைக் என்பது மராட்டியத்தில் நடந்திருந்தாலும் இந்தியாவில் முதன் முதலில் நடந்த வேலை நிறுத்தமே அதுதான். அதற்கான காரணம் உலகத் தொழிற்சங்க வரலாற்றில் எங்கும் காணமுடியாத அசிங்கமான காரணம்!

ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மொத்தம் 3500 தொழிலாளர்கள். நம் நாட்டில் அன்றும் சரி, இன்றும் சரி எப்போதுமே வரிசையில் நின்று (கியூ) எதையும் பெறும் பழக்கம் தான் கிடையாதே! அதையொட்டி, அன்றும் ஒரே நெரிசல். ஒருவரோடு ஒருவர் முட்டி மோதி டோக்கன் பெற்றனர். அதன்பிறகு வந்தது தான் - விவகாரமே! டோக்கன் தருகிறேன் எனக்கூறி, எல்லா ஜாதிக்காரர்களையும் கூட்டி, ஒருவரை யொருவர் தொட்டுத் தீட்டாகி விட்டது.அதைவிட மோசம் - எங்கள் சாப்படும் தீட்டாகிவிட்டது என்று உயர்ஜாதி எனக்கூறிக் கொண்டிருப்பவர்களின் ஒப்பாரி தொடங்கியது. இதற்குக் காரணமான நிருவாகத்தைக் கண்டித்து ஸ்டிரைக் நடத்தப்பட்டது.இது எப்படி இருக்கிறது? கங்கம் வைத்துத் தொழில் செய்யும் எத்தனை தொழிற்சங்க முதலாளிகள் இதனைத் தெரிந்து வைத்துள்ளனர்? தெரிந்ததைச் சொல்லி வைத்துள்ளனர்?

இதையொட்டியே 1908 இல் மும்பையில் ஒரு வேலை நிறுத்தம் பஞ்சாலைத் தொழிலாளர்களால் இதற்குக் காரணம் பிளேக் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்ததுதான்! பிளேக் எலிகளால் பரவும்நோய். எனவே நோயை ஒழிக்க - எலியை ஒழிக்க வேண்டும்! எலி விநாயகனின் வாகனம்.

ஆகவே நோயை ஒழிக்க - எலியை ஒழிக்க - எடுக்கப்படும் நடவடிக்கை, இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று புரட்டுவாதம் செய்யப்பட்டு ஸ்டிரைக் துண்டிவிடப்பட்டது. நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டவர் பால் கங்காதர் திலக் என்பவர் இத்தகவல் 100 ஆண்டுகளுக்கு முன் லெனினுக்கு எப்படிச் சொல்லப் பட்டதோ அவர் திலகர் கைதை இந்திய விடுதலைப்போரின் அங்கமாக (தவறாக) நினைத்துக் கொண்டு - குறிப்புரை எழுதியுள்ளார். பழம்பெரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் எனப்படுபவை இந்த லட்சணத்தில் நடத்தப்பட்டன என்பதை விளக்கவே இக்குறிப்பு இது மாதிரி நிறைய வரும்.


-------------------- செஙகோ அவர்கள் 11-4-2009 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

0 comments: