
வெற்றிச்சிம்மாசனம்
30.10.1971 அன்று பிற்பகல் 2 மணிக்கு விக்கிரவாண்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் இலக்கிய மன்ற சிறப்புக் கூட்டத்தில் மாணவர் கடமை என்ற தலைப்பில் உரையாற்றினேன். விக்ரவாண்டியம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திரு. டி.எஸ்.இராமபத்திர (செட்டியார்) அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
அதை முடித்துக் கொண்டு பகல் 4 மணிஅளவில் சிறுவந்தாடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்றத்தினை சட்டப்பேரவை உறுப்பினர் மு.ராமன் அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்துச் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு, அன்று இரவு 7 மணி அளவில் சிறுவந்தாடு கழகப்பொதுக்கூட்டத்தில் கலந்து-கொண்டேன். எடைக்கு எடை புதுக்காசுகளை வழங்கினார்கள். புதுவை அமைச்சர் மு.இராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் இராமன் கலந்துகொண்டார். பெரியார்-அண்ணா பிறந்தநாள் விழாவாக அந்நிகழ்ச்சி அங்கே நடந்தது!
அடுத்த நாள் 31.10.1971 ஞாயிறு மாலை புதுவை செஞ்சாலையில் உள்ள துரை.முனுசாமி திருமண நிலையத்தில், மறைந்த சுயமரியாதைச் சுடரொளி எஸ்.என்.-சாமிநாதன் தலைமையில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசினேன். என்னுடன் மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகளான, சிதம்பரம் கு.கிருட்டினசாமி, (தெ.ஆ.மாவட்ட தி.க.தலைவர்), புதுவை ப.கனகலிங்கம், புதுவை க.கலைமணி, ஆர்.எஸ்.டி.மூர்த்தி, பொ.தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உரையாற்றினர்.
அன்று காலை 9 மணிக்கு திண்டிவனத்தில் தந்தை பெரியார் அவர்களது தலைமையில் நடைபெற்ற திரு. பி.டி.-வீராசாமி - கண்ணகிக்கும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியில் (அய்யா அவர்களுடன்) கலந்து பேசிவிட்டு புதுவை சென்று மேலே சுட்டப்பட்ட பொதுக்-கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
அடுத்த பெருநிகழ்ச்சிக்காக, சேலம் மாநகரில் தந்தை பெரியார் அவர்களை அழைத்து பிரம்மாண்டமான முறையில், தந்தை பெரியார் அவர்களது 93ஆவது பிறந்த நாள் விழா கோலகாலமாக கொண்டாடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
சேலத்து அமைச்சர் தோழர் க.ராசாராம் தலைமையில், தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டும் வெள்ளியால் ஆன வெற்றிச் சிம்மாசனத்தை முதல்வர் கலைஞர் அவர்களைக் கொண்டு நகரத்தில், நேரு கலையரங்கத்தில் வழங்குவதற்காக திட்டமிட்டு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துவந்தார்கள்.
விழாக்குழுவிற்கு சீரிய கொள்கை வீரமும், தலைசிறந்த பண்பாளருமான சேலம் குகை -ஆர்.வி.இராஜா இராமலிங்கனைத் தலைவராகவும், எஸ்.கிருஷ்ணராஜ் (அவர்கள் சேலம் ஜெகதீசனார் அவர்களது) அன்பு மகன். நகரச் செயலாளராக பணியாற்றியவர்) எஸ்சி.-வெங்கடா-சலம் எம்.ஏ. (இவர் சேலம் திரு.-சொக்கலிங்கனாரின் மகனாவார்) ஆகிய இருவரும் சொல்வார்கள்.
ஏ.முத்து அவர்கள் பொருளாளராகிய துணைத்தலைவர்களாக திருவாளர்கள் எம்.-என்.-நஞ்சய்யா (தர்மபுரி மாவட்ட தி.க.தலைவர்) நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.கிருஷ்ணன், தேவி பிக்கர்ஸ், தேவி டாக்கிஸ் உரிமையாளர்-களில் ஒருவரான டி.என்.கே.இராஜகோபால் அவர்கள், சேலம் 2ம் தொகுதி எம்.எல்.ஏ. செயராமன், ஆகியோரும், செயற்குழு உறுப்-பினர்களாக பிரபல தொழிலதிபர்களும் திராவிடர் இயக்கப் பற்றாளர்களான எஸ்.-எஸ்.எம்.சுப்ரமணியம், ஜே.கே.கே.-அங்கப்-பனார், ஆர்.வி.நாகராசன், ரோசு அருணாச்சலம் அவர்களது மகன் ரோசு.இராஜமாணிக்கம், கொள்கைவீரர் கோலப்பன், கே.பச்சமுத்து, பி.முத்து, எஸ்.ஈ.சீனுவாசன், வீரபாண்டி ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகியோர்களால் அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக ஆக்கினார்கள்.
வரவேற்புரையை ஈ.ஆர்.கிருஷ்ணன் எம்.பி. அவர்கள் ஆற்றினார். அமைச்சர் க.ராமசாமி தலைமை தாங்கினார். முதல்வர் கலைஞர் அவர்கள் அய்யாவுக்கு வெற்றிச் சிம்மாசனத்தை வழங்கினார்கள்!
அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும், நானும் பாராட்டுரை வழங்கினோம். நகர மன்றத் தலைவர் பழனியப்பன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், எம்.என்.நஞ்சய்யா ஆகியோர் உரையாற்றினார்கள்.
இயக்க வரலாற்றில் எழுச்சியோடு நடந்த அந்த நிகழ்ச்சி எவராலும் எளிதில் மறக்க முடியாத பசுமையான நினைவுகளை, தந்தை பெரியாரின் லட்சிய வெற்றிகளை விளக்கம் நிகழ்ச்சியாகும்!
தமிழர்களை அரியணைக்குத் தகுதியாக்கியவருக்கு, தன்மான உணர்வுகளை அரியனை ஏற்றியத் தலைவருக்கு இந்த வெற்றிச் சிம்மாசனம் மிகவும் சாதாரணமான பரிசாகும் என்று, நன்றிப்பெருக்கோடு உணர்ச்சி பொங்க உரையாற்றினார் முதல்வர் அவர்கள்!
முதல் அமைச்சர் கலைஞர் பேசும்போது, இந்த அரசுக்கு, அரசின் திட்டங்களுக்கு பத்திரிகைகள் விளம்பரங்கள் கொடுப்பதில்லை. மக்கள் பல ஆயிரக்கணக்கில் கூடியுள்ள இந்த நிகழ்ச்சி நாளைக்கு அந்த ஏடுகளில் என்ன வரும்?
ஈ.வெ.ரா.வுக்கு வெள்ளிச் சிம்மாசனம் - முதலமைச்சர் கருணாநிதி கொடுத்தார் என்று வரும். ஆனால், அதே நேரத்தில் மூடநம்பிக்கையைப் பரப்புகிறவர்களுக்கு, வைதீகத்தை, சனாதனத்தை பரப்புகிறவர்களுக்கு - அந்த குலத்தலைவர்களுக்கு - இது போன்ற விலை-உயர்ந்த வெள்ளிச் சிம்மாசனம்கூட அல்ல - ஒரு வெள்ளிக் கப்பு கொடுத்தால்கூட அந்தச் செய்தி கொட்டை எழுத்துகளில் எட்டு காலத்தில் வரும். எனது அருமை நண்பர் வீரமணி அவர்கள் சொன்னார்கள். 1971 தேர்தலில் எப்படி, எப்படியெல்லாம் அந்தப் பத்திரிகையாளர்கள் நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றி.
1971ஆம் ஆண்டு தேர்தலில் இந்த பத்திரிகைக்காரர்களின் சக்தி எவ்வளவு என்பதைத் காட்டிற்று! மக்கள் சக்தி - நமது சக்தி - எப்படிப்பட்டது என்பதையும் அவர்களுக்குத் தெளிவாகப் புரியவைத்துவிட்டது!
அவர்கள் கடைசித் துருப்பையெல்லாம் அடித்துப் பார்த்து விட்டார்கள்! பத்திரிகைக்காரர்களின் தயவை, விளம்பரத்தை நம்பி பெரியார் அவர்களோ, நம்முடைய இயக்கமோ கொள்கைகளோ, நாமோ வளர்ந்தவர்கள் அல்ல. மக்களின் இதயம் என்ற ஏடுகளிலே நாங்கள் எங்கள் கொள்கைகளை தினம் தினம் எழுதிக் காட்டிக் கொண்டிக்கிறோம்.
பொள்ளாச்சித் தேர்தல் பற்றிக்கூட சென்னையிலே இருந்தால், இந்தப் பத்திரிகைகளை மட்டும் பார்த்தால் சுயேச்சை வேட்பாளர்தான் ஜெயிப்பார் என்றுதான் எவரும் நினைப்பர். ஆனால், அங்கே போய்ப் பார்த்து-விட்டு வந்தால் நிலைமை தலைகீழாகும்.
தினமணி எழுதுகிறது சுதந்திரா கட்சிச் செயலாளர் சுயேச்சையை ஆதரித்து அறிக்கை விடுத்தவுடன் சுதந்திரா ஊழியர்கள் பம்பரமாகச் சுழன்று சுழன்று பணியாற்றுகிறார்கள் என்று. நான் போகாத இடமில்லை; தேடித்தேடிப் பார்த்தேன்; பூதக்கண்ணாடி வைத்துத் தேடிப் பார்த்தால்கூட பிளேக் கிருமிதான் தென்படுகிறதே தவிர, சுதந்திரா கட்சி வீரர்கள் எவரும் காணவில்லை. ஆனால், பத்திரிகையில் மிகப் பெரிய விளம்பரம் இதுதான் பத்திரிகையாளர் போக்கு.
அதைவிட மிகவும் குறிப்பிடத் தகுந்த காட்சி என்னவென்றால், தந்தை தனயனை - தனக்களித்த வெற்றிச் சிம்மாசனத்தில், தான் ஒருசில மணித்துளிகளே அமர்ந்து எழுந்துவிட்டு, முதல்வர் கலைஞர் அவர்களின் கையைப் பிடித்திழுத்து அதில் உட்காரவைத்து, தான் நின்றார். கண்கொள்ளாக் காட்சி அது! கழகத்தவரின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர்த் துளிகள் அருவிபோல் கொட்டியது. முழக்கங்-களோ விண்ணைப் பிளந்து கண்டோரை வியப்புக் கடலில் தள்ளியது.
1948-இல் தலைமகன் அறிஞர் அண்ணாவை ஸ்பெஷல் மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்து, ஒரு காரில் அண்ணாவை அமரவைத்து, தலைவரான அய்யா நடந்தே வந்த காட்சி அது! வரலாறு தெரிந்தவர்களுக்கு நினைவூட்டியது. தந்தை பெரியார் அவர்களது தலைமையின் மாண்பு, மலையினும் மாணப்பெரிது என்றல்லவா காட்டிவிட்டது.!
அந்நிகழ்ச்சிகள் உணர்ச்சிப் பெருக்கோடு உரையாற்றிய முதல்வர் கலைஞர் - அந்தச் சேலத்தில் ராமன் செருப்படிபட்ட நிகழ்ச்சியை அடுத்து மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வராமல் செய்ய முனைந்த சக்திகள் ஓடிஒளிந்து கொள்ளும் அளவுக்கு அல்லவா அந்தக் கோலாகலத் திருவிழா - வெற்றிச் சிம்மாசன விழா வெளிச்சம் போட்டுக் காட்டியது!
முதல்வர் தமது உரையில் மனிதன் வாழ்விலே எல்லா நாட்களும் உணர்ச்சிமயமான கட்டங்களில் உள்ள நாட்கள் அல்ல. அதாவது உள்ளத்தைத் தொடும் சம்பவங்களும், வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களும்தான் அவனை உணர்ச்சி மயமாக்கி வரும் நாட்களாகும்.
தந்தை பெரியார் அவர்களை நான் வெள்ளிச் சிம்மாசனத்திலே அமரவைத்தபோது, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். திரும்ப அவர்கள் என் கையைப் பிடித்திழுத்து உட்கார வைத்தபோது, என் நா தழுதழுத்தது. கண்கள் கண்ணீர் சிந்தின. என்னால் உள்ளபடியே பேசமுடியவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். இது என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பொன்னாளாகும் என்றும், இங்கே தரப்பட்ட வெள்ளிச் சிம்மாசனத்தில் தந்தை பெரியார் அவர்களை உட்கார வைத்தபோது அவர்கள் சிறிதுநேரம்தான் அதில் உட்கார்ந்திருந்தார்கள்.
இந்தச் சிம்மாசன அமைப்பு அவர்களை வெகுநேரம் உட்கார வைக்க முடியாத ஒன்றாகும். பின்னால் சாயமாட்டார்; கைகளையும் இரண்டு பக்கமும் ஓரளவுக்கு வைப்பார் என்றும் கூறிய முதல்வர் வெள்ளிச் சிம்மாசனம் ஆனாலும் அவரைக் கட்டுப்படுத்தி உட்கார வைக்க முடியாது. பெரியார் அவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது என்பது எவராலும் செய்யமுடியாத ஒன்று. அவ்வளவு சுதந்தரமானவர் அவர்! அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் தமிழ்நாட்டிலே இருக்கிற கோடானகோடி தமிழர்களின் இதய சிம்மாசனங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர் ஆவார்!
எனவே, பெரியார் அவர்களின் கடந்த 40 ஆண்டுகாலத்தில் அவர்களால் விமர்சிக்கப்படாத வேடங்கள் உண்டா? அவர்களால் தாக்கப்படாத கடவுள்கள், புராணங்கள், ஜாதி - மூடநம்பிக்கைகள் உண்டா? எவ்வளவு பெரிய கருத்துப் புரட்சியை அவர்கள் உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள்!
இன்று இதனுடைய முழுப்பயனை நாம் அடையாவிட்டாலும், எதிர்காலம் அடைவது உறுதியல்லவா? எனவேதான் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியினைக் காணுகின்ற பொறாமைக்காரர்கள், எரிச்சல்காரர்கள் அவர்களது சூத்திர உணர்வுகளைக் காட்டுகிறது. இந்த அரசுக்கு தந்தை பெரியார் அவர்களின் மொழியிலேயே கூறவேண்டுமானால், இந்தப் பகுத்தறிவாளர் அரசுக்கு துன்பங்கள் ஏற்படும்போதெல்லாம் நாங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. காரணம், 40 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் இதைவிடத் துணிவுடன் தன்னந்தனியாக எவ்வாறு உழைத்து இந்த நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் செய்தபோது இப்போது நாம் ஏன் பயப்படவேண்டும் என்று நினைத்து துணிவினை நாங்கள் வரவழைத்துக்கொள்கிறோம்.
--------------------- நினைவுகள் நீளும்..
---------"உண்மை"ஏப்ரல் 16-30_2009 இதழில் கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் அய்யாவின் அடிச்சுவட்டில்...(இரண்டாம் பாகம் 17)லிருந்து..
0 comments:
Post a Comment