Search This Blog

28.4.09

>இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு தமிழர்களைத் தூதுவர்களாக நியமிக்க வேண்டும்




இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு
தமிழர்களைத் தூதுவர்களாக நியமிக்க வேண்டும்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி


இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு தமிழர்களை தூதுவர்களாக இனி வரும் காலங்களில் நியமிக்க வேண்டும். என்று திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் 26.4.09 அன்று செய்தியாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-


வருகின்ற நாடாளு மன்ற தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே இருக் கின்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவை திராவிடர் கழக செயற்குழு பொதுக்குழு ஏற்கெனவே எடுத்ததற்கு இணங்க புதுவையில் இருக்கக்கூடிய காங் கிரஸ் வேட்பாளர் திரு. நாராயணசாமி அவர்களை ஆதரிப்பது, என்பதற்காக இயக்கத் தோழர் கள் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மதச்சார்பற்ற நிலையை முன்னிறுத்தி இந்த நாட்டை மதவெறி ஆளக்கூடாது, ஜாதி வெறிக்கு இடம் இருக் கக்கூடாது என்பதால் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் மதவெறி பாஜக வை முறியடித்தோம். கல்வித்துறையைக் கூட காவிமயமாக்கியது பாஜக ஆட்சி. அதனை மாற்றி மதசார்பற்ற ஒரு ஆட்சியை மத்தியில் அமைத்தோம். அய்ந்தாண்டுக்காலம் இதன் மூலம் ஒரு நிலையான ஆட்சி அமைந்தது. ஒரிசா போன்ற வேறு சில மாநிலங்களில் மதவெறி ஆட்சி நடைபெற்றது. சிறுபான்மை சமுதாயம் வாழ்வுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

இந்த நிலை தொடரக் கூடாது என்ற தன்மையில் மத்தியில் ஒரு ஆட்சி அமைய வேண்டும்.

இடையிலே கூட கம்யூனிஸ்டு நண்பர்கள் மதச்சார்பற்ற இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்த பொழுது கூட அவர்களால் அதில் வெற்றிபெற முடிய வில்லை. அந்தளவிற்கு நிலையான ஆட்சியை அய்ந்தாண்டுகள் தொடர்ந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றிருக்கிறது.

கலைஞர் அவர்களுடைய வழிகாட்டுதலிலே இருக்கக்கூடிய ஒரு ஆட்சி. எனவே மீண்டும் தமிழகத்திலும், புதுவையிலும் 40 தொகுதிகளில் வெற்றிபெற ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

நூல் வெளியீடு சிறப்பான ஒரு நிலையை உருவாக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் சமூகநீதியை முன்னிறுத்தி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு, சிறு பான்மை சமுதாய மக்களுக்கு இவர்கள் எல்லோருக்குமே வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நாங்கள் ஒரு நூலையே வெளியிட்டிருக்கின்றோம்.

பல லட்சக்கணக்கிலே தமிழகம், புதுவை மாநிலங்களிலே இந்த நூல் பரப்பப்பட்டிருக்கிறது.

கலைஞர் (திமுக) ஆட்சியின் சாதனை களைப் பாரீர்! வாக்குகளைத் தாரீர்! என்ற தலைப்பிலே இந்த நூலைத் தயாரித்து பரப்பியிருக்கின்றோம்.

தமிழ்நாட்டிலே தி.மு.க ஆட்சி மத்தியிலே காங்கிரஸ் ஆட்சியை மனதிலே வைத்து இவர் களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை இந்தத் தேர்தலிலே தெளிவு படுத்தியிருக்கின்றோம்.

ஆகவே மக்கள் மத்தியிலே திராவிடர்கழகம் திட்டமிட்டு தெரு முனை கூட்டங்கள். மற்ற பொதுக்கூட்டங்கள் இவைகளை எல்லாம் போட்டு வேண்டிய பணிகளை செய்திருக்கின்றோம்.

தமிழகம், புதுவை உட்பட எல்லா மாவட்டங்களிலும் இந்த நூல் இதுவரை ஒன்றரை இலட் சத்திற்கு மேலே பரப்பப் பட்டிருக்கின்றது.

முதல்வர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்

செய்தியாளர்
: இலங்கை பிரச்சினை பற்றி....

தமிழர் தலைவர்
: இதில் தெளிவாக என்னென்ன செய்ய முடியுமோ அத் துணையையும் செய்திருக்கின்றோம்.

இலங்கை பிரச்சினை என்று சொல்லும்பொழுது அது வெளிநாட்டுப் பிரச்சினை. அந்த வெளி நாட்டுப் பிரச்சினை எவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு மாநில அரசாக இருந்தாலும், ஒரு மாநில அரசாலே தீர்க்க முடியாது.

மத்திய அரசுதான் அதை செய்யமுடியும். அந்த வகையிலே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதிலே ரொம்பத் தீவிரமான முறையிலே கலைஞர் அவர்கள் எடுத் துக்கொண்டிருக்கின்ற எல்லா முயற்சிகளுக்கும் திராவிடர் கழகம் உறுதுணையாக இருந்திருக் கிறது.

அது மட்டுமல்ல; திராவிடர் கழகம், திரா விடமுன்னேற்றக்கழகம் தான் ஈழத்தமிழர் பிரச் சினையிலே மற்ற கட்சிகள் பிறக்காத, சிந்திக்காத காலகட்டத்தி லிருந்து தொடர்ந்து இந்தப் பிரச்சினையை முன்னெடுத்து வரக்கூடிய ஒன்றாகும். 1980லேயிருந்து இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பொழுதுள்ள சில கட்சிகள் தாங்கள் தான் முக்கியமான அளவுக்கு ஈடுபாடுகாட்டுகிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்ததுமில்லை.

அப்பொழுது சில கட்சிகள் இருந்ததுமில்லை. ஆனாலும் அவர்கள் அதிகமாக சொல்கிறார் கள். நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

உண்மையாகவே யார் சொன்னாலும் ஈழப்பிரச்சினை, ஈழத்தமிழர்களுடைய வாழ்வு மிக மோசமாக இருக்கிறது. நாளும் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கொடுமைகள் மலிந்திருக்கின்றன.

அதற்காக வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்திருக்கின்றோம். சிங்கள ராஜபக்சே ஒரு இனப்படுகொலையை பச்சைப் படுகொலையை (Genocide) நடத்திக் கொண்டிருக்கின்றார்.

கடுமையான அழுத்தம்

எனவே, சிங்கள ராஜபக்சே செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். உலக நாடுகளுக்கும் அந்தக் கருத்தை வலியுறுத்திக் கொண்டு ஒரு பெரிய லாபியை நடத்திக் கொண்டிருக்கின்ற அளவிலே அமெரிக்கா போன்ற நாடுகள் அதை செய்து கொண்டிருக் கின்றன.

அதே நேரத்திலே அவர்களுக்கு ஒரு தைரியம். அண்மையிலே கூட தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். அது நல்ல முழு வெற்றியாக அமைந்தது.

அமைந்ததோடு மட்டு மல்லாமல் அதில் சிறப்பாக குறிப்பாக சொல்லப்பட வேண்டியது என்ன வென்றால், உடனடியாக மத்திய அமைச்சரவை அவசரமாக இரவே கூடியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தீர் மானம்போட்டு இது வரையிலே இல்லாத அளவிற்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் சென்னையிலே சொன்னார்.

இதுவரை வேண்டுகோள், கோரிக்கை என்பதை எல்லாம்தாண்டி, நிர்ப்பந்தம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அழுத்தம் கடுமையாகக் கொடுத்திருக்கின்றோம்.

இன்னும் இரண்டொரு நாளிலே விளைவுகள் தெரியும் என்று தெளிவாக சொல்லியிருக் கின்றார்கள்.

இதைவிட அமெரிக்க அதிபர் ஒபாமா ரொம்பத் தெளிவாகவே சொல்லியிருக்கின்றார். இதிலே ஒரு பெரிய கொடுமை, வேதனை என்னவென்று சொன்னால் சீன அரசு இலங்கை அரசுக்கு முழு ஆயுதத்தை, முழு உதவியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதே போல ஜப்பான் அதே போல பாகிஸ்தான் இது போன்ற நாடுகளினுடைய ஆதரவு இலங்கை அரசுக்கு இருந்துகொண்டு வருகிறது. இலங்கை அரசு நிதிஉதவி வரை பெற்றிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களை தனிப்பகுதிகளிலே கொண்டு வந்தால் கூட, அவர்களுக்கு அங்கு பாது காப்பற்ற நிலை. இவைகள் எல்லாம் இருக்கின்றன.

எனவே தொடர்ந்து இன்னும் அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஈழத்தின் மீது தனிக்காதல்

இந்தப் பிரச்சினையை வெறும் தேர்தல்கண் ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது. சில கட்சிகள் தேர்தலில் இது ஆதாயம் தேடுவதற்கு வசதி என்று நினைக்கின்றார்கள். சிலருக்கு திடீரென்று ஈழத்தின் மீது இப்பொழுது காதல் பிறந்திருக்கிறது.

இந்திய இராணுவத்தை அனுப்பி பிரபாகரனைப் பிடித்து கைது செய்து கொண்டு வர வேண்டு மென்று சட்டமன்றத்திலே தீர்மானம்போட்ட ஜெயலலிதா; இலங்கை வேறுநாடு; இலங்கை நாட்டிலே போர் நடக்கும்பொழுது படுகொலைகள் நடப்பது சகஜம் தான் என்று 18.1.2009லே கூட சொன்னவர் ஜெயலலிதா. தொல். திருமாவளவன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது மற்ற நண்பர்கள் உங்கள் கூட்டணியிலே இருக்கிறவர்கள் ஆதரவு காட்டுகிறார்களே என்று ஜெயலலிதா அவர்களிடம் கேட்ட பொழுது, கருணாநிதியும், திருமாவளவனும் பேசி வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொன்னவர்.

அதே நேரத்திலே நாம் எடுத்த முயற்சிகளுக்கு எந்த வகையான ஒத்துழைப்பையும் ஜெய லலிதா அவர்கள் கொடுக்கவில்லை.

அனைத்து கட்சிகளின் சார்பில் பிரதமர் அவர்களைப் பார்க்கச் சென்ற பொழுது அவர் கலந்து கொள்ளவில்லை.

அதே போல மனித சங்கிலி அறப்போராட்டத்தை நடத்தியபொழுதும் அ.தி.மு.க பங்கேற்க வில்லை.

ஈழப்பிரச்சினைக்காக சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றிய நேரத்திலும் அ.தி.மு.க கலந்து கொள்ளாமல் வெளியேறியது.

இப்படிப்பட்ட அ.தி. மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் தனி ஈழம் அமைய வேண்டும் என்று நேற்று ஈரோட்டிலே சொல்கிறார் என்று சொன்னால், தேர்தலுக்காக திடீ ரென்று இந்தப் பிரச்சினையைப் பற்றி சொல்வார்.

ஆனால் மே 11- ஆம் தேதி பிரச்சாரம் முடிந்த பிற்பாடு தேர்தல் 13-ஆம் தேதி அன்றைக்கு வாக்களிக்கின்ற நாள்.

எங்களுக்கு தேர்தல் பிரச்சினை அல்ல

பிரச்சாரம் மே 11-ந் தேதியோடு முடிவுறுகிறது. அதற்குப் பிறகு ஜெயலலிதா அவர்கள் ஈழத்தைப் பற்றி சொல்வாரா? என்பது கேள்விக்குறி.ஆனால் எங்களைப் பொறுத்தவரையிலே ஈழப்பிரச்சினை என்பது தேர்தலுக்குரிய பிரச்சினை அல்ல.

அது ஒரு இனத்தினுடைய வாழ்வுரிமைப் பிரச்சினை.

எப்படி 1980 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி நாங்கள் அதில் ஈடுபாடு கொண்டிருக்கின்றோமோ அதே போல தேர்தல் முடிந்த பிற்பாடும் கூட ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான வாழ்வு ரிமை, பாதுகாப்புரிமை வழங்க வேண்டும் என் பதிலே அக்கறையோடு இருக்கிறோம்.

அதற்குரிய அரசுகள் வரவேண்டுமானால் இப்பொழுது இருக்கின்றவர்களை வைத்துத் தான் செய்ய முடியுமே தவிர, தனியே இருந்து செய்ய முடியாது. அது தான் மிக முக்கியம்.

தந்தை செல்வாவே பிரிவினையைக் கேட்டார்

செய்தியாளர் : ஈழப் பிரச்சினை இன்னமும் முடியவில்லையே?

தமிழர்தலைவர் : ஈழப் பிரச்சினை நமது ஊர் பிரச்சினை இல்லை. பாண்டிச்சேரி பிரச்சினையே இன்னமும் முடியவில்லையே பல விசயங் களில். அது வெளிநாட்டுப் பிரச்சினை ஆயிற்றே.

ஈழத்தமிழர் பிரச்சினை தந்தை செல்வா காலத்திலிருந்து ஆரம்பித்தது. ரொம்பபேருக்கு வரலாறு தெரியாது. நாட்டுப் பிரிவினை கேட்டதே - ஈழம் என்று கேட்டதே தந்தை செல்வா தான்.

அதுவும் தேர்தலில் அவர்கள் நின்றார்கள். அப்பொழுதெல்லாம் விடுதலைப்புலிகள் அமைப்பே தோன்றவில்லை.

தந்தை செல்வா இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து தந்தை பெரியார் அவர்களைப் பார்த்தார்கள்.

கலைஞர் அவர்களைப் பாத்தார்கள். நான் சொல்வது 1972 ஆம் ஆண்டு. ஆகவே இது ஒரு நீண்ட போராட்டம். இலங்கையில் தமிழினப் படுகொலைகள் ஆட்சிகள் மாறினாலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

உலகத்திலே பல நாடுகளில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆகவே நாம் நம்முடைய அற வழிப்பட்ட ஆதரவை நாம் கொடுக்கிறோம். தொடர்ச்சியாக நாங்கள் அதை செய்து கொண்டு வருகின்றோம்.

செய்தியாளர் : இந்தியா ஆயுத உதவி செய்கிறதே?

தமிழர்தலைவர்: இந்தியா ஆயுத உதவி செய்யவில்லை என்று மறுத்திருக்கிறது. நாங்கள் ஆயுத உதவி செய்யவில்லை என்று தெளிவாகச் சொல்லி யிருக்கின்றார்கள்.

ஆனால், ஆயுத உதவி ஆரம்பத்தில் கொடுத்தார்களா? இல்லையா? என்பதைப் பற்றி இப் பொழுது நமக்குக் கவலை இல்லை.

இப்பொழுது இந்தியாவினுடைய நிலைப்பாடு அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொல்லி போரை அங்கு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

பயிற்சி தடுக்கப்பட்டது

ஆகவே, இதை எல்லோருமே சொல்லியிருக்கின்றார்கள். தமிழ்நாட்டிற்கு இலங்கைக்காரர்கள் சிலர் பயிற்சிக்கு வந்தார்கள் என்பது தெரிந்தவுடனே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கண்டித்திருக்கின்றார்கள்.

இது வழக்கமாக ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் பயிற்சி கொள்வது என்று சொன்னார்கள். எந்த பயிற்சியாக இருந்தாலும் இங்கு சிங்களவர்களுக்கு பயிற்சிக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்று தாம்பரத்திற்கு வந்தவர்களை திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள்.

இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது. என்ற செய்தியை பரப்பி இந்தியாவுக்கு ஒரு சங்கடத்தை கொடுக்க வேண்டும் என்பது சிங்களவர்களின் எண்ணமாக இருக்கலாம்.

சிங்களவர்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் என்றைக்கும் பிரித்தாளக்கூடிய எண் ணமுடையவர்கள். இந்திய அரசு என்ன சொல்கிறது. என்பது தான் முக்கியமே தவிர, இன்னொரு அரசு சொல்வதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இன்னொரு அரசு ஆயிரம் சொல்லலாம்.

இப்பொழுதும் கூட கலைஞர் அவர்கள் சொன்னவுடனே பிரதமர் பேசுகிறார்.

உடனே உள்துறை அமைச்சர் வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் வருகிறார். ஏற்பாடுகள் நடக்கிறது. கப்பல் மூலமாக இலங்கைக்கு உணவு, மருந்து பொருட்கள் போகின்றன.

இவ்வளவும் மத்தியில் நாம் ஒரு அரசை உருவாக்கிய காரணத்தால் தான் நடக்கிறது. இதற்கு முன்பு இருந்த அரசிடம் அந்த உரிமையை எடுத்துக்கொள்ள முடியாதே.

தமிழர் தூதர் தேவை

செய்தியாளர் : தூதர் அனுப்பியது பற்றி...

தமிழர்தலைவர் : இலங்கைக்கு தூதராக யாரை அனுப்புவது என்று பிரதமர் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் அல்ல. அந்தத் துறையை சார்ந்தவர்கள் செய்ய வேண்டிய செயல் அது.

அதைவிட நீங்கள் இன்னொரு நல்ல கேள்வியைப் போட வேண்டும். நீண்ட நாட்களாக நாங் கள் சொல்லிக்கொண்டு வருவது.

இலங்கையில் இந்திய தூதுவராக ஒரு தமிழர் தான் இருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு முன்னாலே டாக்டர் சுப்பராயன் அவர்கள் தான் ஒரு தமிழன் தூதுவராக அங்கு இருந்தார். ரெங்கராஜன் குமாரமங்கலம் தந்தையார் மோகன் குமாரமங்கலம் அவருடைய தந்தையார் சுப்ப ராயன்.

அவர்தான் இலங்கைக்கான தமிழர் தூதுவராக இருந்தார்.

அவருக்கு அப்புறம் இதுவரை ஒரு தமிழர் கூட இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட வில்லை. தமிழர்கள் எங்கெங்கு அதிகம் இருக்கின்றார்களோ உதாரணமாக, மலேசியா அது மாதிரி மற்ற நாடுகளில் தமிழர்களை தூதுவர்களாக அனுப்ப வேண்டும்.

இது இப்பொழுது அல்ல. திராவிடர் கழகம் நீண்ட நாள்களாக இதை வலியுறுத்திக் கொண்டு வருகிறது.

அதில் நிச்சயமாக நாங்கள் வெற்றிபெறுவோம் என்று கருதுகின்றோம்.

உங்கள் மூலமாக (செய்தியாளர்) இந்த கருத்துகள் வரும்பொழுது அதற்கு வாய்ப்பு, வலிமை இன்னும் ஏற்படும் - இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் பேட்டி அளித்தார்.


------------------"விடுதலை" 28-4-2009

0 comments: