
.jpg)
பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகள்..........
பெரியார் நாடகம் யாருக்காக? என்று ஏப்ரல் 2004 புதிய கோடாங்கி மற்றும் களத்துமேடு இதழ்களில் நாம் எழுதிய விமர்சனத்திற்கு மே2004 புதிய கோடாங்கி இதழில் திரு மா.வேலுசாமி அவர்கள் ஈ.வெ.ராமசாமி துணை கடவுளாகும் பெரியார்………. என்று இரண்டு தலைப்பிட்டு எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பெரியாரைப் பற்றி கீழ்வருமாறு எழுதியுள்ளார்.
"தமிழகத்தின் திராவிட மறுமலர்ச்சி அரசியலுக்கும், அதன் வளர்ச்சிக்கும் மதம் மற்றும் தமிழக மக்ககளின் மூடநம்பிக்கைகளைக் களைந்தெறிவதற்கு தன்னுடைய அயராத உழைப்பினை அர்ப்பனித்தவர் திரு ஈ.வெ.ராமசாமி என்பது நாமறிந்ததே. தமிழக அரசியலின் எழுச்சி முன்னோடியாகவும், திராவிட வரலாற்றை உருவாக்கியவராகவும் திகழ்ந்து-தமிழகத்தின் அரசியலை 50 ஆண்டுகாலமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். மாபெரும் அரசியல் தலைவர் என்பதில் எந்தவொரு சந்தேகமில்லை".
ஜாதி ஒழிய தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெரியாரை நாயக்கராகச் சித்தரித்தும், அரசியல் தலைவர் என்பதையும் விட்டு விட்டுப் பார்த்தால், பெரியாரை ஓரளவு சரியாக மதிப்பிட்டுள்ள திரு.மா.வேலுச்சாமி அவர்களுக்கு நமது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெரியாரை ஓரளவு சரியாக மதிப்பீடு செய்த திரு மா.வேலுச்சாமி அடுத்த வரியை இப்படி எழுதியுள்ளார்.
“ஏனெனில். ஜனநாயக நாட்டில் அரசியலையும், அதிகாரத்தையும் தூக்கி நிறுத்துகின்ற ஜனங்களான இன உடைமையாளர்கள். சமூகத்திற்கு உயர்ந்த வகுப்பார் ஆகியோர்களின் ஆதரவு பெற்றவர் என்ற வகையில் அவர் இன்றும் ஒரு மிரட்டலான தலைவராகவே இருந்து வருகின்றார். அதோடு அந்த ஆண்டை (உயர்சாதியினர்) வகுப்பார் இன்றளவும் பெரியாரைக் கடவுளாகவே போற்றி வருகின்றனர். பெரியாரை, ஆண்டைகள் கடவுளாகவே வழிபடுவதில் தலித்துகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் கடவுள் என்பவர் அனைவருக்கும் சமமானவராக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையாவது இருக்க வேண்டுமே”
நிலவுடமையாளர்கள், சமூகத்தில் உயர்ந்த வகுப்பார் ஆகியோர்களின் ஆதரவு பெரியாருக்கு இருந்ததாம், இருக்கிறதாம், சொல்கிறார் திரு.மா.வேலுச்சாமி.
பெரியார் இன்னார்- இனியார் என்று வேறுபாடின்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தவர். நிலவுடைமையாளர், உயர்ந்த வகுப்பார் ஆதரவு பெற்றவர் என்று கூசாமல் புளுகியிருக்கும் இவரின் கூற்று உண்மையா பெரியார் எந்தக் காலத்திலும், நிலவுடைமையாளர்களுக்கோ, உயர்ந்த வகுப்பாருக்கோ, ஆதரவாகச் செயல்பட்டதில்லை என்பதற்கு மிகச் சிறந்த ஆய்வாளரான திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்கள் தரும் சான்று இதோ,
“பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தனது அடிப்படை இலட்சியமான சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதற்கு ஆதரவாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான சக்திகளைத் திரட்டியது. ஆத்திகர். நாத்திகர், காங்கிரஸ்காரர், நீதிக்கட்சியினர், பொதுவுடைமை ஆதரவாளர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் நிலப்பிரபுக்கள், நிலமற்ற விவசாயிகள் எனப் பலதரப்பட்டேர் அதில் இருந்தனர், எந்தவொரு காலகட்டத்திலும் அவ்வியக்கம் முதலாளிகளின் நலன்களுக்கான கோரிக்கை விடுத்ததில்லை"
நூல்: "ஆகஸ்ட் 15" பக்கம்:-410
ஆண்டைகள் பெரியாரை கடவுளாக வழிபடுகிறார்களாம் குறைந்தபட்சம் பெரியாரை இந்த ஆண்டைகள் எதிர்காமலாவது இருந்தார்களா? இது குறித்து பெரியார் தரும் விளக்கம் இதோ
“ஒரு சார்பும் இல்லாதவனாகத் தனித்து எந்த ஒரு ஆதரவும் அற்றவனாகி என்னையே எண்ணி நின்று, பாமர மக்களுடையவும், படித்தவர்களுடையவும், பிறவி ஆதிக்ககார்களாகிய பார்பனர்களுடையவும், சர்வ சக்தியுள்ள பத்திரிக்கைகாரர்களுடையவும், போதாக்குறைக்கு அரசாங்கத்தாருடையவும் வெறுப்புக்கும், அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும், விசமப் பிரச்காரத்திற்கும், தண்டனை, கண்டனைகளுக்கும் ஆளாக இருந்து எதிர்ப்பையும் போராடங்களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்து, பொது மக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களை, இவை கனவு அல்ல, உண்மை நினைவே, காரிய சாத்தியமே என்று கூறி வந்து அவை- (எனது இலட்சியங்)களின் நடப்புகளையும் நடப்புக்கு ஏற்ற முயற்சிகளையும் கண்டுகளிக்கிறேன்.
------பெரியார் பிறந்தநாள் மலர் 88 -17.9.66
இவ்வாறு நேர்மையாக, நாணயமாக, ஒளிவு மறைவின்றி உழைத்த பெரியாரை மா.வேலுசாமி, முனிமா குழுவினர் திட்டமிட்டே திரித்து எழுதி வருகின்றனர். கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத பகுத்தறிவுச் சிந்தனை இல்லாத சாதி, மத சிந்தனையை ஏற்றுக் கொண்டிருக்கினற ஆண்டைகள்தான் அதிகம் அவர்கள் எப்படி பெரியாரை ஆதரிப்பார்கள் வழிபடுவார்கள் சிந்தியுங்கள் முனிமா குழுவினரே.
-------------------தொடரும்..........
------------------நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:- 8-9
3 comments:
தேர்தல் பிரச்சாரம் முடிஞ்சுதா இல்லை சலிச்சிட்டுதா?
//பெரியார் இன்னார்- இனியார் என்று வேறுபாடின்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தவர். நிலவுடைமையாளர், உயர்ந்த வகுப்பார் ஆதரவு பெற்றவர் என்று கூசாமல் புளுகியிருக்கும் இவரின் கூற்று உண்மையா பெரியார் எந்தக் காலத்திலும், நிலவுடைமையாளர்களுக்கோ, உயர்ந்த வகுப்பாருக்கோ, ஆதரவாகச் செயல்பட்டதில்லை//
உண்மையிலும் உண்மை . சரியான மதிப்பீடு.
//தேர்தல் பிரச்சாரம் முடிஞ்சுதா இல்லை சலிச்சிட்டுதா?/
ஈழப்பிரச்சினையும் தேர்தலையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
Post a Comment