Search This Blog

9.4.09

ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை உச்சக்கட்டத்தில்..

தமிழ்நாடு அதிர்கிறது!

ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ஓர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது.

இதனைக் கண்டித்து தமிழகமே கிளர்ந்துள்ளது. பல்வேறு கட்சிகளும் தத்தம் உசிதப்படி போராட்ட வடிவங்களை அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

இன்று மாலை தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் சென்னையில் மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது.

இங்கிலாந்தில் மூன்று நாள்களாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இங்கிலாந்து வாழ் தமிழர்களால் முதன் முறையாக நாடாளுமன்றமுன் முற்றுகையிடப்பட்டுள்ளது.

பிரான்சு, சுவீடன், கனடா, நெதர்லாந்து நாடுகளில் தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழர் நிலைமை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் - நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன்ஸ் கார்ஸ்டோருடன் உரையாடியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

அய்.நா. மன்றம் தொடர்ந்து சிங்கள அரசுக்கு வேண்டுகோளை விடுவித்து வருகிறது.

இலங்கையில் போரை நிறுத்துமாறு - இந்தியப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், அய்க்கியக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோருக்கு முதலமைச்சர் என்ற முறையில் தந்திகளைக் கொடுத்துள்ளார் கலைஞர் அவர்கள்.

இந்த நிலையில், இலங்கைப் பிரதமர் விக்கிரம நாயகா கூறுகிறார்:

தோல்வி அடையும் விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற அனைத்துலக ராஜதந்திரிகள் முயற்சித்தனர். அவர்களின் நடவடிக்கைக்கு அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என்று திமிரோடு கூறியுள்ளார்.

இதற்கிடையே விடுதலைப்புலிகளுடன் நடத்தும் போரில் இந்திய வீரர்களும் இருக்கின்றனர் என்ற ஒரு கருத்தும் வந்துள்ளது. அதுமாதிரி எதுவும் கிடையாது என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி குறிப்பிட்டதுண்டு.

உலகின் பல்வேறு நாடுகளும் இந்தப் பிரச்சினையில் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்தாலும் பக்கத்து நாடான இந்தியாவின் குரலில்தான் ஆளுமையும் அழுத்தமும் அதிகமாக இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் நடந்துவரும் போராட்டங்கள், பேரணிகள் எதை உணர்த்துகின்றன? இதனை இந்தியா வெளிப்படையாக இலங்கை அரசுக்கு இதுவரை தெரிவித்த தொனியை மாற்றி - இலங்கை அரசுக்குப் புரியும் மொழியில் வலிமையோடு கூறினால்தான் சரிப்பட்டு வரும்.

இந்திய அரசேகூட, இந்தப் பிரச்சினையை அய்.நா.வுக்குக் கொண்டு போகலாம்.

ஒரு இனமே மழலைகள் முதல் முதியோர்வரை பேரினவாத அரசு ஒன்றால் இராணுவப் படைகள்மூலம் அழிக்கப்படுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இந்தியா தயாராக வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றியாகிவிட்டன. மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தை நடத்திக் காட்டியாயிற்று.

இப்பொழுது பந்து மத்திய அரசின் கையில் இருக்கிறது. அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு மத்திய அரசும், ஆளும் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியும் சரியான முடிவெடுத்து வெளிப்படையாக எச்சரிக்கையுடன் கலந்து வேண்டுகோளை அழுத்தமாக வைத்தே தீர வேண்டும். இந்த எதிர்பார்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர் களிடத்தில் மட்டுமல்ல - மனிதநேய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் உள்ளது.

இதில் அரசியலைப் போட்டுக் குழப்பவேண்டாம். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட இந்தியாவுக்கே அதிகப் பாத்தியதை உண்டு.

ஏற்கெனவே இந்தியப் பிரதமர் கூறி வந்த வார்த்தைகளை இலங்கை அரசு எந்த அளவுக்குப் புரிந்துகொண்டது என்றே தெரியவில்லை.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான எழுச்சிக் குரலை இலங்கை அரசிடம் இந்தியப் பிரதமர் சிந்தாமல் சிதறாமல் எதிரொலித்தாலே போதும் - நெருக்கடிக்குத் தீர்வு கிடைத்துவிடும்.


------------------நன்றி:- "விடுதலை"தலையங்கம் 9-4-2009

3 comments:

Unknown said...

//தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான எழுச்சிக் குரலை இலங்கை அரசிடம் இந்தியப் பிரதமர் சிந்தாமல் சிதறாமல் எதிரொலித்தாலே போதும் - நெருக்கடிக்குத் தீர்வு கிடைத்துவிடும்.//

எப்போது எதிரொலிக்கும்?

தமிழன் முதலில் எப்போது ஒற்றுமையாக குரல் கொடுத்திருக்கிறான்?

எப்படியோ ஈழப்பிரச்சினக்கு நல்ல தீர்வு கிடைத்ததல் வேண்டும்

Anonymous said...

ஓவியா கருணாநிதி யாருக்கு எதிராகப் போராடுகிறார்,

தமிழ் ஓவியா said...

//கருணாநிதி யாருக்கு எதிராகப் போராடுகிறார்//

இது குறித்து 10-4-2009 விடுத்லை தலையங்கக் கருத்தை தங்கள் பார்வைக்கு வைக்கிரேன்.
"ஜெயலலிதா போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் உண்டா?

ஈழத்தமிழர்ப் பிரச்சினையும் -
மக்களவைத் தேர்தலும்!

ஈழத்தமிழர்ப் பிரச்சினை, தமிழர்களின் பிரச்சினை மட்டுமல்ல; உலகப் பிரச்சினையாக இன்று வடிவெடுத்திருக்கிறது. இனப் பிரச்சினை மட்டுமல்ல; மனித உரிமை மற்றும் மனிதாபிமானப் பிரச்சினையாகவும் பேருரு எடுத்துள்ளது.

இதில் வருந்தத்தக்கது என்னவென்றால், இதில் அதிக அக்கறையும், கவலையும், பாத்தியதையும் பட்டுள்ள தமிழ்நாட்டிலோ, தமிழர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டு, தேர்தல் இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றனர்.

அரசியல் கட்சிகளும் சரி, சமுதாய இயக்கங்களும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் சரி, யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? மாநில அரசிடமும், மத்திய அரசிடமும்தானே கோரிக்கைகளை வைக்கிறார்கள்?

இந்த நிலையில், மாநில அரசு இப்பிரச்சினையில் சில முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போது, கட்சி மாச்சரியங்களைக் கடந்து ஒத்துழைத்தி ருக்கவேண்டும்.

ஆனால், அப்படியான அணுகுமுறைகளை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கடை பிடித்ததுண்டா?

அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை; பிரதமரைச் சந்திக்கச் செல்லும் குழுவில் இடம்பெற மறுப்பு. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது வெளிநடப்பு, இத்தியாதி - இத்தியாதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சில அரசியல் கட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நடந்துகொண்ட கட்சிகள் அரசு சரியாக செயல்படவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க தகுதி உள்ளவைதானா - உரிமை உடையவைதானா என்பது அர்த்தமிக்க வினாக்களாகும்.

எந்த அளவுக்குத் திசை திருப்பப்பட்டு இருக்கிறது என்றால் பிரதமர், தமிழக முதல்வர் உருவப்படங்களை எரிக்கும் அளவுக்குத் திசை திருப்பப்பட்டு விட்டது.

இதன் விளைவு என்னவாகும்? ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்கள் கடுமையான அளவுக்குப் பிளவு படவும், ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொள்ளவுமான ஒரு நிலையைல்லவா ஏற்படுத்தி இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, அவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்க முடியும்?

இலங்கை அரசு தமக்குச் சாதகமாக இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) கூறுவதைக் கவனியுங்கள் என்று அவர்கள் கூறும் அளவுக்கு நிலைமையைக் கொச்சைப்படுத்தியவர்கள் தமிழர்களின் மத்தியில் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் அல்லவா?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பது அரசியல் சார்பற்றது என்றுதானே தொடக்கத்தில் கூறப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திரு மாவளவன் தொடக்கத்திலேயே அதனைத் தெளிவுபடுத்தினாரே - இப்பொழுது அதன் நிலை என்ன? தேர்தலில் ஆளும் தி.மு.க.வை எதிர்க்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு சென்று விட்டதே!

இதில் என்ன வேடிக்கையான துன்பம் என்றால் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சோதரிபோல நடந்துகொண்டவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அல்லவா!

ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லுவதே - விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டவர்தானே ஜெயலலிதா?

இந்த நிலையில், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டு (கூட்டணியில்) இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் இருக்க முடியுமா?

இது அக்கட்சிகளின் நேர்மையற்ற போக்கைத்தான் வெளிப்படுத்தும். ஈழத் தமிழர்ப் பிரச்சினையைக்கூட தேர்தல் இலாபத்துக்குத்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்ற உண்மையும், கோணிப் பையிலிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்ததுபோல வெளிவந்துவிட்டதா இல்லையா?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் இதனைக் கவனமுடன் பரிசீலிக்கவேண்டும் என்பதே ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அக்கறை உள்ள நமது வேண்டுகோளாகும்.


------------------"விடுதலை" தலையங்கம் 10-4-2009"