Search This Blog
1.4.09
"தி.க. - தி.மு.க. என்னும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளின் பணிகள்!"
"தி.க. - தி.மு.க. என்னும்
இரட்டைக் குழல் துப்பாக்கிகளின் பணிகள்!"
முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞரின் பெருமிதம்
முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருது மற்றும் முரசொலி மாறன் சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், முதல்வர் கலைஞர் விருதுகளை வழங்கி உரை யாற்றுகையில், இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீண்டும் வாழ உலக நாடுகள் செய்யும் ஏற்பாடுகளுக்கு பக்கத் துணையாக என்றென்றும் நின்றிட தமிழகம் தயார் - தி.மு.கழகம் தயார் என்று உணர்ச்சிப் பொங்க குறிப்பிட்டார்.
மேலும், இராவணன் ஆண்ட பூமி இலங்கை - என் தமிழன் ஆண்ட பூமி - இலங்கைத் தமிழர் களுக்காக பல ஆண்டு காலமாக பாடுபட்டு வருகிறோம்! போர்க் குரல் கொடுத்து வருபவர்கள் நாம் என்பதை யாரும் திசை திருப்ப முடியாது என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார் முதல்வர் கலைஞர் அவர்கள்.
விழாவில் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
விருது வழங்கும் விழா என்று விளம்பரப் படுத்தப்பட்டு - திடீரென்று தந்தை செல்வா அவர்களுடைய திருவுருவப்படத்தைத் திறந்து வைத்திருக்கிறோம் என்றால் - அதை நினை வூட்டிய பெருமை - இன்று காலையிலே நான் வழக்கம்போல் நம் முடைய அருமைத் தம்பி சுப. வீரபாண்டியனுடைய ஒன்றே சொல்; நன்றே சொல் என்ற நிகழ்ச்சியைக் கேட்ட போது - அதில் அவர் இன்று செல்வா அவர்களுடைய பிறந்த நாள் என்று குறிப்பிட்டவுடன் - உடனடியாக தம்பி ஸ்டாலினுக்கு தொலை பேசியிலே தொடர்பு கொண்டு - இந்த விழா விலே தந்தை செல்வா அவர்களுடைய படத்தைத் திறந்து வைக்க வேண்டும் - அதற்கான ஏற்பாடுகளைச் செய் என்று நான் குறிப்பிட்டேன். அதோடு அவருடைய படத்தைப் பெறு வதற்காக நம்முடைய நண்பர்கள் சந்திரஹாசன் இல்லத்திற்குச் சென்ற போது - அவரையும் இந்த விழாவிற்கு அழைத்ததின் காரணமாகவும் - அவரும் இந்த விழாவிலே கலந்து கொண்டு நம்மையெல்லாம் சிறப்பித்து - ஈழத்திலே, இலங்கையிலே அவதிப்படுகிற தமிழர் களுடைய குரலை இங்கே எதிரொலித்த ஒரு நிலையும் உருவாகியிருக்கின்றது. இதைப் பொறுத்து நான் நீண்ட நேரம் பேச வேண்டும் - ஆனால் நம்முடைய பேராசிரியர் அவர்கள் என்னையே நீண்ட நேரம் பேச விட முடியாதென்று இங்கே ஆணையிட்டிருக்கிறார். என்னு டைய உடல் நிலை உங்களுக்கெல்லாம் தெரியும். கடந்த சில நாட்களாகத் தான் நான் பொது மேடைகளுக்கு வருவதும் - சில விழாக்களிலே கலந்து கொள்வதும் - சிலநிமிட நேரம் உரையாற்றுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதிலே கூட என்னை அழைப்பவர்களுக்கு கொஞ்சம் செலவு மிச்சம். நான் வரும்போதே - நீங்கள் எனக்காக நாற்காலிக்கு வாடகை கொடுத்து (சிரிப்பு) மேடையிலே எனக்காகப் போடத் தேவையில்லை. நானே நாற்காலியில் வந்து விடுகிறேன் என்று (பலத்த சிரிப்பு) சக்கர நாற்காலியிலே வருகின்ற நிலை. உங்களைச் சந்திப்பதிலேதான் என் உடல் நலிவுக்கு மருந்து உள்ளது
நான் சக்கர நாற்காலியில் வரும்போது - நான் பெரியாரோடு ஒப்பிட்டுக் கொள்ள தகுதி உடை யவனோ, இல்லையோ பெரியாரை எண்ணிக் கொள்கின்றேன். ராஜாஜியோடு ஒப்பிட்டுக் கொள்ள தகுதி உடையவனோ இல்லையோ, ராஜாஜியை எண்ணிக் கொள்கின்றேன். எனக்கு வந்த இந்த நோய், அவர்களோடு என்னை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடிய அளவிற்காவது ஆளாக் கியிருக்கிறதே என்பதையெண்ணி, ஒரு வகையிலே மகிழ்ச்சி தான். தலைக்கு மேலே நோயின் தாக்கம் எதுவும் இல்லாத காரணத்தால், தலை சரியாக இருக்கின்ற காரணத்தால், தலைக்குள்ளே இருப்பதும் ஒழுங்காக இருக்கின்ற காரணத்தால், அந்தத் தலைக்குள்ளே பதிவான பழைய விஷயங்கள் - அந்த விஷயங்கள் எல்லாம் மறந்து போகாமல் இருக்கின்ற காரணத்தால் - உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த நேரத்தில் நான் உங்களோடு கலந்து உறவாட வந்தேன் என்பது மாத்திரமல்ல, ஒரு சுயநலம் கூட- மருந்து தேடி வந்திருக்கிறேன். எனக்கு மருந்து நீங்கள் தான். (கைதட்டல்) உங்களைச் சந்திப்பதில் தான் என்னுடைய உடல் நலிவுக்கு மருந்து இருக்கிறது என்பதால், அந்த மருந்தைப் பெறத்தான் இங்கே வந்தேன்.
அண்ணாவால் திருஞானசம்மந்தர்
என்று பாராட்டப்பட்டவர் கி.வீரமணி
இன்றையதினம் இந்த மேடையில் நம்முடைய அன்பு இளவல், தமிழர் தலைவர் என்று இன்று நாடு போற்றுகின்ற வீரமணி அவர்களுக்கு விருது வழங்கியிருக்கிறோம். அந்த விருது பற்றி வீரமணி பேசும்போது சொன்னார்கள் - அதற்கான மதிப்புரைகளை, போற்றுதல் தாங்கிய உரைகளை, பாராட்டுரைகளை தம்பி ஸ்டாலின் படிக்கும்போது - நான் மண விழாவிலே உட்கார்ந்திருக்கின்ற மணப்பெண்ணைப் போல் தலை குனிந்து கொண் டேன் என்றார்கள். பேர் வீரமணி - (பலத்த கை தட்டல், சிரிப்பு) தலை குனிந்து கொண்டேன் என்றார். அப்படியென்றால், பெண்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று நீங்கள் சொல்வது எல்லாம் ஊருக்காகத் தானா? பெண்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும், ஆண்கள் தலை குனிந்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய இளவல் வீரமணி பேசி யிருப்பாரென்று நான் கருதவில்லை. இருந்தாலும் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களால் ஒரு காலத்தில் கடலூர் என்று கருதுகிறேன் - அங்கே நடை பெற்ற ஒரு மாநாட்டில் அவருடைய இளமைக் காலத்துப் பேச்சை - சின்னஞ்சிறு வயதில் அவர் ஆற்றிய உரையை பேரறிஞர் அண்ணா அருகேயிருந்து கேட்டு விட்டு - அண்ணா அவர் கள் அடுத்துப் பேசும் போது, வீரமணியை நம்முடைய திருஞான சம்பந்தராக திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தராக நான் காண்கிறேன் என்று குறிப்பிட்டார்கள். அத்தகைய இளமைப் பருவத் திலேயே திருஞான சம்பந்தர் என்று அண்ணா அவர்களால் பாராட்டப்பட்ட பகுத்தறிவுச் சுடர், நம்முடைய இளவல் வீரமணி அவர்கள். நானும் அவரும் குருகுலத்தில் - ஈரோடு பெரி யாரின் அலுவலகத்திலே இருந்த அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் சொன்னார்கள். குரு குலத்தில் இருந்தது மாத்திரமல்ல, அந்தக் குருகுலத்து மாணவர்களாகிய எங்களை யெல் லாம் பெரியார் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட மாதங்களில் - நீங்கள் மாநிலமெங்கும் அய்ந்து பேர், அய்ந்து பேராகப் பிரிந்து மாணவர்கள் சுற்றுப் பயணம் செய்து - நம் முடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்யுங்கள் என்று ஆணையிடுவார்கள்.
அப்படி நடைபெறு கின்ற அந்தப் பகுத்தறிவு பிரச்சாரத்தில், அந்தக் குழுவில் நானும், வீர மணி அவர்களும் அந்த இளமைக் காலத்திலே இருந்தோம் என்ற நினைவுகள் எல்லாம் இன் றைக்கு வருகின்றன. இங்கே அவர் ஒன்று சொன்னார். உங்களுக்கெல்லாம் அது புதிய செய்தி. ஆனால் அந்தப் புதிய செய்தியில் அவர்கள் வேகத்தில் ஒன்றிரண்டை விட்டு விட் டார்கள் என்று கருதுகிறேன். திராவிட இயக்கம் ஒன்றாக விளங்க வேண்டுமென்று இரண் டாக ஆக்கியவர் எண்ணினார் - அதற்கு முயற்சி மேற்கொண்டோம் என்று வீரமணி இங்கே குறிப்பிட்டார். ஒன்றாக ஆக வேண்டும் என்று என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் முயற்சி மேற்கொண்டு, அதற்கு நம்முடைய இளவல் தமிழர் தலைவர் வீரமணி அவர்களை நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று கேட்ட போது, அதற்கு துணையாக நம்முடைய அருமை நண்பர் சோலை அவர்களும் ஒத்துழைத்த போது - மேலும் நடந்த சில நிகழ்ச்சிகளை நான் சொல்லாவிட்டால், வீரமணி அவர்கள் இங்கே சொன்ன அந்த நிகழ்ச்சியோடு நீங்கள் திரும்ப நேரிடும். ஆகவே நான் அதை முழுமையாகச் சொல்ல விரும்புகிறேன்.
ஒன்றாக இணைய நான் விதித்த நிபந்தனை
அப்படி ஒரு முயற்சியை ஒரு தேர்தல் நேரத்தில் - நம்முடைய அன்புக்கும், மதிப்புக்கும் உரிய பிஜூ பட்நாயக் அவர்கள் - எனக்கு நெருங்கிய நண்பர் - அவர் அந்த முயற்சியை மேற்கொண்டு - அவர் தமிழகத்திற்கு இதற்காகவே வந்து என்னைச் சந்தித்தார். நான் அவரிடம் எப்போதும் மனம் விட்டுப் பேசக் கூடியவன் என்ற காரணத்தால், ஏன் திராவிட முன்னேற்றக் கழகமும், அ.தி. மு.க.வும் ஒன்றாகக் கூடாது என்று கேட்டார். இது யாருடைய சிந்தனை என்று கேட்ட போது, நான் எம்.ஜி. ஆரிடம் பேசி விட்டேன், எம். ஜி. ஆர். அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார், உன்னுடைய நிபந்தனை என்ன என்று கேட்டார். நீங்கள் பேசியதும் - நண்பர் எம்.ஜி.ஆர். ஒப்புக் கொண்டதும் உண்மை என்றால் என் நிபந்தனைகளைச் சொல்கிறேன், கேளுங்கள் - இரண்டு கட்சிகளுக்கும் தலைவராக நான் இருப்பேன், ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளின் ஆரம்ப காலத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளை பெரியாரால், அண்ணா அவர்களால் வகுத்த அந்தக் கொள்கை களை - கட்டிக் காக்கக் கூடிய அந்தத் தலைமை என்னிடத்திலே இருந்தால்தான் - அதைக் கட்டிக் காக்க முடியும், அதே நேரத்தில் இப்போதுள்ளதைப் போலவே எம்.ஜி.ஆரே முதலமைச்சராக நீடிக்கட்டும் என்றேன். அப்படியா என்றார். பிறகு என்ன நிபந்தனை என்றார். ஒன்றும் பெரிய நிபந்தனை அல்ல - கொடியிலே அண்ணாவின் படத்தைப் போட்டிருக்கிறார்கள், அது நீடிக் கட்டும் - இப்போது திடீரென்று அண்ணாவின் படத்தை எடுக்கச் சொன்னால், கருணாநிதி, அண்ணாவின் படத்தை எடுத்து விட்டான் என்று வேண்டுமென்றே தமிழ் நாட்டில் அதற்காகவே சில பத்திரிகைக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கோள்மூட்டுவார்கள், ஆகவே அண்ணா படம் கொடியில் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன். வேறு என்ன நிபந்தனை என்றார். வேறு ஒன்றும் பெரிய நிபந்தனை அல்ல. திராவிட இயக்கம் ஆரம்ப காலத்தில் சமூகநீதிக்காக உருவான இயக்கம், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள் - இந்த மக்கள் வாழ, உரிமை பெற, சலுகைகளை அனுபவிக்க - எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள், அவர்களுக்குக் கிடைக்க - கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்கள் சமூக ரீதியாக இன்று பெற்று வருகிற இட ஒதுக்கீடு - கல்லூரி களில், பள்ளிகளில், பல் கலைக்கழகங்களில் பெறு கின்ற இட ஒதுக்கீடு - இப்போது எம்.ஜி.ஆர். திடீரென்று கொண்டு வந்திருக்கின்ற பொருளாதார அடிப்படையில் பாழ்படுகிறது, ஆகவே 9000 ரூபாய் வரை சம்பளம் உள்ளவன் ஒரு சாதி - அதற்கு கீழே வருமானம் உள்ளவன் ஒரு சாதி என்று பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வது கூடாது, சமூக அடிப் படையில் அவர்களுடைய தகுதியைப் பிரித்து இந்த இட ஒதுக்கீடு தரப் பட வேண்டும், அதற்கு ஒத்துக் கொள்கிறாரா என்று கேளுங்கள் என்றேன். பிஜூ பட்நாயக் ஆச் சரியப்பட்டுப் போய் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு - நான் ஏதேதோ நிபந்தனை களையெல்லாம் சொல்லுவாய் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன், எவ்வளவு சாதா ரணமான நிபந்தனைகளைச் சொல்லியிருக்கிறாய், நான் இப்போதே போய்ப் பேசிவிட்டு வரு கிறேன் என்று சொல்லி - இவர் சென்று, இங்கேயிருக்கின்ற சேப்பாக்கம் அரசினர் விடுதிக்கு எம். ஜி.ஆரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். சேப்பாக்கம் அரசினர் விடுதியில் நான் ஒரு அறையிலே இரு்க்கிறேன், இன்னொரு அறையில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன், இன்னொருவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, இருந்தாலும் சொல்லா விட்டால் சரித்திரம் முழுமை ஆகாது, பண்ருட்டி ராமச்சந்திரன். இவர்கள் இன்னொரு அறையிலே இருந்தார்கள். பிஜூ பட்நாயக் அவர்களிடம் சென்று நான் சொன்னதைச் சொன்னதும், எம்.ஜி.ஆர். அவருடைய அறையிலேயிருந்து என்னுடைய அறைக்கு வந்தார். எப்போதும் அவர் என்னைப் பார்த்தால் என்ன முதலாளி? என்பார், இல்லாவிட்டால் என்ன ஆண்டவனே? என்பார். இப்படித்தான் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்வோம். என்ன ஆண்டவனே, நீங்கள் என்ன சொன்னீர்கள், பிஜூ பட்நாயக் அவர்களிடம் என்று கேட்டார். நான் சொன்னேன் - இரு கழ கங்களும் ஒன்றாவதென் றால், கழகத்திற்குப் பெயர் - அண்ணா வைத்த பெயர் திராவிடமுன்னேற்றக் கழகம், அதுவே நீடிக்க வேண்டும் என் றேன்.கொடியைப் பொறுத்தவரையில், நீங்கள் வைத்த அண்ணாவின் உருவம் கொடியிலே இருக்கலாம் என்பதை ஒப்புக் கொண்டேன். பிறகு என்றார். நீங்களே முதலமைச்சராக நீடிக்கலாம் என்று சொன்னேன். அப்படியா? என்னையே முதலமைச்சராக நீடிக்கலாம் என்று சொல்கிறீர்களா? ஆமாம், நான் அந்தப் பதவிக்காக இந்த உறவை, ஒற்றுமையை நாடவில்லை, எனக்கு இயக்கம் வலுப்பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னேன் என்றேன். பிறகு என்றார். இந்த 9000 ரூபாய் பொருளா தார அடிப்படை யில் இட ஒதுக்கீடு இருக் கிறதே, அதை உடனடி யாக வாபஸ் பெற வேண்டும் என்று சொன் னேன், அவ்வளவு தான் என்றேன்.
உடனே சொன்னார் - இன்று நான் வேலூர் போகிறேன், நாளைக்கு பக்கத்தில் ஒரு ஊரில் எங்கள் செயற்குழு கூட்டம் இருக்கிறது. அதே நேரத்தில் நீங்களும் சென்னையிலே ஒரு அவசரச் செயற்குழுவை கூட்டுங்கள். அங்கே எங்கள் செயற்குழு நடை பெறுகிற நேரத்தில், நாளை மறுநாள் உங்கள் செயற்குழுவும் இங்கே நடைபெறட்டும். நாம் பேசிக் கொண்ட நிபந் தனைகளை வைத்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள். அதைத் தொலைபேசியில் எங்களுக்குச் சொல்லச் செய்யுங்கள். நாங்களும் அதே தீர்மானத்தை நிறை வேற்றி இரு கட்சிகளும் ஒன்றாக ஆகலாம் என்று சொன்னார்.
சொல்லி விட்டு வேலூர் சென்றார். காரில் செல்லும் போது என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. காரில் அவரோடு சென்றவர் - அவர் காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத் தில் எம்.ஜி.ஆர். என்ன பேசினார் என்றால் - இன்று மாலைப் பத்திரி கைகளில் எல்லாம் ஒரு செய்தி வந்திருக்கிறது, நானும் கருணாநிதியும் ஒன்றாகப் போகிறோம் என்று, தி.மு.க.வும், அ.தி. மு.க. வும் இணையப் போகிறது என்று, அதை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். நான் உங்களுக்குச் சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால், அப் போதே சொன்னேன் - நான் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று - அவர் அந்தக் காரிலே சென்றார் - அதனுடைய விளைவு அன்றைக்கு இந்த முடிவுக்குக்காரணமாக ஆனது.
இலட்சியத்திற்காக பாடுபடுகிற இயக்கம் தி.மு.க.
இவ்வளவு இருக்கும் போது இதையெல்லாம் நம்முடைய இளவல் வீரமணி அவர்கள் மறைத்து விட்டு, இங்கே இந்தச் செய்தியை உங்களிடம் சொல்லியிருக்கிறார். ஆக திராவிட இயக்கம் என்பது ஒரு கொள்கையின் அடிப்படையிலே தான் இயங்க முடியும். ஆனால் ஒரு கொள்கை, ஒரு இலட்சியம் இவற்றுக்காகப் பாடுபடுகின்ற இந்த இயக்கம் - பணியாற்றுகின்ற இந்த இயக்கம் போராடுகின்ற இந்த இயக்கம் - அந்தப் போரிலே வெற்றி பெறுகிற வரையில் யாருக்கும், எந்த நேரத்திலும் கொள்கையிலே ஒரு துளியும் விட்டுத் தராது, இலட் சியத்திலே ஒரு சிறிதும் துவண்டுவிடாது.
அதனால்தான் இங்கே விருது பெற்றவர்களை எல்லாம் பார்த்தால் - நான் வீரமணி அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஒரு குழல் அது - இன்னொரு குழல் நாங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருடைய ஆரம்ப கால ஆரோக்கியமான பகுத்தறிவும், இன்றைக்கு அவர் அந்தப் பகுத்தறிவைப் பரப்ப எடுத்துக் கொள்கிற முயற்சிகளும் - பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற அந்தப் பெரும் சொத்தும் - வீடு வாசல் அல்ல, இயந்திரங்கள் அல்ல, பத்திரிகைகள் அல்ல, சுயமரியாதை என்கிற அந்தப் பெரும் சொத்தை இன்றைக்குக் காப்பாற்றி வருகிற ஒரு பெருமகனாக அவர் விளங்குகிறார். எனவே அவருக்கு விருது அளிப்பதில் நாங்கள் பெருமையடை கிறோம். முரசொலி அறக் கட்டளை பெருமை அடைகிறது.....
......இந்த இனிய விழாவிலே நம்முடைய நண்பர் தந்தை செல்வா அவர்களுடைய புதல்வர் சந்தி ரஹாசன் அவர்கள் வருகை தந்து நமக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தி யிருக்கிறார். தந்தை செல்வா அவர்கள் 1972ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். எதற்காக? இலங்கை யிலே அவதிப்படுகிற மக்களுக்கு - இலங்கையிலே அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற தமிழ் இனத் திற்கு - உரிமைகளைக் கேட்க - அதற்காக துணை பெற இங்கே பெரியாரைக் காண, அதைத் தொடர்ந்து என்னைக் காண இங்கே வந்தார்கள். பெரியாரைப் பார்த்து நீங்கள் எங்களுக்குத் துணையாக இருக்க வேண்டும், நாங்கள் மிகவும் கஷ்டப்படு கிறோம் என்று சொன்ன போது, பெரியார் சொன்ன தாகக் கேள்வி - நாங்களே அடிமைகளாக இருக்கிறோம், நாங்கள் என்ன உங்களுக்குச் செய்ய முடியும் என்று சொன்னதாகக் கேள்வி.
32 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம்
செல்வா அவர்கள் என் இல்லத்திற்கு வந்தார்கள். அவரோடு நாவலர் அமிர்தலிங்கமும் வந் தார்கள். அப்போதெல்லாம் செல்வா அவர்களால் பேசவே முடியாது. உதடு அசையும், ஏதோ வொரு ஒலி அந்த உதடுகளுக்கு இடையிலிருந்து வரும். அந்த ஒலியைப் புரிந்து கொள்ளக் கூடிய சக்தி, அவரோடு கூட வந்த அமிர்தலிங்கம் அவர்களுக்குத் தான் உண்டு. அவர் உதட்டை அசைப்பார், என்ன சொல்லுக்காக அசைத்தார் என்பதை அமிர்தலிங்கம் எங்களுக்கு வெளியிடுவார். அதைக் கேட்டுக் கேட்டு நாங்கள் பதிலளித்து அவர் அன்றைக்கு புரிந்த தொண்டின் காரணமாக - ஆற்றிய பணியின் காரணமாக - அடிமைப்பட்டுக் கிடக்கிற இலங்கைத் தமிழர் களுக்கு சுதந்திர உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய தமிழ் ஈழம் என்ற அந்தக் கொள்கை பரவுவதற்காக இங்கே வந்தார்கள். ஆனால் 72ஆம் ஆண்டிலே வந் தார்கள். பிறகு அய்ந் தாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் மறைந்த போது அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்பு - நான் எழுதிய உடன் பிறப்பு கடிதம் இது. அதைக் கையிலே வைத் திருக்கிறேன் - அந்த உடன்பிறப்புக் கடிதத்தில் என்ன எழுதினேன் என்றால் - (கடிதத்தைப் படித்தார்).
நான் அன்றைக்கே 28-4-1977 அன்று உடன் பிறப்புக் கடிதம் எழுதினேன். இன்றைக்கு - அப்போதெல்லாம் இல்லாதவர்கள் - இந்த வரலாறு தெரியாதவர்கள் - செல்வா மறைந்த செய்தி தெரியாதவர்கள் - செல்வா பட்டபாடு என்னவென்று படிக்காதவர்கள் - இன்றைக்கு இலங்கையைப் பற்றி - நமக்கு என்ன தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை ராவணன் ஆண்ட பூமி - என் தமிழன் ஆண்ட பூமி தான். (கைதட்டல்) அந்த இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீண்டும் வாழ எந்த ஏற்பாடுகளை உலக நாடுகள் ஒன்று கூடிச் செய்தாலும் அதற்கு வழி வகுக்க - ஆலோசனைகளைக் கூற - அறிவுரைகளை வழங்க - பக்கத் துணை நிற்க - என்றென்றும் தமிழகம் தயாராக இருக்கின்றது, திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக் கின்றது.
நான் நேற்றைக்குக் கூட கழகச் சொற்பொழி வாளர்கள் கூட்டத்திலே சொன்னேன் - தமிழ் நாட்டிலே உள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேச முடியாதவர்கள், மத்திய அரசைப் பற்றிப் பேச முடியாதவர்கள், அதற்கு வக்கு வகை இல்லாதவர்கள் இன்றைக்கு திசை திருப்ப இலங்கையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இலங்கைத் தமிழர்களைப் பிடித்துக் கொண்டி ருக்கிறார்கள். ஏமாறாதீர்கள் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இலங்கைத் தமிழர்களுக்காக இன்று நேற்றல்ல - பல ஆண்டு காலமாகப் பாடுபட்டு வருகிற அவர்களுக்காக போர்க்குரல் கொடுத்து வருகின்ற - ஒரு இயக்கம் திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் - இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி தான் அவர்களுக்காக அன்றும் இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்பதை அவர்களுக்கெல்லாம் இந்த விருது வழங்குகின்ற விழாவிலே இதை ஒரு வாய்ப்பாக கருதி, இந்த வாய்ப்பு நமக்கு ஏற்படுகின்ற அளவிற்கு வருகை தந்த என்னுடைய அருமை நண்பர் சந்திரஹாசன் அவர்களுக்கும், நன்றி கூறி, இந்த விருதுகளைப் பெற்றவர்கள் எங்களுடைய வாழ்த்துகளை பெற்றமைக்கு - இந்த விருதுகளைப் பெற்று இந்த அறக்கட்டளைக்குப் பெருமை சேர்த்ததற்காக அவர்களுக்கெல் லாம் நன்றியினைத் தெரிவித்து உங்களுக்கெல்லாம் நன்றியும் வாழ்த் தும் கூறி இந்த அளவில் விடை பெறுகிறேன்.
- இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.
தமிழர் தலைவர்பற்றிய விருதுக் குறிப்புரை
மாணவப்பருவத்திலேயே நதிநீரோட்டமான தன் பேச்சாற் றலால் தந்தை பெரியாரைக் கவர்ந்து - பின்னர் அவர் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றி இன்று அய்யா அவர்களின் வழித் தோன்றலாக மட்டுமின்றி அய்யா அவர்களின் உருத்தோன்றலாக வும், தமிழகத்தில் மட்டுமல்லாது திக்கெட்டும் திராவிடர் கழகத்தின் கொள்கைகளை வளர்த்து வருபவர் ஆசிரியர் என்று அனை வராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற டாக்டர் கி. வீரமணி அவர்கள்.
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் என்றும் உரியவராக விளங்குவது மட்டுமன்றி - திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்குக் கரம் கொடுத்து, சோதனையான நேரங்களில் உடனிருந்து தோள் கொடுத்து - இனமான உணர்வின் இரத்த பந்த வடிவாய் செயல்படுகின்றவர் கலைஞரின் அன்பு இளவல் - திராவிடர் கழகத்தின் தளநாயகர் கி.வீரமணி அவர்கள்.
இவர் கடலூர் முதுநகரில் 2.12.1933ஆம் ஆண்டு சி.எஸ். கிருஷ்ணசாமி - மீனாட்சியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு முடித்து 1956ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 1960 இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட இளங்கலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் (பொருளாதாரம்) தேர்வில் முதல் மாணவராக விளங்கியமைக்காக மூன்று தங்கப் பதக்கம் பெற்ற ஒரே மாணவர் வீரமணி.
கடலூரில் ஓராண்டு மட்டுமே வழக்கறிஞர் தொழில் செய்த இவர் 1962-லிருந்து 1977 வரை விடுதலை நாளிதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 1978 முதல் இன்று வரை விடுதலை நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார்.
தனது பள்ளிப் பருவமான ஒன்பது வயதில் மேடையேறிப் பேசத் துவங்கிய கி. வீரமணி அவர்கள், தமிழகத்தின் மாநகரங்கள், நகரங்கள், பட்டிதொட்டிகள் என தமிழகத்தை நூற்றுக்கணக்கான முறை வலம் வந்திருக்கிறார். தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை இவர் பாதம் பதியாத இடம் இருக்காது என அறுதியிட்டுச் சொல்லலாம். மேடைப் பேச்சாற்றலின் வாயிலாக இலட்சக்கணக்கான மனங்களைக் கவர்ந்தவர் என்பதைவிட, மனங்களை மாற்றியவர், தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதைக்கு இழுத்தவர் என்பதே இவரது சாதனைச் சரிதமாகும்.
தந்தை பெரியாரின் சமுதாய விழிப்புணர்வுக்கான சிந்தனைகளை, சமூக விடுதலைக்கான விடியல் கருத்துகளை நூல் வடிவங்களாக்கி தெருவோரப் புத்தகச் சந்தைகளின் வாயிலாக மூடப் பழக்கவழக்கங்களில் முடங்கிக் கிடந்த மக்களை அறி வொளி பெறச் செய்த சிறப்பும் இவருக்கு உண்டு.
அவர் பெற்ற விருதுகளும், பட்டங்களும், பரிசுகளும் எண்ணிக்கையில் அடங்காதெனினும், குறிப்பிடத் தக்கவையாக அவர் நெஞ்சம் குளிர்வது தமிழ்நாடு அரசு வழங்கிய சமூகநீதிக் கான பெரியார் விருது - அமெரிக்க நாட்டில் உள்ள சர்வதேச அமைப்பு வழங்கிய சமூகநீதிக்கான வீரமணி விருது - 2003 இல் மியான்மரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் வழங்கப்பட்ட பேரறிவாளர் எனும் பட்டம். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் இலக்கியச் சேவைக்காக வழங்கிய கவுரவ முனைவர் பட்டம் - புதுடெல்லியில் உள்ள தேசிய முன்னேற்றத்திற்கான முன்னணி அமைப்பு வழங்கிய பாரத்ஜோதி விருது.
இவைதவிர, அய்யா பெரியார் வழிதொண்டினைப் பாராட்டும் வகையில் பல்வேறு நகரங்களில் எடைக்கு எடை வெள்ளியும் தங்கமும் வழங்கியிருக்கிறார்கள். இன்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தராக உள்ளார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளைக்கு ஆயுள் செயலாளர்.
அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இவரது சேவையை - இலக்கியப் பணியைப் பாராட்டி பல்வேறு பட்டங்களும் விருது களும் கொடுத்திருந்தாலும் கி. வீரமணி அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர்மல்க கரம்குவித்து மகிழ்வது -
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு மறைந்தார். அந்த முள்ளை அய்ந்தாம் முறையாகத் தமிழகத்தின் முதல்வர் பொறுப்புக்கு வந்த கலைஞர், அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் பெரியார் கொள்கைக்கு சட்டவடிவம் கொடுத்து தன் பேனா முனையால் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி எறிந்து, புரட்சிகரமான வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்தச் சாதனையைத்தான் சுயமரியாதை வீரர் வீரமணி அவர்கள்தம் வாழ்நாளில் கிடைத்தற்கரிய விருதாகக் கருதுகிறார்.
வீரமணி அவர்கள் 1958 இல் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இத்திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் ஏற் பாடு செய்து - அவரும் மணியம்மையார் அவர்களும் முன்னின்று நடத்தினர். இவரது துணைவியார் பெயர் வீ. மோகனா. குழந்தைச் செல்வங்களாக இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
தொலைநோக்குச் சிந்தனையாளர். அண்ணா சொன்னார் திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று. அத்தகைய இரட்டைக் குழல்களாக தலைவர் கலைஞர் அவர்களும், அவரது இளவலாகிய வீரமணி அவர்களும் தொண்டாற்றி வருகிறார்கள். வீரமணி அவர்களின் உழைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில்..... இவரது சமுதாயப் பணியினைப் பாராட்டி, முரசொலி அறக்கட்டளை, கலைஞர் விருது வழங்கிச் சிறப்பித்து, ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கி மகிழ்கிறது.
(தி.மு.க. பொருளாளர், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாசித்தார்).
--------------நன்றி:-"விடுதலை"1-4-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment