Search This Blog
2.4.09
மன அழுத்தம் பறந்தோடிப் போக வேண்டுமா?
மன அழுத்தம் (Stress) என்பது இன்றைய வாழ்க்கையில் மிகவும் சர்வ சாதாரணம் ஆகும்.
அதனைத் தவிர்ப்பதற்காக, "இசை கேளுங்கள்" அதன்மூலம் "மன அழுத்தத்தினை மாற்றுங்கள் அல்லது குறையுங்கள்" என்று பலருக்கும் இதய நோய் மருத்துவர்கள் உள்பட பல மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் கூறுவது உண்டு.
ஆனால், நேற்று வெளிவந்துள்ள "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளேட்டில், மன அழுத்தத்தை மாற்ற புத்தகங்களைப் படியுங்கள். அது வெகுவாக உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
நம்முடைய நரம்பு மண்டலம் முறுக்கேறி அழுத்தத்திற்கு ஆளாகும்போது, அதனை மென்மையாக்க, இரத்த அழுத்தம் சகஜமாக இருக்கும் நிலை அடைய புத்தகங் களைப் படிப்பதும் வெகுவாக உதவும் என்று லண்டனி லிருந்து வெளிவரும் "டெய்லி டெலிகிராஃப்" ஏடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளதாம்.
சுமார் 6 நிமிடங்கள் படித்தால் கூடப் போதும்; அது நமக்குச் சிறந்த இளைப்பாறுதல் வாய்ப்பைத் தருவதாக அமையும் (Best Relaxation) என்று அந்த லண்டன் நாளேடு குறிப்பிடுகிறது!
நாம் மிகுந்த கவனத்துடன் (ஈர்ப்புடன்) படிக்கத் தொடங்கி விட்டால் மற்றவை அறவே மறந்து, அதிலேயே ஆழ்ந்துவிடுகிறோம் அல்லது லயித்து விடுகிறோம்! அதன்மூலம் நமது தசைகளும், இதயமும் பெரிதும் டென்ஷன் குறைந்தவைகளாகி விடுகின்றனவாம்! ஆய்வாளர்கள் கண்டறிந்தவை இக்கருத்துகள்.
டாக்டர் டேவிட் லெவீஸ் என்பவர், "உங்களை ஒரு புத்தகத்திற்குள் புதைத்துக் கொள்ளுங்கள். அதைவிடச் சிறந்த (பொழுதுபோக்கு) இளைப்பாறுதல் வேறு கிடையவே கிடையாது என்று கூறியுள்ளதோடு, பொருளாதாரச் சூழலால் நாம் பெரிதும் நிம்மதியற்ற நிலையில், கவலையால் அரித்தெடுக்கும்போது இப்படி ஒரு புத்தக அருவியில் நுழைந்து அதன் பனித்துளிகள் போன்ற கருத்துகள் உங்கள் மூளையில் விழவிழ அது புத்துணர்ச்சி கொள்ளுமே" என்கிறார்! நாம் எல்லாம் ஒரு வகையான தனி நிலை (Escapism) தேடும்போது, இது எளிதில் நம்மால் செய்ய முடிந்த ஒன்று அல்லவா?
நீங்கள் எவ்வகையான புத்தகம் படிக்கவேண்டும் என்பதை மருத்துவரோ, மற்ற நண்பர்களோ கூறவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்! உங்களை ஈர்க்கக் கூடிய நூல் எதுவோ அதனை முழு ஈடுபாட்டுடனேயே படித்துக் கொண்டே அதில் மூழ்குங்கள். துரத்திய துன்பம், நெருக்கிய மன அழுத்தம் பறந்தோடிப் போகும்!
எனது பழக்கம் புத்தகங்களைப் படிக்கும்போதோ, எழுதும்போதோ, என்னைச் சுற்றி எது நடந்தாலும் எனக்குத் தெரியாது! அது புயலோ, பூகம்பமோ எதுவும் என்னை அப்பணியிலிருந்து மாற்றாது; திசை திருப்பாது - ஆழ்ந்துவிடும் பழக்கம் நீண்ட நாளாகவே உண்டு.
எந்த நிலையிலும் படிப்பது, எழுதுவது எனது மனக்கவலை மாற்றும் மாமருந்துகளிலே ஒன்றாகவே இருக்கும்!
வெளிநாட்டிற்குச் செல்லும்போது என்னை ஒரு புத்தக விற்பனைக் கடையிலோ, நூலகத்திலோ கொண்டு உள்ளே தள்ளிவிட்டால், உடன் வந்த உற்றார், உறவினரோ, உற்ற நண்பர்களோ - அவர்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்று திரும்பி எனது தோளில் கைவைத்து, வீட்டிற்குத் திரும்பலாமா என்றால் தான் எனக்கு மற்ற நினைவுகளே திரும்பும்!
அதுமட்டுமல்ல, பயணங்களிலோ, வீட்டிலோ நான் பல வகையான புத்தகங்களைப் படிப்பேன். பள்ளிக்கூடத்தில் தமிழ் வகுப்பு முடிந்தவுடன் ஆங்கில வகுப்பு (40 நிமிடம் ஒரு பீரியட்) தொடங்குவதுபோல, ஒரு நூல் படிக்கும்போது ஒரு மாற்றம் இருந்தால் பரவாயில்லை என்றால், உடனே அதை அதோடு நிறுத்திவிட்டு, வேறு ஒரு நூல் அது தமிழல்லாத ஆங்கிலத்திலோ இருந்தாலும் அதுபற்றிக் கவலைப்படாது படிப்பேன்.
தந்தை பெரியார் எழுத்துகளைப் படித்துக் கொண்டுள்ள போது, திடீரென்று மாறி காண்டேகருக்குள் புதைந்து போவேன்; அதிலிருந்து மீண்டு புதிதாக வந்த பொது அறிவு கூறும் நூல்களில் ஈடுபாடு கொண்டு படிப்பேன்.
எனவே, எனது மன அழுத்தம் அதன்மீது தீருகிறதோ இல்லையோ எனது தாகம் தீரும்; வேகம் மாறும், சோகம் குறையும், புத்தாக்கம் வந்து தானே கதவைத் தட்டும்.
பயணங்களில் நல்ல துணை; தூரத்தைக் குறைக்க உதவுவது நல்ல புத்தகங்களே!
எனவே, வாழ்நாள் முழுவதும் படியுங்கள்; படித்துக் கொண்டே இருங்கள். நீண்ட ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல மருந்து இது.
-------------------நன்றி: கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து.. "விடுதலை"2-4-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எனக்கு தெரிந்த வரையில் ’உண்மை’யாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திரு வீரமணி பேசியது இது மட்டும் தான்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்., தமிழ் ஓவியா!!!
வீரமணி எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளைப் படிக்கும் போது நம்மையும் அறியாமல் நமது பழக்க வழக்கங்களில் பலநல்ல மாற்றங்கள் நிகழும்.
கொள்கையில் மாறுபாடு உள்ளவர்கள் கூட வாழ்வியல் சிந்தனைகளை படிக்கலாம். படித்தால் விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு.
Post a Comment