Search This Blog

5.4.09

ஈழப்பிரச்சினையில் சகோதரியின்(ஜெ) நிலை என்ன? அண்ணனின்(இராம்தாஸ்) நிலை என்ன?


சேது சமுத்திரத் திட்டத்தை வராமல் தடுக்கும்
ஜெயலலிதாவை - கூட்டணியைத் தோற்கடிப்பீர்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை


தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமனைக் காட்டி முடக்கும் - அத்திட்டம் தேவையில்லை என்று கூறும் ஜெய லலிதாவையும் அவருக்குத் துணை போகும் கட்சிகளையும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பீர் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

நாடாளுமன்றத் தேர்தலும், ஈழத் தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று 4.4.2009 அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் கூட்டம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

கலி. பூங்குன்றன்

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்ற கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தேர்தலில் கூட்டணிகள் இன்னும்கூட சரியாக முடிவாகாத நிலையில் திராவிடர் கழகம் இன்றைக்குத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்த கார ணம் என்ன என்பதையும், அதை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது சிறப்புரையில் விளக்குவார் என்றும் கூறி உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

அடுத்து திராவிடர் கழக, தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மிகச் சிறப்பான ஆழமானதொரு விளக்கவுரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய பகுதி வருமாறு:

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யார் யார் எந்த அணியிலே இருக்கிறார்கள் என்று அகில இந்திய அளவிலே கூட இன்னமும் சிலர் குழப்பமான நிலையில் இருந்தாலும் கூட, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சிகளின் அணிகளை அதாவது திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து நாங்கள் இன்றைக்குத் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கின்ற நிலையிலே பொது மக்களுக்கு பல கருத்துகளை தெளி வுபடுத்த வேண்டியது நமது கடமை என்று கருதி இந்த சிறப்புக் கூட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

அரசியல் கட்சிகளின் கடமையை விட....

அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற கடமைகளைவிட ஒரு படிமேலே சென்று இன நலத்தைக் கருதி, சமுதாய நலனைக் கருதி திராவிடர் கழகம் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி என்பதைப் பற்றி கவலை. ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. நம் மக்களுடைய வாழ்வுரிமை எப்படி சிறப்பாக அமைய வேண்டும்? நம்முடைய இனத்தின் எதிர்காலம் முக்கியம் என்பதைக் கருதி அன்று முதல் இன்று வரை தேர்தல் நேரத்தில் அக்கறை எடுத் துக் கொண்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அடையாளம் காட்டி தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்து பிரச்சாரம் செய்து வருகின்ற இயக்கம் திராவிடர் கழகமாகும்
.

தேவாசுரப் போராட்டம்


தந்தை பெரியார் சொன்னார். இந்த நாட்டிலே நடைபெறுவது வெறும் அரசியல் போராட்டம் அல்ல. அன்று முதல் இன்று வரை இந்த நாட்டிலே தேவாசுரப் போராட்டம் நடந்து கொண்டு வருகின்றது. இனப் போராட்டம்தான் நடந்து கொண்டு வருகின்றது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் அதன் அடி நீரோட்டம் இதுதான் என்பதை விளக்கிச் சொன்னார்கள்.

சென்ற அய்ந்து ஆண்டு காலத்திற்கு முன்னாலே நடைபெற்ற தேர்தலில்கூட திராவிடர் கழகம் ஒரு முக்கியமான கருத்தை மக்கள் முன்னாலே எடுத்து வைத்தது.

யார் வெற்றி பெறக்கூடாது?

நம்மைப் பொறுத்த வரையிலே யார் வெற்றி பெற வேண்டும் என் பதைவிட, யார் வெற்றி பெறக்கூடாது என்பது தான் மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திச் சொன்னோம். சென்ற தேர்தலில் மதவாதக் கட்சியான பி.ஜே.பி. வெற்றி பெற்றது. அவர்கள் வெற்றி பெற்றதும் இந்த இனத் திற்கு நாட்டிற்கு செய்த கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதன் பிறகு நடை பெற்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் கலைஞர் அவர்கள் வகுத்த அரசியல் வியூகத்தினால் வெற்றி பெற்று இந்தியாவில் மத வெறி ஆட்சி வராமல் தடுத்து இந்தியாவிற்கு வரவிருந்த பெரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தியவர் நமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள். இந்தியாவில் பி.ஜே.பி. ஆட்சி மட்டும் அமைந் திருக்குமேயானால் இந்தியாவே இருந்திருக்காது. காணாமல் போயிருக்கும். பஞ்சாப்பைச் சார்ந்த குஷ்வந்த் சிங் அவர்கள் பத்திரிகையாளர்களால் எழுத்தாளர்களால் மதிக்கப்படக் கூடியவர் அவர் கடவுள், மதங் களுக்கு அப்பாற்பட்ட வர். 85 வயதான அவர் ஒரு நூலை எழுதியிருக் கின்றார்.

அந்த நூலின் பெயர் (The end of india) என்பது. அந்த நூலிலே அவர் விளக்கிச் சொல்லி யிருக்கின்றார். இந்த நாட்டிலே பி.ஜே.பி. ஒரு முறை புகுந்து ஆட்சிக்கு வந்ததினுடைய விளைவு இந்த நாட்டை காவி மயமாக்க முயற்சி எடுத்தார்கள். குஜராத்திலே சிறுபான்மையினரை வாழ விடாமல் கொன்றார்கள். வரலாற்றைப் புரட்டிப் போட்டார்கள். பன்மதங்கள் கொண்ட இந்த நாட்டை ஒரு மதம் இந்து மதம் தான் ஆள வேண்டும் என்று காரியம் செய்தார்கள்.

பன்மொழிகள் கொண்ட இந்த நாட்டிலே சமஸ்கிருதம்தான் ஆள வேண்டும் என்பதைத் திணித்தார்கள். மற்ற கலாச்சாரங்கள் இந்த நாட்டிலே இருக் கக் கூடாது என்று சொன்னார்கள். இந்துக் கலாச்சாரம்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று சொன்னார்கள். திராவிடர்களின் கலாச்சாரமான எருதைக் கணினி மூலம் குதிரையாக்கி ஆரியக் கலாச்சாரம்தான் இந்த நாட் டின் கலாச்சாரம் என்று வரலாற்றைப் புரட்டிப் போட்டார்கள்.


எனவே அத்தகைய மதவெறி பிடித்த பா.ஜ.க. மத்தியில் வராமல் தடுத்தது தமிழ் மண் - பெரியார் மண்!

பெரியாருடைய குருகுலத்திலே தயாராகி தன்னை அசுரன் என்று சொல்லிக் கொள்வதிலே நான் பெருமை அடைகிறேன். நான் இராவணனுடைய பேரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று சொன்ன கலைஞர் அவர்கள்தான் - 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பி.ஜே.பி. இந்த நாட்டில் ஆட்சிக்கு வராமல் தடுத்த பெருமைக் குரியவர் ஆவார்

ஒப்புக் கொண்டார் அத்வானி

அத்வானி கூட ஒப்புக் கொண்டு பதில் சொன்னார். தமிழ்நாட்டில் நாங்கள் 40 இடங்களில் தோற்றதால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்று அவரே சொன்னார்.
மூன்று ஆண்டுகளில் அடுத்த தேர்தல் வரப்போகிறது. அடுத்து தேர்தல் வரப்போகிறது என்று தனது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்தி, இப்படிச் சொல்லிச் சொல்லி கனவு கண்டார் ஜெயலலிதா. அவருடையகனவு நிறைவேறவில்லை. கலைந்து போனது.

திராவிடர் கழகத்தின் தீர்மானம்

இன்றைக்கு பிரதமர் மன்மோகன்சிங் கூட்டணி ஆட்சியை நடத்தி அய்ந்தாண்டுகளை முடித்து விட்டார். தனக்கு பிரதமர் பதவியே வேண்டாம் என்று சொல்லி தியாகம் செய்த சோனியா காந்தி அவர்கள் இந்திய வரலாற்றிலேயே கோடிட்டுக் காட்டப்பட வேண்டியவர்.
நிலையான ஆட்சியைத் தந்து நல்ல பல சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். தி.மு.க.கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற மிகத் தெளிவான தீர்மானத்தை சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுவிலே 31-3-2009 அன்று நிறைவேற்றியிருக்கிறோம். (தீர்மானத்தை முழுவதுமாக தமிழர் தலைவர் படித் தார்.). திராவிடர் கழகப் பணி என்பது சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ். பின்னாலே வருகின்ற படைக்கு பாதை அமைத்து பாலம் அமைத்துக் கொடுக்கின்ற முன்னணிப் பணியைச் செய்வது திராவிடர் கழகத்தின் பணி.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாது? யார்வெற்றி பெறவேண்டும்? என்பது தான் முக்கியப் பிரச்சினை. தமிழகத்திலே இருந்து கொடுத்த அழுத்தம் - பிரச்சாரத்தால் மத்தியஅரசு கல்வி நிறு வனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இப்பொழுதுதான் முதல் முறையாக கதவு திறந்துள்ளது. இன்னமும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் கடனை கஞைர் அவர்கள் ரத்து செய்தார். அதைப் பார்த்த மத்திய அரசு இந்தியா முழு வதும் விவசாயிகள் பெற்ற கடனான 72,000 கோடி ரூபாயை ரத்து செய்தது.

கலைஞரின் திட்டத்தை பி.ஜே.பி. பின்பற்றுகிறது

இப்பொழுது பி.ஜே.பி. கூட தேர்தல் அறிக்கையில் கலைஞர் அரசின் சாதனைகளைப் பின் பற்றி - நாங்களும் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுப்போம் என்று அறிவித்திருக்கின்றனர்.

எனவே கலைஞர் அரசின் சாதனைகள் மக்கள் நலத்திட்டங்கள் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. நல்ல செய்திகள் இப்படி தமிழ்நாட்டிலே சென்று விடக்கூடாது என்று சொல்லி சிலர் ஆட்களைத் தயார் பண்ணி கலவரத்தை விளைவித்து தடுத்திட ஆட்களை அனுப்புகிறார்கள். நாங்கள் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாதவர்கள். எங்களுடைய கருத்து இன்னது - தவறு என்று உமக்கு தெளிவிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் கூட்டம் போட்டு பதில் சொல்!

இந்த மாதிரி சல சலப்புகளை எல்லாம் காட்டி எங்களுடைய பிரச்சாரத்தை எவராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இதெல்லாம் நமக்கு விரோதமானவர்கள் - இந்தக் கொள்கைக்கு விரோதமானவர்கள் நம்முடைய பிரச்சாரத்தைத் தடுக்க ஏற்பாடு செய்து ஆட்களை அனுப்பியிருக்கிறார்கள். இங்கே நான் ஆற்று கின்ற உரை தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல. இது உலக நாடுகள் வரை செல்லும், பரவும்.(பலத்த கைதட்டல்)

உண்மைகள் வெளியே போகக்கூடாது - உண்மைகள் மக்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஜெயலலிதா செய்தது என்ன?

ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தாரே, டெல்லிக்குச் சென்று, மத்திய அமைச் சர்களைச் சந்தித்து தமிழ் நாட்டுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று என்றைக்காவது கேட்டதுண்டா? அதனால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் தள்ளிப் போயின. தந்தை பெரியார், அண்ணா, காமராசர் விரும்பிய தமிழர்களின் 150 ஆண்டுக்கால கன வான சேது சமுத்திரத் திட்டத்தை ஜெயலலிதா அவர்கள் இரண்டு முறை தேர்தலில் அவரது அறிக்கையில் ஆதரித்துச் சொல்லிவிட்டு, சேது சமுத்திரத் திட்டம் முடிவடைய இன்னும் 25 கி.மீ. தூரப்பணி பாக்கியிருக்கையில் ராமர் பாலத்தை இடிக்கலாமா? இராமர் பாலத்தை இடிக்கிறார்களே என்று சொல்லி உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் சேதுக் கால்வாய்த் திட்டத்தை தடுத்தார். உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இன்னும் வரவில்லை.

பா.ஜ.க. கூட தங்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேறு பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்லி யிருக்கின்றார்கள். இலங்கைக்காரனுக்குத் தேவையான - இலங்கைக்காரனுடைய குரலை அப்படியே ஒலிக்கின்ற அதிமுகவை, ஜெயலலிதாவை இது ஒன்றுக்காகவே நாம் தோற்கடிக்க வேண்டாமா? (பலத்த கைதட்டல்).

அதிமுக - மதிமுக புறக்கணிப்பு

24.10.2008 சென்னையில் ஈழத் தமிழர்களுக்காக கொட்டும் மழையில் நடைபெற்ற மனித சங்கிலி அறப்போரில் கலந்து கொள்ளாதவர் ஜெயலலிதா.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக சென்னை கோட்டையிலே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். அந்த கூட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ளவில்லை. மதிமுக வும் கலந்து கொள்ள வில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக 4.12.2008 அன்று தமிழகத்தைச் சார்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கச் சென்ற பொழுது அந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தவர் ஜெயலலிதா.
இலங்கையில் போர் நிறுத்தம் உடனே செய்யப்பட வேண்டு மென்று 12.11.2008 சட்ட மன்றத்தில் முதல்வர் கலைஞர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினாரே. 27.10.2008 அன்று சென்னைக்கு வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க உறுதிமொழி கொடுத்தாரே - அதன் படி மருந்து, உணவுப் பொருட் களை கப்பல் மூலமாக அனுப்பி மத்திய அரசு மூலமாக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இலங்கையில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே இதை இல்லை என்று மறுக்க முடியுமா?

அது மட்டுமல்ல 50 கோடி ரூபாய் நிதி திரட்டியும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் கலைஞர் கொடுத்தாரே ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து இலங்கை பிரச்சினையில் நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம். அரசியல் கண்ணோட்டம் வேண்டாம். நாம் எல்லோரும் ஒரணியில் இருப்பதை ஒற்றுமையாக இருப்பதைக் காட்ட வேண்டும் என்று பெருந்தன்மையுடன் சொன்னவர் கலைஞர் அல்லவா?


எனவே மே 13-ம் தேதி தேர்தல் வரப் போகிறது. தமிழின உணர்வு உள்ளவர்கள் எல்லோரும் ஒரே அணி யில் நிற்க வேண்டும். மதவாத சக்திகள் இனிமேல் ஆட்சிக்கு வரக் கூடாது.
பிற்போக்கு சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. மத்தியிலே ஒரு நல்ல தெளிவான ஆட்சி உருவாக வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி இந் நாட்டிலே உருவாக வேண்டும்.
திமுக கூட்டணியை 40 தொகுதியில் வெற்றி பெறச்செய்வீர்

அனைவர்க்கும் அனைத்தும் என்ற சமூகநீதி கொடி இறக்கப்படக் கூடாது. நிச்சயமாக இவைகளை எல்லாம் காப்பாற்றக்கூடிய ஒரே கூட்டணி கலைஞர் தலைமையிலான திமுக காங்கிரஸ் கூட்டணி.

எனவே, இந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணியை 40 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வது நமது கடமை. ஒரு நாள் நாடகம், ஒரு நாள் கூத்து இவைகளைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக் கூடாது. மக்களை ஏமாற விட மாட்டோம். அந்தப் பணியை தொடர்ந்து திராவிடர் கழகம் செய்யும். இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.




ஈழப்பிரச்சினையில் சகோதரியின் நிலை என்ன?
அண்ணனின் நிலை என்ன? தமிழர் தலைவர் கேள்வி


எம்.ஜி.ஆரின் 92-ஆம் பிறந்தநாளை யொட்டி, பத்திரிகையாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் என்ன சொன்னார்?

இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. எந்தப் போரின் போதும் அப்பாவி மக்கள் சொல்லப்படுவது போலத்தான் இலங்கையில் தற்போது நடக்கிறது என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக கூறியவர் அந்த இலங்கை ராணுவத்தை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் இந்த அம்மையார் நடத் தினாரே. இது நாடகமா? அது நாடகமா?

இன்றைக்கு அந்த அம்மையாரிடம் கூட்டணி சேர்ந்துள்ள சகோதரியின் அண்ணன் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

இதற்கு முன்பே இன்னமும் வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கக் கூடிய இன்னொரு சகோதரர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

(4.4.2009 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையிலிருந்து)


கலைஞர் இல்லை என்றால்
தமிழீழம் வார்த்தையை உச்சரிக்க முடியுமா?


தமிழ் ஈழம் என்ற ஒரு வார்த்தையை உச்சரிப்பதற்கு கலைஞர் அவர்களைத் தவிர வேறு யாராவது ஒருவரைச் சொல்ல முடியுமா? கலைஞர் அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்காக நாம் குரல் எழுப்ப முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

குரல் எழுப்பியிருக்க முடியாது - மாறாக நமது குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கும்.

(4.4.2009 - சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையிலிருந்து)

-------------------நன்றி:- "விடுதலை" 5-4-2009

4 comments:

ttpian said...

அடுத்தவனை கேட்பது இருக்கட்டும்....வீரமணி?.. சொக்கத்தஙம் சோநியாவுக்கும்,தூயவர் பிரனப்புக்கும் காவடி தூக்குவதா?
வீரமணி படித்தது இடாலியிலா?

Sathiyanarayanan said...

வீராமணியின் நேலை என்ன?
திருமாவின் நிலை என்ன?

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக வீரமணி அவர்கள் கீழ் கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்.

"
24.10.2008 சென்னையில் ஈழத் தமிழர்களுக்காக கொட்டும் மழையில் நடைபெற்ற மனித சங்கிலி அறப்போரில் கலந்து கொள்ளாதவர் ஜெயலலிதா.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக சென்னை கோட்டையிலே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். அந்த கூட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ளவில்லை. மதிமுக வும் கலந்து கொள்ள வில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக 4.12.2008 அன்று தமிழகத்தைச் சார்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கச் சென்ற பொழுது அந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தவர் ஜெயலலிதா.
இலங்கையில் போர் நிறுத்தம் உடனே செய்யப்பட வேண்டு மென்று 12.11.2008 சட்ட மன்றத்தில் முதல்வர் கலைஞர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினாரே. 27.10.2008 அன்று சென்னைக்கு வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க உறுதிமொழி கொடுத்தாரே - அதன் படி மருந்து, உணவுப் பொருட் களை கப்பல் மூலமாக அனுப்பி மத்திய அரசு மூலமாக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இலங்கையில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே இதை இல்லை என்று மறுக்க முடியுமா?

அது மட்டுமல்ல 50 கோடி ரூபாய் நிதி திரட்டியும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் கலைஞர் கொடுத்தாரே ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து இலங்கை பிரச்சினையில் நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம். அரசியல் கண்ணோட்டம் வேண்டாம். நாம் எல்லோரும் ஒரணியில் இருப்பதை ஒற்றுமையாக இருப்பதைக் காட்ட வேண்டும் என்று பெருந்தன்மையுடன் சொன்னவர் கலைஞர் அல்லவா?

எனவே மே 13-ம் தேதி தேர்தல் வரப் போகிறது. தமிழின உணர்வு உள்ளவர்கள் எல்லோரும் ஒரே அணி யில் நிற்க வேண்டும். மதவாத சக்திகள் இனிமேல் ஆட்சிக்கு வரக் கூடாது.
பிற்போக்கு சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. மத்தியிலே ஒரு நல்ல தெளிவான ஆட்சி உருவாக வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி இந் நாட்டிலே உருவாக வேண்டும்.
திமுக கூட்டணியை 40 தொகுதியில் வெற்றி பெறச்செய்வீர்

அனைவர்க்கும் அனைத்தும் என்ற சமூகநீதி கொடி இறக்கப்படக் கூடாது. நிச்சயமாக இவைகளை எல்லாம் காப்பாற்றக்கூடிய ஒரே கூட்டணி கலைஞர் தலைமையிலான திமுக காங்கிரஸ் கூட்டணி.

எனவே, இந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணியை 40 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வது நமது கடமை. ஒரு நாள் நாடகம், ஒரு நாள் கூத்து இவைகளைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக் கூடாது. மக்களை ஏமாற விட மாட்டோம். அந்தப் பணியை தொடர்ந்து திராவிடர் கழகம் செய்யும்."

இந்த விளக்கம் சரி அல்லது தவறு என்று விமர்சிக்கலாம் அது உங்கள் உரிமை. அது பற்றி எதுவுமே கூறாமால் கொச்சைப்படுத்துவது சரியல்ல ttpian .

பிளாட்டினம் said...

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்
please help ussss